உற்பத்திப் பண்பாடு வீழ்ச்சியடைந்து நுகர்வுப் பண்பாடு மேலோங்கியுள்ளது.

(துறையூர் தாஸன்)

சமூக பண்பாட்டுக்கான ஒற்றுமை பொருளாதாரப் பண்பாடு என்பவை இன்றைய சூழலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியில் முதலாம் வருட புதுமுகு மாணவர்களின் தோழமை சங்கம நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,உலகிலே இன்று உற்பத்திப் பண்பாடு வீழ்ச்சியடைந்து நுகர்வுப் பண்பாடு மேலோங்கியுள்ளது.ஏதேனும் ஒரு பல்தேசியக் கம்பனிகள் எதை விற்க முடிந்தாலும்,இலங்கை போன்ற நாடுகளிலே வெகு இலகுவாக விற்றுவிட்டுச் செல்லலாம்.அதனுடைய பாதிப்பு குறித்தோ விளைவுகள் குறித்தோ எந்தவிதமான ஆய்வுகளும் செய்ய முடியாத ஒரு நிலைமையிலேயே நாம் வாழுகின்றோம்.

பல நாடுகளிலே நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்  இருக்கின்றன.நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பில் முக்கியமாக ஆசிரியர்களே இருக்கின்றனர்.உற்பத்திப் பொருட்களிலுள்ள பின்விளைவுகளை சொல்லக்கூடியவர்கள் யார் என்றால், அவர்கள் ஆசிரியர்கள் தான்.உற்பத்திப் பொருட்களிலே உள்ளடக்கப்படும் சில இரசாயன பதார்த்தங்கள் மூளை வளர்ச்சி மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனால்  இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உற்பத்தி பொருட்களுக்கெதிராக எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுவதுடன் உயர்ந்த நுகர்வுப் பண்பாட்டுக்கு எதிரான ஒரு போக்கும் காணப்படுகின்றது.இலங்கையிலே அத்தகைய அவ்வாறான போக்கு மிக குறைவாகவே காணப்படுகின்றது.சமூகத்துக்கு மேம்பாடு தரக்கூடிய பொருளாதாரப் பண்பாட்டை உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

இந்த நாட்டினுடைய கலாசாரம் எவ்வாறு இருக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.ஆசிரியர் எவ்வாறு இருக்கின்றார்,சமூகத்தில் இளைஞர் யுவதிகள் எவ்வாறு இருக்கின்றனர் என்பதை பார்க்கின்ற போது இந்த நாட்டினுடைய பண்பாடு எந்தளவுக்கு மாற்றமடைந்து சீரழிந்து செல்கின்றது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.சமூகப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு அதற்காக உழைப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

சிறந்த அறிவு,சரியான முடிவெடுத்தல்,தலைமைத்துவம்,மக்களுக்கு தெளிவூட்டல் என்ற வகையில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக செயற்படவேண்டும் என்றார்.