கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்”: ஞானசார தேரர்

கிழக்கு மாகாணத்தில் தனியான ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்க முயற்சிகள் நடை பெறுவதாகவும் சிங்களவர்களுக்கு பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை என்றும் முஸ்லிம்களுக்கு சிறு பிரச்சினை என்றாலும், இந்த ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுவதாகவும், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக  அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் ஆசாத்சாலி ஆகியோர் இணைந்த, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று   வெள்ளிக்கிழமை  ஞானசார தேரர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கெதிராக, ஞானசாரதேரர் இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டார்.

இதனையடுத்து,ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, ஞானசார தேரர் இவ்வாறு விடயத்தினை கூறினார்.

மேலும் அவர் ”இது அரபு நாடு இல்லையென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இந்த நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியின் தயவைப் பெற்றுக் கொள்கிறார்கள். வில்பத்தில் காணி அபகரிப்பாளர்களையும், போதைப் பொருள் விற்பனையாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

அரபு நாடுகளிடம் பணத்தைப் பெற்றுத் தனியான ஆட்சி நடத்துகிறார்கள். சதொச நிறுவனங்களை அதிகமாக முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். மன்னார் வில்பத்துவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மறைத்து வைத்து இந்தியாவைத் தாக்கும் சூழ்நிலைகளை உருவாக்கி வருகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.