புலிகளுக்கு பணம் வழங்கிய மஹிந்தவை சிறையில் அடைக்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் நிதியை சன்மானமாகக் கொடுத்ததாக குற்றம்சாட்டியே பீல்டர் மார்சல் பொன்சேகா இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று பொரளையிலுள்ள கெம்பல் மைதானத்தில் நடத்திய மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

சரத் பொன்சேகா “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வென்றிருக்க வேண்டிய 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணத்தை கொடுத்து தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்த மகா வீரனே இந்த மஹிந்த ராஜபக்ச.

வெளிநாடொன்றிடம் இருந்து கிடைத்த இரண்டு மில்லியன் டொலர் பணத்தையே கொடுத்து தேர்தல் வெற்றியை அன்று களவாடியிருந்தார். இவ்வாறு தான் இந்த தேசப்பற்றாளர் அன்று செயற்பட்டிருந்தார். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் சன்மானத்தைக் கொடுத்த இந்த ராஜபக்சவை வாழ்நாள் முழுவதும் சிறை வைக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைக்காக நாட்டில் நடைமுறையில் இருக்கும் குற்றத்தடுப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்புச் சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றில் நிறுத்தி வாழ்நர் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டியது அவசியம். இது மாத்திரமன்றி சுனாமி பேரலையில் எமது நாட்டில் 38 ஆயிரம் பேர் பலியாகியிருந்தனர்.

அன்று இந்த நாட்டைச் சேர்ந்த அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் ஒருவன் மாத்திரம் வெற்றிக் கொண்டாட்டத்தில் திகழ்ந்தான். சுமாமி பேரலை அழிவிற்கு கிடைத்த பெருமளவான நிதிகளை தனது சகொதரியின் வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டான் இந்த தேசப் பாற்றாளன். தற்போதும் சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்படாதா என்று காத்திருக்கின்றான் அவன். ஏனெனில் அப்போதுதான் மேலும் பல கோடி ரூபாய்களை சுருட்லாம் அவனுக்கு.“