மிதிபலகையில் பயணித்த பெண்; பஸ் நடத்துநர் மீது கத்திக்குத்து

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துநர் ஒருவர் மீது, அம்பாறை, திராய்கேணிப் பகுதியில் வைத்து நேற்று (19) மாலை 6.30 மணியளவில் கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸிலேயே, இச்சம்பவம் ​இடம்பெற்றுள்ளதுடன், பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே, நடத்துநர் மீது கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில்  படுகாயமடைந்த நடத்துநர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

களுவாஞ்சிக்குடி டிப்போவுக்குரிய குறித்த பஸ், நேற்று மாலை பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்குப் பயணித்துள்ளது.

அப்போது, பெண்ணொருவர் அக்கரைப்பற்றில் வைத்து, அவ் பஸ்ஸில் ஏறி, மிதிபலகையில் நின்றவாறு பயணித்ததையடுத்து, நடத்துநர் எச்சரித்துள்ளார்.

எனினும், அதைப் பொருட்படுத்தாக அப்பெண், தனது உறவினர் ஒருவருடன் அலைபேசியில் உரையாடியபடி அக்கரைப்பற்றில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் வரை பயணித்துள்ளார்.

பின்னர், அட்டாளைச்சேனை, திராய்க்கேணி பகுதியில் அவ் பஸ்ஸை முந்திச் சென்று பட்டா வாகனமொன்றில் குறித்த பெண்ணின் சகோதரியின் கணவர், பஸ்ஸை இடைநிறுத்தியுள்ளார்.

அத்துடன், பஸ்ஸுக்குள் ஏறி, நடத்துநர் மீது கத்திக்குத்து மேற்கொண்டார் என சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை,   அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.