மட்டக்களப்பில் இருந்து அரசியல் பிரதிநிதிகளை அனுப்புவதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் - வீ.இராதகிருஸ்ணன்


 (துறையூர் தாஸன்)

இப்பொழுது இலங்கையினுடைய அரசியலமைப்பிலே ஒரு சாதகமான மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.மாகாண அமைச்சுகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பன்குடாவெளி றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அபிவிருத்தி பெருவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ஞா.ஸ்ரீநேசன்,ச.வியாழேந்திரன் மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோரும் இதன் போது கலந்து கொண்டனர்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,விசேடமாக கல்வி,சுகாதாரம், பொருளாதார அபிவிருத்திகளை மேற்க்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மத்தியரசுக்கும் மாகாண அமைச்சுகளுக்கும் சில சிக்கல்கள் இருப்பதன் காரணமாக சில நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதமும் உள்ளது.
ஏனென்றால் இங்கிருந்து முறையான பிரதிநிதிகளை அனுப்புவதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்.இப்பிரதேசத்தின் நிலைமைகள்,பிரச்சினைகள் இற்றை வரை எடுத்துக்கூறப்படவில்லை.இது மத்தியரசினது குற்றமா? மாகாண அரசினது குற்றமா? மாகாண அரசிடம் இது பற்றி கூறியிருக்கின்றீர்களா?

ஒரு ராஜாங்க அமைச்சர், பொதுவாக பாடசாலைகளுக்கு மத்திய அரசிலிருந்து அமைச்சர்கள் வருவது மிக மிக குறைவு.பொதுவாக மாகாணத்திலிருந்து வருவதே மிக குறைவு.வசதியான பாடசாலைகளை நகரத்திலே பார்த்துவிட்டு மட்டக்களப்பிலே கல்வி வளர்ச்சி நன்றாக இருக்கின்றதென்று சொல்வதை விட பின்தங்கிய பாடசாலைக்கு வந்து பாடசாலைகளின் குறைபாடுகளை நேரிலே அறிந்துகொண்டு செல்வதற்கு, மட்டு அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களே காரணமானவர்கள்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பன்குடாவெளி றோமன் கத்தோலிக்கப் பாடசாலை 137 வருட பழமையினையுடையதாக இருப்பதுடன் ஒன்று முதல் பதினொராம் வகுப்பு வரை 251 மாணவர்களையும் 15 ஆசிரியர்களையும் ஒரு அதிபரையும் கொண்ட பாடசாலையாக இருக்கிறது.

1978 மற்றும் 1980 களில் நிகழ்ந்த சூறாவளியினாலும் யுத்தத்தினாலும் இப்பாடசாலை அழிவுற்றிருக்கின்றது.இரு அழிவுகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இப்பாடசாலைக்கு இருந்திருக்கின்றது.

பொதுமக்கள் தங்களது தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு உரிய அலுவலர்கள் ஊடாக மாகாண அமைச்சிடம்  பிரச்சினைகளை எடுத்துக்கூறி முறையான தீர்வுகளை பெறவேண்டும்.நல்லாட்சி அரசாங்கத்தினுடைய அரசானது இன்னும் மூன்று வருடங்கள் பயணிக்க இருக்கிறது.

கொழும்பிலே எல்லாப் பாடசாலைகளினதும் அதிபர்களையும் அழைத்து பேசுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.வலயக்கல்விப் பணிப்பாளர்களையும் மாகாண கல்விப் பணிப்பாளர்களையும் மாகாண செயலாளர்களையும் அழைத்து பேசுவதுதான் வழக்கமாக இருக்கிறது.அப்பொழுது அவர்கள் கொண்டு வருகின்ற பெறுபேறுகளை வைத்துக்கொண்டுதான் நிதி ஒதுக்கீடு வேலை விடயங்களை செய்வது.மத்தியரசின் நிதி மீளவும் மத்தியரசுக்கு செல்வதற்கு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் நிர்வாக அலுவலக ஊழியர்களுமே முதன்மையானவர்களாக அமைகின்றனர்.

கோட்டம், வலயம் மற்றும் மாகாணம் ஊடாக பிரச்சினைகளை எடுத்துக்கூறுபவர்களாக அரச அலுவலர்கள் இல்லை.அவ்வாறு எடுத்துக் கூறியிருப்பின் இப்பாடசாலை ஏதோ ஒரு திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும்.பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் ,மாகாண சபை அமைச்சுகள் ஊடாகவும் தங்களுக்குத் தேவையான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை பெற்றுக்கொண்டு பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு பாடசாலை நிர்வாகம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
இலங்கையிலே மிக முக்கியமாக தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மாகாணங்களாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை குறிப்பிடலாம்.

வடமாகாணத்தில் தற்பொழுது  நிலவுகின்ற சூழ்நிலை மாறவேண்டும்.தமிழர்களை பிரிப்பதற்காக நிறையப் பேர் இன்றைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே டயஸ்கொரவை வைத்து பிரிக்கப் பார்த்தார்கள் அது  முடியாமல் போயிற்று.இப்ப இந்த மாதிரியான சூழ்நிலையை மாகாண சபைக்குள்ளே உருவாக்கி பிரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.ஆகவே இதற்கு இடம்கொடுக்ககூடாது.

இரா.சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலமாக தமிழர்களுடைய இன்னும் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தமிழர்கள் தங்களது சொந்த மண்ணிலே சொந்தக் காலிலே வாழ்வதற்கான அரசாட்சி செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டுமே தவிர அவர்களை பிரித்து அவர்களுக்குள்ளே குழப்பம் ஏற்பட்டு  நாட்டை சின்னாபின்னப்படுத்தி மாகாணத்தை சின்னாபின்னப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.

நாங்கள் சில இடங்களிலே பெரும்பான்மையாக இருந்தாலும் சில இடங்களிலே சிறுபான்மையாக இருக்கின்றோம்.சில இடங்களிலே சம சமமாக இருக்கின்றோம்.பல இடங்களிலே சிறுபான்மையாக இருக்கின்றோம்.வடமாகாணத்தை எக்காரணம் கொண்டும் நழுவவிட்டால் சிறுபான்மையாக இருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே பிரச்சினைகள் அதிகமாவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கும்.வடமாகாணத்தை காப்பற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.தமிழர்களாகிய ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.அதை நாங்கள் முறையாக செய்ய வேண்டும்.