இந்தச் சமுதாய கட்டமைப்பில் திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் வேலைக்குச் செல்வது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, ஒரு பெண்ணின் அன்றாட வாழ்வு, அந்தக் குழந்தையையும் குடும்பத்தையும் சுற்றியே சிந்திக்கும். இதைத் தாண்டி, வேலைக்குச் செல்லும் பெண்கள் வீடு மற்றும் வேலை என இரண்டிலும் பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இந்தச் சவாலை சமாளிப்பது எப்படி?
* மிகவும் கடினமாக இருக்காதீர்கள்!
நம் எல்லோருக்குமே குடும்பத்தையும் வேலையையும் சரிசமமாக சமாளிக்க விருப்பம்தான். ஆனால், சில சமயம் வேலையில் இருக்கும் டென்ஷனை வீட்டில் காட்டிவிடுவோம். மிகவும் கடுமையாக நடத்துவோம். சில நேரங்களில், குடும்ப அழுத்தங்களால் அலுவலக வேலையை முடிக்க இயலாமல் திணறுவோம். இதுபோன்ற சமயங்களில், சில நொடிகள் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தின் மகிழ்ச்சி உங்கள் கையில் இருப்பதை உணருங்கள்.
* நோ சொல்லப் பழகுங்கள்!
நம்மில் பலருக்கும் ’நோ’ சொல்லும் பழக்கம் இருக்காது. இதனால், மற்றவர்கள் சொல்லும் எல்லா வேலைகளுக்கும் ’சரி சரி’ என்று தலையாட்டிவிட்டு, செய்ய முடியாமல் திகைப்போம். பணி தொடர்பாக ஒரே சமயத்தில் நான்கு பேரை சந்திக்கும் சூழலை ஏற்படுத்திக்கொள்வார்கள். அதேபோல, குடும்பத்துடன் இருக்கும்போதும் அலுவலக பணித் தொடர்பாகவே பேசிக்கொண்டு இருப்பார்கள். இப்படியே போனால், உங்களுக்கே சலிப்பு வந்துவிடும். எனவே, தேவையான சமயங்களில், நாகரிகமாக ‘நோ’ சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.
* அனைத்தையும் பட்டியலிடாதீர்கள்!
நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகள் தவிர மற்ற பணிகளைப் பட்டியலிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். இத்தகைய செயல், திட்டமிடத் தெரியாமல் நேரத்துக்குப் பின்னால், ஓடிக்கொண்டே இருப்பது போன்ற உணர்வைத் தரும். முக்கியமான பணிகளை உங்கள் டைரியிலோ, அலைபேசியிலோ குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
*ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது எதையும் செய்யாதீர்கள்!
ஒரு நாள் முழுக்க வேலை இருப்பது போல திட்டமிடாதீர்கள். ஏனெனில், எதிர்பாராமல், சிறு சங்கடங்கள் அல்லது திடீர் வேலைகள் வரலாம். குழந்தைகளுக்கு உடல்நலம் சரி இல்லாமல் போகலாம் அல்லது அன்றைக்கு வீட்டுப் பணியாளர் வரமுடியாமல் போகலாம். இத்தகைய சமயங்களை சமாளிக்க, குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரம் எந்தத் திட்டமும் இல்லாமல் இருங்கள். இந்த நேரம் ஒரு புத்தகம் படிக்கவோ அல்லது சற்று ஓய்வெடுக்கவோ உதவும்.













