இடைநிறுத்தப்பட்ட 350 சிறைக்காவலர் நியமனங்களை மீள வழங்குமாறு கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சிறைச்சாலைகளுக்கென புதிதாக நியமிக்கப்படவிருந்த 350 சிறைக்காவலர்களுக்கான நியமனத்தை சிறைச்சாலைகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் அவர்கள்
சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பலதடவைகள் சம்பந்தப்பட்ட அமைச்சரவையில் பல கலந்துரையாடல்கள் பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது அதேபோன்று ஒரு கலந்துரையாடலுக்காக நேற்று 24ம் திகதியும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சிங்கள, தமிழ் இளைஞர் யுவதிகள் அமைச்சரை சந்தித்து தமது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நியமனங்கள் சம்பந்தமாக பேசுவதற்கு கொழும்பு சென்றிருந்தனர்.


மேற்படி பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் அமைச்சரின் காரியாலயத்திற்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களுடன் கலந்துரையாடிய பின் அமைச்சரைச் சந்திக்க காத்திருந்த வேளையில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் எவ்விதமான அறிவித்தலுமின்றி அங்கு குழுமியிருந்த பாதிக்கப்பட்டவர்களை பாராமுகமாக அமைச்சின் காரியாலயத்தை விட்டு வெளியே சென்றார்.

அதனைத்தொடர்ந்து பல மணிநேரங்களின் பின்னர் அமைச்சில் கலந்துரையாடல் ஏற்பாடுசெய்யப்பட்டது அக் கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவு எட்டப்படாததால் நிறுத்திவைக்கப்பட்ட சிறைக்காவலர்களால் சிறைச்சாலைகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்களுக்கான அமைச்சின் காரியாலயம் முன்பாக நேற்று (24) பிற்பகல் சுமார் 3 மணியளவில்  கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.