காட்டு யானைகளின் அட்டகாசம்; மின்சாரம் இன்றி கச்சக்கொடி சுவாமிமலை கிராம மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் காடுகள் மற்றும் மலைசார்ந்த சூழலில் வாழ்ந்துவரும் கச்சக்கொடிச் சுவாமிமலைக் கிராம மக்கள் தமது குறைகளை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா சுவாமிமலைக் கிராமத்திற்கு சென்ற போதே, அப்பகுதி மக்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

63 குடும்பங்கள் வாழ்ந்துவரும் கச்சக்கொடி சுவாமிமலைக் கிராமத்தில், நேர்ப் திட்டத்தினால் 49 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

எனினும், அந்த வீடுகளும் கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது காட்டு யானைகளினாலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

1990 ஆம் அண்டு காலத்தில் 300 குடும்பங்கள் வாழ்ந்த தமது கிராமத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பலர் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 63 குடும்பங்களுடன் வாழ்ந்துவரும் தமது கிராமத்தில் குடிநீர் வசதி, முறையான வீதிப் போக்குவரத்துக்கள், ஈயாக்காலி வீதி மற்றும் வங்களாவடி வீதி ஆகியவற்றுக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தைச்சூழ அடர்ந்த காடுகள் உள்ளதனால், தினமும் காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும், அதிகரித்த வண்ணமுள்ளன.

எனவே, மிகவிரைவில் தமது கிராமத்தில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு அக்கிராம மக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாகாணசபை உறுப்பினர், கொக்கட்டிச்சோலை பிரதேச சபையுடன் தொடர்புகொண்டு, குறித்த கிராமத்தின் பிராதான வீதியைச் செப்பனிடுமாறு பணித்துள்ளார்.

அத்துடன், மின்சாரம் இல்லாத இரண்டு வீதிகளுக்குரிய மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு களுவாஞ்சிகுடி பிரதே மின்சாரசபை அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இக்கிராம மக்களின் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அவற்றை முடிந்தவரை பூர்த்திசெய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மக்களிடம் உறுதியளித்துள்ளார்.