தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்க சக வாழ்விற்கு வழி ஏற்படுத்தியுள்ளது - கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல ரங்கரெத்தின தேரர்

(இ.சுதாகரன்)

தேசிய நல்லிணக்கத்திற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது அதனை பாதுகாப்பான முறையில் எதிர் கால சந்ததியினருக்கு வழங்குகின்ற பொறுப்பு மூவினங்களையும் சாரும். கடந்த முப்பது வருட காலத்திற்கு முன்னர் இலங்கை தாய்த் திருநாட்டில்  இனங்களுக்கிடையே இன ஒற்றுமை சக வாழ்வு ஏற்பட வில்லை ஆனால்  இன்று தேசிய அரசாங்கத்தின் மூலமாக தேசிய நல்லிணக்கம் இன ஒருமைப்பாடு ஏற்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் ஒருவரை மற்றவர் பகைவர்களாக கருதினோம் அவ்வாறானதொரு நிலை நல்லாட்சியில் இல்லை இவ்வாறான நிலைமை தொடர வேண்டும்.



இவ்வாறு பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு கலாசார விழாவில் ஆன்மீக அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல ரங்கரெத்தின தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தமட்டில் நான் ஒரு பௌத்த மத குருவாக மாத்திரமன்றி அதற்கு மேலாக தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் பல முயற்சிகளில் அயராது உழைத்து வருகின்றேன். நான் ஒரு இனவாதி அல்ல பல்லின மக்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு இனத்தவர்களினதும் மொழி மத கலாசார உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இதனை ஏற்படுத்துவதில் நான் உறுதியாகவுள்ளேன்.எமக்குள் எதுவிதமான வேறுபாடுகளும் கிடையாது.
மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்தும் கருத்துக்களை போதிக்கின்றன அதற்கு ஏற்றவகையில் மனித சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் மாணவர்களிடையே தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் பல செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றார். இவருடையே நல்ல சிந்தனையினை மத குரு என்ற வகையில் பாராட்டுகின்றேன்.இலங்கை தாய் நாட்டில் இன மத வேறுபாடுகள் இன்றி மூவின மக்களும் வாழ வேண்டும்.

இன்றைய கல்விக் கொள்கை கலைத்திட்டத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்கள் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியினையும் சிங்கள் மாணவர்கள் தமிழ் மொழியினையும் கட்டாயம் கற்ற வேண்டிய தேவை உள்ளது.இவ்வாறு கற்றுக் கொள்கின்ற போது இன ஒற்றுமை தேசிய  ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படுவதனை காணக் கூடியதாகவுள்ளது.

இன்றைய சிறுவர்களே நாளை தலைவர்கள் என்ற கருத்துக்கு அமைவாக மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டினை சிறப்பாக முன்னெடுத்து எதிர்காலத்தில் இலங்கைத் திருநாட்டில் இன வேறு பாடு இல்லாது ஒன்றுபட்டு வாழ கற்றோர் வழிகாட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.