அரசாங்கத்திடம் இல்லாதபட்சத்தில் பிறிதொரு இடத்தில் கல்வியைத் தேடிச் செல்வதற்கு மாணவர்களுக்குள்ள உரிமையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்

நாட்டின் உயர் கல்வி தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் தனியார் மற்றும் அரச சார்பற்ற துறைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ள அதேநேரம் தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்காக தர நிர்ணய அதிகாரசபையொன்று நிறுவப்படுமென்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.

தர நிர்ணய அதிகாரசபை சுயமாக இயங்குமென சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் தனியார் நிறுவனங்களின் தரத்தை ஆராய்வதற்கும் முறைப்படி இயங்காத நிறுவனங்களை இழுத்து மூடுவதற்குமான அதிகாரம் அதற்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு   அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இது பற்றி மேலும் தெரிவித்த அவர்:

இதற்கான நகல் சட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற அனுமதிக்காக வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும். சைற்றம் கல்லூரியின் தரம் மற்றும் தனியார் மருத்துவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து அரசாங்கம் தனியார் உயர் கல்வி தொடர்பிலான தனது கொள்கையை மேலும் உறுதி செய்வதற்கு எத்தனித்துள்ளது.

கொள்கை மட்டத்தில் எவ்வாறான தீர்மானத்தை முன்னெடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் ஆரம்பத்தில் பாரிய குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்தபோதும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து பத்திரிகைகளிலும் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இவ்விடயத்தில் அனைவருக்கும் தெளிவு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

டாக்டர்.நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை அரசாங்க வைத்தியசாலையாக உள்வாங்குவதன் மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் அதில் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோன்று அனைத்து சிபாரிசுகளும் நடைமுறைப்படுத்தும் வரை சைற்றம் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சைற்றம் கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவர்களை முறையான வைத்தியர்களாக தெரிவு செய்வதற்கென அரசாங்க மருத்துவக் கவுன்ஸிலால் விசேட பரீட்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு டாக்டர். நெவில் பெர்ணான்டோ எவ்வித எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை. வைத்தியசாலையை அரசாங்கத்துக்கு இலவசமாக வழங்குவதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ன, "தகுதிவாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான கல்வியை வழங்கக்கூடிய தகுதி அரசாங்கத்திடம் இல்லாதபட்சத்தில் பிறிதொரு இடத்தில் கல்வியைத் தேடிச் செல்வதற்கு மாணவர்களுக்குள்ள உரிமையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்" எனக் கூறினார்.

அத்துடன் தனியார் பல்கலைக்கழகங்கள் பங்குச் சந்தைகளுடன் இணைக்கப்படுவதற்கு முன்னதாக அவற்றின் தரம் மற்றும் கொள்கை உள்ளடங்கலான புதிய சட்டம் வரையப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானும் கலந்து கொண்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு விசனம் தெரிவித்தார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இதனை சாக்காகக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்கப் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.