புராதன ஆசிரியரும் தற்கால ஆசிரியரும்

 
       
'மாதா,பிதா,குரு,தெய்வம்' என்று சான்றோர் வரிசைப்படுத்தியுள்ளனர். அவ் வரிசையில் தெய்வத்திற்கு முன்பாக ஆசிரியர்களை மையப்படுத்தியுள்ளனர்.  இவ்வாறாக முதன்மை கொண்ட ஆசிரியர்களை இரண்டு பிரிவாக நோக்க முடியும் - புராதன ஆசிரியர், தற்கால ஆசிரியர்.

தற்கால ஆசிரியர் நவீன சிந்தனைகளால் ஆக்கப்பட்டவர். தர்க்க ரீதியாக சிந்திக்கும் தன்மை கொண்டவர், எதையும் விமர்சன ரீதியாக அணுகும் மனப்பான்மை கொண்டவர். ஆனால் புராதன ஆசிரியர் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் காணப்பட்டார். இந்தியாவிலும் இலங்கையிலும் பௌத்தமதம் வருகைக்கு முன் பிராமணர்களே கல்விக்கு அதிபதிகளாக இருந்தனர். கல்வியை பரப்புவர்களும் அவர்களாகவே காணப்பட்டனர்.

பிராமாணர்களும் உயர்குடி பிறந்தவர்களும் அரசர்களும் கல்வியைப் பெற்றனர். பிராமணர்கள் கல்வியைக் கொடுப்பதில் ஆர்வமாகவே இருந்தனர்.குரு நண்பனாகவும்,தத்துவ ஆசிரியனாகவும்,வழிகாட்டியாகவும் விளங்கினார். குருவினுடைய வீடு தான் கல்விக்கூடம். ஐந்து வயதிலே கல்வியைத் தொடங்கினர் எனக் கருதப்படுகிறது. சமய சடங்குடன் இது ஆரம்பிக்கப்பட்டது. இதனை உபநயனம் எனவும் கூறப்பட்டது. இதன் பிறகு முறைப்படி மாணவனாக ஏற்றுக் கொண்ட பின் குருவின் வீட்டிலே தங்க கல்வியைப் பெற்றனர்.


கல்வி ஒரு நீண்ட செயல் முறையாகக் கருதப்பட்டது. ஆசிரியருடைய ஆளுமையை கிரகித்துக் கொள்ள இது வாய்ப்பாக இருந்தது.
காலப்போக்கில் இது மாற்றமடைய விகாரைகளுடன்  கல்வி இணைந்ததாகக் காணப்பட்டது. இலங்கையில் இது 'குருகெதற'எனப் பெயர் பெற்றது. கிராமிய பாடசாலைகள் முதன்மை பெற ஆசிரியர்களும் முதன்மை பெற்றனர். பிராமணர்களுடைய கையிலிருந்து பௌத்த சந்நியாசிகளின் கைளுக்கு கல்வி மாற்றம் பெற்றது. ஆசிரியர்கள் ஒழுக்கசீலர்களாக வியங்கியதுடன் மாணவர்களுக்கு தண்டனையும் வழங்கினர்.

ஆசிரியருடைய பங்கு ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் சார்ந்ததாக இருக்கவில்லை. கிராமிய பாடசாலை  ஆசிரியர் கிராமத் தலைவராகவும்,ஆலோசராகவும் இருந்தார். போர்த்துக்கேயர்-டச்சுக்காரர்களின் வருகையின் பின் கல்வி மதத்துடன் சம்பந்தப்பட்டது. ஆசிரியரும் சமயம் சார்பான பாத்திரத்தை ஏற்க வேண்டியதாயிற்று. ஒல்லாந்தர்களுடைய காலத்தில் கோயிற்பற்று பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் தோம்புதர்களாகவும் விளங்கினர். பதிவுகளை பாதுகாப்பவர்களாகவும், கிராம அலுவலர்களாகவும், சமூக நிருவாகக் கடமைக்காரராகவும் ஆசிரியருடைய பாத்திரம் மாறியது.

பிரித்தாணியர் காலத்தில் ஆசிரியருடைய கடமை சற்று மாறுபடுகின்றது. சமயத்தை வளர்த்தல், அறிவைப் பேணுதல், அரசாங்க முகவராகக் கடமையாற்றுதல் போன்ற பங்களிப்பு இருந்தது. சுதந்திரத்தின் பின் ஆசிரியர்கள் அறிவைக் கையளிப்பவர்கள் என்னும் பாத்திரத்திற்கு உட்பட்டனர். கல்வியிலே கடும் போட்டி நிலையால் ஆசிரியருடைய பணி மேலும் முக்கியத்துவம் பெற்றது.பொதுப் பரீட்சைகளில் மாணவர் பெறும் பேறுகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களது முக்கியத்துவம் விளங்கியது.

பிரதான பாடங்களை கற்பித்தல், மாணவர்களை பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல் என்னும் கடமைகளுக்குட்பட்ட பாத்திரமாக ஆசிரியர் மாற்றமடைந்தார். கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியரது பங்கு முக்கியமாக இருக்கின்றது.சமூகம்,அரசு என்னும் காரணிகள் ஆசிரியரை  எப்போதும் உற்றுநோக்கிய வண்ணம் இருக்கிண்றன. இந்த நிலையில் தனது சிந்தனை போக்கை மாற்றியமைக்காது விட்டால் சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். மதிநுட்பம் வாய்ந்த திட்டமிடலின் விளைவே வெற்றிகரமான கற்பித்தலாகும் என்பதை ஆசிரியர் உணர்ந்து கொள்வார்.

கற்பித்தலில் மூன்று கட்டங்கள் இருப்பதை மதிநுட்பம் வாய்ந்த ஆசிரியர் உணர்ந்து  கொள்வர். முன்செயல், இடைச்செயல், பின்செயல் என்பதுவே அதுவாகும்.முன் செயல் கட்டத்தில் ஆசிரியர் நோக்கங்களில் தெளிவு பெறுவர்.கற்றலுக்கான வளங்களை ஆயத்தம் செய்தல் முதலான இனைந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். இடைச் செயல் கட்டத்திலே தான்  மாணவருக்கும் ஆசிரியருக்குமுள்ள உண்மையான விவகாரக் கட்டம் இடம் பெறுகின்றது. பின் செயல் நடவடிக்கைகள், பிரதிபலிப்புக்கள் வாய்ப்புக்களை காட்டுகின்றன. அவை திருத்தங்களுக்கு வழிகோலுகின்றன.

கல்வி நவடிக்கைகளில் ஆசிரியர் முன்னேற வேண்டுமாயின், தனது இருப்பை நன்கு அவதானித்துக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளை அணுகும் போது யதார்த்தமாக, விமர்சன ரீதியாக அணுக வேண்டும். சிறந்த ஆசிரியர் நவீன சிந்தனைப் போக்கைக் கொண்டவராக இருப்பார். தனது பாடசாலைப் பங்கில் இதனைத் தெளிவாகக் காட்டுவார். பாடசாலை நிருவாகத்தில் இவரது உளப்பண்பையும் அறிவு ரீதியான போக்கையும் கண்டு கொள்ளலாம். உடன் ஆசிரியர்களுடன் பழகும் போது குழந்தைகளின் மனங்களிலே இடம்பிடிப்பதைக் காணலாம்.

மேலதிகாரிகளுடன் பழகும் போது தனது நேர்மையை உணர்ந்து கொள்வர்.  கற்பிக்கும் போது விமர்சன ரீதியாகக் கற்பிப்பதைக் காணலாம். மொத்த ரீதியில் நோக்கும் போது ஆசிரியர், விமர்சகர், சிந்தனையாளர், சமூகவியலாளர் என்பவற்றுடன் ஒரு நல்ல மனிதர் என்ற நிலையை வந்தடைவர்.

யேசுஐயா டிலானி
உதவி விரிவுரையாளர்,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்