அரசுடன் சரணாகதி அரசியல் நடத்தவில்லை: அரசு எங்களை ஏமாற்ற நினைக்குமாயின் நாங்கள் அரசில் இருந்து விலகுவோம்

அரசாங்கத்தில் இணைந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற போதிலும், அரசுடன் எந்தவொரு விதத்திலும் இணைந்து செயற்படவில்லை என்றும் அவர்களிடம் சரணாகதி அரசியலை நடத்தவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றியபோது-

”அம்பாறை மாவட்டத்தில் பலத்த பிரச்சினைகளுடன் அநியாயங்களும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து செயற்படாமல் இல்லை. அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற, தீர்த்துவைக்கின்ற ஒரு பொறிமுறை அடங்காத எவ்வித தீர்வுத் திட்டத்தினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது.

நாங்கள் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் என்னுடைய பதவிகளெல்லாம் அரசுடன் இணைந்து சரணாகதி அரசியல் நடத்துவதற்கு தந்த சன்மானம் என பலர் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். அரசு விடுகின்ற பிழைகள் அனைத்தையும் நாடாளுமன்றத்தில் உடனுக்குடன் சுட்டிகாட்டி வருகின்றோம்.

அதுமட்டுமன்றி சர்வதேச ரீதியாக எமது பிரச்சினைகள் சம்பந்தமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும்போது எமது மக்களின் பிரச்சினைகளை மிகவும் இறுக்கமாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக அரசு அரங்கேற்றுகின்ற பிரச்சினைகள் அனைத்தையும் எமது கட்சியின் தலைவர் சுட்டிகாட்டி வருவதனை நான் நன்கு அறிவேன்.

எங்களில் இருந்து கொண்டு எம்மை எதிரியாக பாரக்கவேண்டாம். தற்காலத்தில் ஒருமித்த குரலில், ஒற்றுமையாக பயணித்து குரல் கொடுக்கின்ற பட்சத்தில்தான் எமது மக்களின் உரிமையை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிபார்த்துத்தான் நாங்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். அதிலும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட தமிழர்கள் யாரோடு சேர்ந்து வாழப்போகின்றோம் என்று நினைக்கின்றார்களோ, விரும்புகின்றார்களோ, அவ்வாறான ஒரு தீர்வினை உள்ளடக்கிய தீர்வு திட்டத்தை உறுதிப்படுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.

தீர்வுத் திட்ட விடயத்திலே அரசு எங்களை ஏமாற்ற நினைக்குமாயின் நாங்கள் அரசில் இருந்து விலகுவோம் என்பதனை இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்” எனக் குறிப்பிட்டார்.