தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருவிழா மற்றும் பூசை நிகழ்வு


(Photos - நர்த்தனன் )
கிழக்கிலங்கையில் தென் பகுதியில் அருளும் இறை பக்தியும் தமிழர் பண்பாட்டு மணமும் கமழும் இயற்கை எழில் தவழும் வரலாற்றுப் பெருமை கொண்ட தம்பிலுவிலில் குடி கொண்டருள்புரிகின்ற கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் நடைபெற்று வருகின்றது  . 


 6 ம் திகதி  அதிகாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய   திருக்குளிர்த்தி உற்சவம்  செவ்வாய்க்கிழமை அதிகாலை பொங்கல் விழா மற்றும் திருக்குளிர்த்தி நிகழ்வுடன்  நிறைவு பெறவுள்ளது. கண்ணகி வழிபாடு என்பது ஒரு பத்தினி தெய்வ வழிபாடாக ஆரம்ப காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் விரிவடைந்து கற்புக்கரசி கண்ணகிக்கு கோயில் இல்லா ஊர் இல்லையென சொல்லும் அளவுக்கு கண்ணகி வழிபாடு தமிழர் மத்தியில் புகழ்பெற்று விட்டது. வைகாசி மாதம் வந்தாலே ஊரெல்லாம் அவள் புகழ் மணக்கும். அந்தளவுக்கு ஊரும், உள்ளமும் புனிதம் நிறைந்து இறைமணம் வீசும்.


கஜபாகு மன்னன் கண்ணகி மீது பக்தி கொண்டு யாழ்ப்பாணம் அனுராதபுரம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் கண்ணகிக்கு ஆலயம் அமைத்து வழிபாடுகள் செய்தான்.

இவ்வாறு இலங்கையில் கண்ணகி வழிபாடானது பரவியது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் மட்டக்களப்பின் தென்பகுதியில் அதாவது குறிப்பாக அம்பாறை மாவட்டம் எழில் கொஞ்சும் தம்பிலுவில் ஊரக்கை (வீரச்சோலை) என்னும் இடத்திற்கு கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் பாண்டிய நாட்டின் மதுரை மாநகரில் இருந்து கந்தபாணத்துறை ஊடாக செண்பகச் செல்வி எனும் திருநாமத்துடன் கூடிய கண்ணகி விக்கிரகம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

பசுமை நிறைந்த சிறு நதிக்கரையோரம் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கு அவ்விக்கிரகம் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுவதுடன் அக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களால் சிறப்பான வழிபாடுகளும் செம்மையாகச் செய்யப்பட்டு வந்துள்ளன.

இலங்கையை ஆண்ட மன்னன் முதலாம் விஜயபாகு (கி. பி. 1056 - 1111) ஊரக்கையில் குடிகொண்டிருந்த கண்ணகியம்மன் மீது பக்தி கொண்டிருந்தான் எனவும் அதன் காரணமாக இவ்வாலயத்திற்கு பல நன்கொடைகளை வழங்கி இருந்தான் என்றும் கிராமிய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இதனைத் தொடர்ந்து சோழரது ஆட்சியில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான முயற்சியில் முதலாம் விஜயபாகு மன்னன் ஈடுபட்டு கண்ணகியம்மன் அருளால் போரில் முதலாம் விஜயபாகு இலங்கையை கைப்பற்றியதாகவும் அதன் காரணமாக மன்னன் ஆலயத்திற்கு தல யாத்திரை ஒன்றினை மேற்கொண்டு நன் கொடைகளையும் தங்க மாம்பழம் ஒன்றினையும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்கு வெற்றிக் காணிக்கையாக கொடுத்ததாக கிராமிய இலக்கியம் ஒன்று குறிப்பிடுகின்றது.

இந்த கண்ணகி அம்மன் ஆலயம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் மாகோன் ஆட்சிக் காலம் (கி. பி. 1215) வரையும் உன்னத நிலையில் இருந்ததுடன் மாகோன் இலங்கை மீது படை யெடுத்த நிலையில் இப்பகுதியிலும் அவனது ஆட்சி தாக்கம் செலுத்தியது.