''யாரையும் எளிதாகக் கருதக் கூடாது'': தோல்வியிலிருந்து கோலி கற்ற பாடம்

பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமைக்கு கிடைத்து வெற்றி இது என்று சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது.

போட்டியின் முடிவில், ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் வெற்றி குறித்து பேசிய கோலி, பாகிஸ்தான் வீரர்களுக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இன்றைய தினம் இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டதாகவும் கூறினார்.

மேலும், இந்த வெற்றி பாகிஸ்தான் வீரர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி என்றும், யாரையும் எளிதாக எடுத்து கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பந்துவீச்சு குறித்து பேசிய கோலி, இன்னும் கூடுதலாக விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கலாம் என்றும், பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றும் கூறினார்.

இறுதியாக, டாஸில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்த முடிவில் தவறு எதுவுமில்லை என்று கூறிய கோலி, இன்றைய தினம் இந்திய அணிக்கான தினம் இல்லை என்றார்.