மட்டக்களப்பில் காவியா நிறுவனத்தினால் ஒன்பதாவது வருட உள்ளூர் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திச் சந்தை திறந்துவைப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் மாபெரும் கண்காட்சியும், விற்பனையும் ஒன்பதாவது வருடமாக மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டப வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டு புதன்கிழமை 24ஆம் திகதி மாலை சுவீடன் நாட்டின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் அன்னா உக்லா அவர்களால் வீ எபெக்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் திறந்துவைக்கப்பட்டது.

24ஆம், 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெறும் இவ் உற்பத்தி சந்தையின் ஆரம்ப நிகழ்வின்போது உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், வீ எபெக்ட் நிறுவனத்தின் இலங்கை திட்ட இணைப்பாளர் ரி.மையூரன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் திட்ட இணைப்பாளர் கே.பிருந்தன், கிராம அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் எஸ்.தர்மதாச, காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரதி அஜித்குமார் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இக்கண்காட்சியில் மட்டக்களப்பிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சியில் அதிகளவில் கணவனை இழந்த பெண்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்.அவர்களுக்கு சந்தை வாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தமது உற்பத்தியினை மேலும் வினைத்திறன்மிக்கதாக கொண்டுசெல்லும் வகையிலும் இந்த கண்காட்சி  தொடர்ச்சியாக வருடந்தோறும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.