ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டி வாழும் கொடுவாமடுவிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையான பெரியபுல்லுமலை வரை வாழும் பல கிராமங்களில் மக்கள் காலாகாலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள 'சொன்ட் " அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு' பணியகத்தில் இடம்பெற்றது.
இங்கு பதுளை வீதியை அண்டி இருக்கும் சுமார் 20 இற்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சன சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட சுமார் 15 சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது சமகாலத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் தொல்லை, குடி தண்ணீர்ப்பிரச்சினை, வீதிகள் சீரின்மை. மேய்ச்சல் தரையில் அத்துமீறல், உள்ளுர் கிராம மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமை, கருங்கற் சுரங்கங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள், இயற்கை வளங்களான மணல், காட்டு மரங்கள் ஆகியவை அழிக்கப்படல், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்களின் மீண்டெழ முடியாத வாழ்வாதாரப் பிரச்சினைகளை கிராம மக்கள் வெளிக் கொண்டு வந்தனர்.
இப்பேர்ப்பட்ட பிரச்சினைகளை மக்களிடம் அதிகாரிகள் கேட்டறிவதில்லை என்றும் அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைக் கூட அதிகாரிகள் அலட்சியம் செய்து விடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து செல்லும் விவசாயம் கால்நடை வளர்ப்பு பிரச்சனை
பிரச்சனைகள் தொடர்பில் மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த சனசமூக மன்றத்தின் ஆலோசகர் எஸ். விஜயரட்ணம் கூறுகையில்,
இது பெரும் பிரச்சினையாக உருவாகி உள்ளுர் கிராமவாசிகளான விவசாயிகளுக்கும் வெளியிடத்து மாடு வளர்ப்போருக்குமிடையில் மோதல்களும் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.
மேய்ச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் மாதவணை, மயிலந்தமடு பகுதியில் பொலொன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 பெரும்பான்மை சமூக குடும்பங்கள் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் எமது எல்லைக் கிராமங்களில் புகுந்து மேய்ச்சல் தரையெனக் குறிப்பிடப்படும் பகுதிகளில் விவசாயம் செய்வதால் அப்பகுதிக்கு கால்நடைகள் செல்லும்போது அதனை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொல்கின்றனர்.
இதன் காரணமாக இங்கு இவ்வாறான இன முரண்பாடுகள் காலங்காலமாக தொடர்ந்தவண்ணமே உள்ளன.
ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியாமல் இது நாள் வரைக்கும் சம்மந்தப்பட்ட தரப்பினர் இழுத்தடித்துக்கொண்டே செல்கின்றனர்.' என்றார்.
சின்னப்புல்லுமலையைச் சேர்ந்த சனசமூக நிலைய பொருளாளர் கே. இந்திரகுமார் கூறுகையில்,
சிறு விவசாயம்தான் எங்கள் வாழ்வாதாரம் இங்குள்ள குளங்கள் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றன.
இதன்காரணத்தால் இங்கு மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் வீண் விரயமாக்கபடுகின்றது. இங்குள்ள உறுகாமம் குளத்தின் வடிகால் அமைப்பு நேர்த்தியாக இல்லாததால் மிக அதிகமான தண்ணீர் வீண்விரயமாக வழிந்தோடுகின்றது.
பதுளை வீதியை அண்டிய பிரதேசத்தில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட சிறு குளங்கள் புனரமைக்கப்படாததால் அவை தூர்ந்துபோய்க் கிடக்கின்றன.
மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு குளத்தினுள் மண் நிரம்புகிறது.
ஏனைய மாவட்டத்தில் குளங்களையும் வாய்கால்களையும் புனரமைப்பதுபோல் எமது சிறிய, பெரிய குளங்களையும் வாய்கால்களையும் முறைப்படி புனரமைத்துப் பராமரிக்க வேண்டும்.
இதன் மூலம் அதிகமான தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியும், அருகிலுள்ள குடிநீர் கிணறுகள் வற்றாமல் இருப்பதுடன் இங்குள்ள கால்நடைகளுக்கும் வன விலங்குகளுக்கும் அத்தண்ணீர் உதவும் அதனால் காட்டு யானை மனித முரண்பாடு அச்சுறுத்தலும் நீங்கும்.
குடிநீர், போக்குவரத்து, காட்டுயானை பிரச்சனை குறைந்தபாடில்லை.
மாவளையாறு கிராமத்தில் வசிக்கும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த எஸ். தெய்வானி கூறுகையில்,
| எஸ். தெய்வானி |
குறிப்பிட்ட இந்த வீதிகளுக்கு 300 மீற்றர், 500 மீற்றர் தூரம் வரைதான் கொங்கிரீட் இட்டுள்ளார்கள் வீதியின் ஏனைய பகுதியெல்லாம் குன்றும் குழியுமாகி உடைந்து படு மோசமாக உள்ளது. இந்த நிலையில்தான் இங்குள்ள பெரும்பாலான உள் வீதிகள் காட்சி தருகின்றன.
மாவளையாறு கிராமத்தில் 50 குடும்பத்தவர்கள் வசிக்கின்றார்கள். அங்கிருந்து வைத்தியசாலைக்கு செல்வோர், கற்பிணிபெண்கள், தொழிலுக்கு செல்வோர், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் இப்படியானவர்கள் எல்லாம் சேதமடைந்து குன்றும் குழியுமாகக் கிடக்கும் வீதியையே பயன்படுத்துகின்றார்கள்.
இங்கு சற்று தூரம் சென்றே குடிநீர் பெறவேண்டும் அங்கு சென்றால் அந்த இடங்களில் காட்டுயானைகள் நடமாடும். இப்படிப் பயந்தவண்ணம் இப் பகுதி மக்களின் வாழ்க்கை கழிகின்றது.
குடிநீர் வழங்குமாறு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையிடம் கேட்டால் 'உங்கள் வீதி சேதமடைந்து கிடப்பதால் பவுஸர் வரமுடியாது' என கூறுகிறார்கள்.
இங்கு இரவு நேரங்களில் யானைத் தொல்லை, ஆறு மணிக்கெல்லாம் காட்டு யானைகள் வந்துவிடும் அதன்பின்னர் வெளி இடங்களுக்குச் செல்வது உயிராபத்தானது.
யானைத் தடுப்பு வேலியை விரைவாக அமைத்தால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு யானைத் தொல்லை ஓரளவேனும் குறைந்துவிடும்.
யானை வேலி போடுவதற்கான திட்டத்தின் கீழ் குறித்த இடங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்புரவு செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் யானைத் தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை. அந்த இடத்தில் திரும்பவம் பற்றைக் காடுகள் வளர்ந்து விட்டன.
நாங்கள் எப்படி யுத்த சூழ்நிலையில் இருந்து கொண்டு யானைதொல்லையாலும் குடிநீர் பிரச்சனையாலும் எப்படி கஸ்டங்களை அனுபவித்தோமோ அப்படியான வாழ்கையைத்தான் இன்றும் வாழ்ந்து வருகின்றோம் என்பதுதான் நிதர்சனம்.
என அவர்கள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் சொண்ட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ரி.விஜயகுமார் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.












