மக்கள் வறுமையில் இருக்கும்போது அமைச்சர்களுக்கு சொகுசு வாகனமா?

நாட்டில் உள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கம் அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான நிதி செலவிடப்படுகின்றமை வருந்தத்தக்கது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்ய திட்டமிடுவதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயெ இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 100 ரூபாவாகவும் காணப்படுகின்றது. வசதி படைத்தவர்களுக்கு இது பிரச்சினையல்ல. அன்றாடம் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கே பிரதான பிரச்சினையாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைப் புனர்நிர்மாணம் செய்தல், அமைச்சர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்தல் போன்ற விடயங்களுக்கு மேலதிக நிதியை வழங்குமாறு குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டிருந்தது.

நாட்டில் மக்கள் முகம்கொடுத்துள்ள சுகாதாரப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வை அரசாங்கம் காணாத நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.