திருக்கோவில் மீள் குடியேற்ற பிரதேச கிராம மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்


(துறையூர் தாஸன்)


திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமங்களான தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு, சாகாமம், ஸ்ரீவள்ளிபுரம், நேருபுரம் ஆகிய கிராமங்களிலுள்ள மக்கள் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாச தாக்குதல்களினால் உயிரிழப்புக்களையும் உடமைகளையும் இழந்து பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்று முன் தினம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளுடைய தாயொருவர் இறந்ததையிட்டு இப்பிரதேச வாழ் மக்கள் திருக்கோவில் பிரதேச செயலக நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று( 30)முன்னெடுத்திருந்தனர்.

அவ்விடத்துக்கு வருகை தந்த திருக்கோவில் பொலிஸ் அதிகாரிகள் மக்களை கலையுமாறு கட்டளையிட்டதால் ,மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே சிறு முறுகல் நிலை ஏற்பட்டது.


பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மக்களிடம் கலந்துரையாடி அவ்விடத்திலிருந்து அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரச அதிபரின் கட்டளைப்படி, மூன்று மாதங்களுக்குள் முறையான யானை வேலியினை மாவட்ட செயலகத்தினர் அமைத்துத் தருவதாக  அரச அதிபரின் அனுமதியுடன் எழுத்து மூல உத்தரவை பிரதேச செயலாளர் மக்களிடம் கையளித்திருந்தார்.

அதனையடுத்து பிரதேச வாழ் மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.