கத்தார் நாட்டுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து, மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, நான்கு நாடுகளும், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த நான்கு நாடுகளுடனான அத்தனை உறவுகளிலிருந்தும் நீங்குமாறு கத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாக்க, கத்தார் வழியான எல்லைகளையும் மூடிவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டமைப்பு படைகள், ஏமனில் கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் கத்தார் நாடோ, அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து அந்த நாட்டை தங்கள் நேச நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்றியுள்ளன இந்த அரபு நாடுகள். சிரியா நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு கத்தார் உதவுவதாகவும், முன்னாள் ஹமாஸ் தலைவர் காலீத் மெஷலுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான்கள் 2013ல் கத்தார் தலைநகர் தோகாவில் அலுவலகம் திறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள கத்தார், இந்த நடவடிக்கைகளுக்கெதிராகவும் தன்னை தயார்படுத்திவருகிறது. சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளதே அதற்கு உதாரணம். ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவுவதான இந்த குற்றச்சாட்டுகள் மற்ற அரபு நாடுகளின் மீதும் உள்ளது. துருக்கி உள்ளிட்ட மற்ற நாடுகளின் மீதும் இந்த குற்றச்சாட்டுகளும், சந்தேக பார்வையும் இருக்கும் போது கத்தார் மீதான இந்த நெருக்கடிகளுக்கு நிச்சயம் அரசியல் ரீதியிலான, பொருளாதார ரீதியிலான காரணங்கள் வலுவாக இருக்கும்.
(தொடரும்)













