இளைஞர் ஆற்றல் அபிவிருத்திச் செயற்பாட்டின் கீழ் ஏறாவூரில் 5 வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

இளைஞர் ஆற்றல் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் ஆற்றல் பங்களிப்போடு 5 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அபூபக்கர் முஹம்மது ஹனீபா தெரிவித்தார்.




செவ்வாய்க்கிழமை 18.07.2017 மாலை ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத் திட்டம் சம்பந்மாக அவர் மேலும் விவரம் தெரிவிக்கையில்,
இவ்வாண்டுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 75 இளைஞர் ஆற்றல் வெளிப்பாட்டு வேலைத் திட்டங்களில் 5 திட்டங்கள் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிற்குக் கிடைத்துள்ளன.


தலா ஒவ்வொரு திட்டத்திற்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்குகின்ற அதேவேளை பிரதேச இளைஞர்கள் தமது சேவைப் பங்களிப்பாக தலா 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான மனித உழைப்பை நல்க வேண்டும்.
அதனடிப்படையில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டமாக இது நிறைவுறுத்தப்படும்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத் திட்டங்கள் ஓகஸ்ட் மாதம் 30 திகதி மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படும்.' என்றார்.
இதனடிப்படையில் ஏறாவூரில் 2 விளையாட்டு மைதானங்கள் மற்றும் கடின பந்து பயிற்சி இடங்கள் புனரமைப்பு, 2 குறுக்கு வீதிகள் அமைப்பு, ஒரு வழிபாட்டுத் தல சுற்றுமதில் அமைப்பு என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அறபா பாடசாலை அருகில் உள்ள எம்.ஏ.சி. அப்துல் றஹ்மான் மாவத்தை வீதியை  ஆற்றங்கரை சிறுவர் பூங்காவுடன்  இணைக்கும்  வேலைத்திட்டத்தின்   ஆரம்ப நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றபோது  நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர்  மௌலானா மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர், ஏறாவூர் நகர பதில்  பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா, ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித், இளைஞர் கழக உறுப்பினர்கள்  மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். ‪