பட்டிருப்பு வுளு டயமன் விளையாட்டுக் கழகத்தின் 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற 3நாள் நிகழ்வுகள்-வீடியோ

   (ரவிப்ரியா)          
பட்டிருப்பு மண்ணின் முடி சூடா விளையாட்டு மன்னனாகத் திகளும் வுளு டயமன் விளையாட்டுக் கழகம் கடந்த சனி. ஞாயிறு தினங்களில் விளையாட்டுக்களால் வியக்க வைத்து, திங்களன்று இன்னிசையாலும் இதயங்களில் இடம் பிடித்தது. தனது 31வது ஆண்டு நிறைவை அமர்க்களப்படுத்தியது.
சனியன்று துவிச்சக்கர ஓட்டப் போட்டியை பொதுமக்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக நடாத்தி முடித்து விளையாட்டு விழாவின் முன்னுரையை வெளிப்படுத்தியது.

ஞாயிறன்று காலை மரதன் ஓட்டமும், தொடர்ந்து பட்டிருப்பு வாவியில் தோணி ஓட்டமும் மக்களின் ஆனந்த ஆரவாரங்களுடன் அரங்கேற்றியது.

அன்றைய பிற்பகல் நிகழ்வு அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரம் 2.00 மணியாக இருந்தபோதும் தற்போதய உஸ்ண காலநிலைகாரணமாக. 3.30 மணிக்கே அதிதிகள் வரவேற்கப்பட்டு மைதானம் நுழைந்தனர்.

அதிதிகளை அழைத்து வந்த விதம், தனியொரு விழாவாகவே இருந்தது. எமது பாரம்பரிய ஆடை அணிகளுடன் அணிநடை பயின்று வந்த  ஆரணங்குகளும் ஆடவர்களும் கீழைத்தேய வாத்தியங்களை இனிமையாக இசைக்க அருகில் இருந்த விநாகப் பெருமானும் எழுந்தருளி ரசிப்பது போன்ற பிரமை.

விழாக் கோலம் பூண்டிருந்த மைதானத்தை கழக அங்கத்தவர்கள் இருபாலாரும் சீருடையால் தங்களை இனம்காட்டி கட்டுக்கோப்பாக அணிவகுத்து நிற்க பிரதம அதிதி கழகத்தால் இரும்புச் சீமாட்டி என வர்ணிக்கப்பட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ்; தேசிய கொடியை பாரம்பரிய மங்கல வாத்தியங்கள் முழங்க ஏற்றி வைத்தார். தொடர்ந்து தன்னடக்கம் மிக்க கழகத்தின் தலைவர் கி.குகதாசன் கழக கொடியை ஏற்றி வைத்தார்.

இந் நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் சட்டத்தரணி மு.கணேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்.  களுவாஞ்சிக்குடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி, களுவாஞ்சிக்குடி பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி அபூபக்கர், வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன். மற்றும் தேசகீர்த்தி சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி. தேசபந்து மு.செல்வராசா உட்பட முக்கிய பல பிரமுகர்களும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக செவ்வனே நடைபெற்றது.. குறிப்பாக முட்டியுடைத்தல், வழுக்குமரம் ஏறுதல். தலையணை சண்டை. சாக்கோட்டம். என்பன விளையாட்டு  ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. அத்துடன் ஆண்,பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக நடைபெற்ற கயிறிழுத்தல் போட்டி சவால் மிக்கதாக அமைந்தது. மேலும் ஆண்,பெண் இருபாலாரும் கலந்து கொண்ட மோட்டார் சக்கிள் சுலோ றேஸ் போட்டியில் பெண் போட்டியாளர் முதலாம் இடத்தைப் பெற்று பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்துவிட்டார்.

வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
கழக அங்கத்தவர்களின் கட்டுக் கோப்பும். மிகுந்த கட்டுப்பாடுடன் பார்வையாளர்களாக பெருமளவில் கலந்து கொண்ட பிரதேச மக்களும். போட்டி விதிகளை மீறாமல் கலந்து கொண்ட விளையாட்டுவீரர்களும். அறிவிப்பாளர்களும் இந்த மண்ணின் பெருமைக்குரியவர்கள்.