தேசிய கல்வி இலக்குகள் தரம் 5 மாணவர்களிடையே நடைமுறையிலுள்ளதா?



இலங்கையின் கல்விச்செயற்பாடுகளிலும், கலைத்திட்டத்திலும் பல்வேறு போதாமைகள் கண்டறியப்படுகின்றன. இதனால் திறனாய்வு மனப்பாங்கு, சுயமுகாமைத்துவம், சமூக நோக்கு, ஆக்க சிந்தனை, வளமுகாமைத்துவம் போன்ற பல்வேறு அம்சங்களை வளர்க்கும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கமைய தேசிய கல்வி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மனித விருத்தியை பெறுவதற்காக மாணவர்கள் அடைய வேண்டிய கல்வி இலக்குகள் பற்றி விதந்துரைக்கப்பட்டது.

தொடர்பாடல் தேர்ச்சிகள், ஆளுமை தொடர்பான தேர்ச்சிகள், சுற்றாடல் தொடர்பான தேர்ச்சிகள், வேலை உலகிற்கு தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள், சமயமும்;, ஒழுகலாறுகளும் தொடர்பான தேர்ச்சிகள், ஓய்வு நேரத்தை பயன்படுத்தல், விளையாட்டு தொடர்பான தேர்ச்சிகள், கற்றலுக்கு கற்றல் தொடர்பான தேர்ச்சிகள் என்பவையே அவ் 07 அடிப்படை இலக்குகளும் ஆகும். இவை இன்று தரம் 5 மாணவர்களிடையே நடைமுறையில் உள்ளதா? என்பது மாபெரும் கேள்விக் குறியாகவே உள்ளது.

இவ் அடிப்படை கற்றல் இலக்குகளின் நிமிர்த்தமே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைத் தான் இவ்வயது மாணவர்களுக்காக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடைபெறுவது என்ன? வெறுமனே பரீட்சை எழுதி சித்தியடைவதை மட்டும் நோக்காக கொண்ட மாணவர்களாகவே தரம் 5 மாணவர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.  இதனால் வாழ்க்கை அறிதகவு இப்பருவத்தில் கிடைக்கப்பெறாமல் போகின்றனர். இவ்வாறு அடிப்படை தேர்ச்சிகளிலிருந்து வேறுபட்ட ஓர் போக்கைத் தான் இன்று இவர்கள் கொண்டுள்ளனர். மாணவர்களது இந் நிலைக்கு பெற்றோர், ஆசிரியர்களே காரணம் எனலாம்.

தேசிய கல்வி இலக்குகள் இன்று இவ் மாணவர்களிடையே முழுவதுமாக நிறைவேற்றப்படாத் தன்மை காணப்படுவதால் அது பற்றிய தெளிவு எம்மிடையே இருப்பது மிக முக்கியமாகும். தொடர்பாடல் தேர்ச்சிகள் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து எழுத்தறிவுடமை, எண்ணறிவுடமை, சித்திர அறிவு, தகவல் தொழிநுட்பத் தன்மை என்பன அடையப்பெறல் வேண்டும். ஆனால் கருத்து பொதிந்த வாசிப்பிற்கோ, பொருத்தமான உரையாடலுக்கோ, நுட்ப அளவீடுகளுக்கோ, சித்திர பதிவுகளை ஏற்படுத்தவோ, தொழிநுட்பத்தை கையாளவோ சந்தர்பத்தை வழங்காமல் பரீட்சைக்கு விடையளிக்கும் இயந்திரங்களாக மாணவர்களை செயற்பட செய்கின்றனர். இதன் போது தொடர்பாடல் தேர்ச்சி முழுவதும் அடையப்பெறாமல் மாணவர்கள் நேரிய தொடர்புடனும், குழு உணர்வுடனும் வாழவல்ல தேர்ச்சி குறைவடைகிறது.

ஆளுமை தொடர்பான தேர்ச்சியை நோக்கும் போது மாணவர்களிடையே நுண்ணறிவு, சிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், கண்டறியும் திறன் போன்றன மேலோங்க வேண்டும் என விபரிக்கிறது. ஆயினும் புலமைப் பரிசில் பரீட்சையை நோக்காக கொண்டு ஆளுமை விருத்திக்குரிய செயற்பாடுகளிலிருந்து பிள்ளை சற்று பின்வாங்கும் நிலை உள்ளது. அதாவது தலைமைத்துத்தை ஏற்க மறுத்தல், பிரச்சனைக்கு முகங்கொடுக்காது விலகி நின்று பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தல் போன்றன குறிப்பிடத்தக்கன.

இது ஆளுமை சார் தேர்ச்சியை வலுவிழக்கச் செய்கிறது.
மாணவர்களுக்கு சூழல் தொடர்பான தேர்ச்சி முக்கியமான ஒன்றாகும். பௌதீக சூழல், உயிரியல் சூழல், சமூகச் சூழல் தொடர்பாக அடைய வேண்டிய தேர்ச்சிகள் பற்றி இதில் உரைக்கப்படுகிறது. இயற்கை சூழலின் வழியே பிள்ளையை கற்க விடாது, பாடசாலையிலிருந்து பிரத்தியேக வகுப்பிற்கும், கருத்தரங்குகளிற்குமாக முழு நேரமும் பாடத்தையே கற்றுக் கொடுப்பதால் சோர்வு, விரத்தி ஏற்பட்டு தம் கடமை, உரிமை, பொறுப்பு, நடத்தை மற்றும் ஏனைய சூழல் அம்சம் குறித்து நாட்டம் ஏற்படாது சூழல் தேர்ச்சி இவர்களுக்கு மழுங்கடிக்கப்படுகிறது. தரம் ஐந்து மாணவர்கள் பிள்ளை விருத்தி பருவத்தின் மிக தீர்க்கமான ஒரு கட்டத்தில் இருப்பதனால் இவர்களிடையே ஆக்க சிந்தனையும், ஆளுமைப் பண்புகளும், சமூகத்திறனும் விருத்தியடைந்து இசைவடையும். இதனால் கற்றலுக்காக சூழலுடன் இடைத் தொழிற்பாடுகளை நடத்துவது அவசியமாகும்.

இது மட்டுமன்றி வேலை உலகிற்கு தயாராகுதல் தொடர்பான தேர்ச்சியில் மாணவர்களின் தொழில் விருப்பையும் உளச்சார்பையும் கண்டறிதல், ஆற்றலுக்கு பொருத்தமான வேலையை தெரிதல் முதலியன பற்றி விபரிக்கப்படுகிறது. சமயமும் ஒழுகலாறுகளும் தொடர்பான தேர்ச்சிகள் மூலம் வாழ்வின் ஒழுக்க நெறி, சமய விருத்தி, விழுமியங்களை தன்மயமாக்கல், போன்றன பற்றி கூறப்படுகிறது. இவை சார்பான விருத்திகள் உங்கள் பிள்ளைகளிடம் வளர்க்கப்படுகிறதா? என்பது பற்றி சிந்தியுங்கள். பரீட்சையில் சித்தியடைவதற்காக பாடங்களை மனப்பாடம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை புரிந்து கொண்டு, விளங்கி கற்றலிலும், பிரயோகிப்பதிலும் வாழ்க்கைக்கு இசைவான முறையில் தேர்ச்சிகளை அடைவது முக்கியம் என்பது உணரப்பட வேண்டும்.

புலமை பரிசில் மாணவர்கள் அடைய வேண்டிய சவால் மிகு தேர்ச்சியாகவே ஓய்வு நேர பயன்பாடு, விளையாட்டு தொடர்பான தேர்ச்சி உள்ளது. இதில் அழகியற்கலை, விளையாட்டு, இலக்கியம், பொழுதுபோக்கு, ஆக்க பூர்வ செயற்பாடுகள், இன்ப நுகர்ச்சி போன்ற அம்சங்கள் தொடர்பாக விளக்கப்படுகிறது. ஆனால் இன்று பெற்றோர்கள் மட்டுமன்றி சில ஆசிரியர்களும் கூட பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதை மாத்திரம் கருத்திலெடுத்து  இப் பிள்ளைகளுக்கு விளையாடவோ, பொழுதுபோக்கு, கலை விடயங்களில் நேரம் செலவிடவோ அனுமதியளிக்காது பாடப் புத்தகத்தை மட்டும் கற்கச் செய்கின்றர். இதனால் பிள்ளைகள் தம் குழந்தைப் பருவத்தையே மறக்கும் நிலைக்கு ஆளாகி மனதளவில் மிகவும் பாதிப்படைகின்றனர்.

கற்றலுக்கு கற்றல் தொடர்பான தேர்ச்சியில் வேகமாகவும் சிக்கலடைந்து வருவதுமான அறிவுத் தொகுதியை உள்வாங்கவும், மாற்றத்திற்கு ஏற்ப இயங்கவும், நுன்மையான விடயங்களில் அதிக கவனத்தை வளர்த்தலும் தொடர்பாக குறிப்பிடப்படுகிறது. எனவே உரிய முறையில் கற்றல் இடம் பெறுவது குறித்தும், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் குறிப்பிட்டவாறு ஆசிரியர் கற்பிப்பது குறித்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் குறிப்பிட்டவற்றை ஆசிரியர்கள் வாசித்தறிந்து அவற்றை சூழலுடன் இயைபாக்கி கற்பித்தல் மேற்கொள்ளும் போதும் அழுத்தமின்றி சாதாரணமாக கற்பிக்கும் போதும் மாணவர்களால் இலகுவாகவும், மன அழுத்தத்திற்கு உட்படாமலும் கற்றலில் ஈடுபாடு அதிகரித்து தேர்ச்சிகளை எட்ட முடியும் என்பதை கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும்.

பரீட்சைக்கு முன்னதாக பெற்றோர், ஆசிரியரின் நச்சரிப்பினால் பாதிப்படைந்த பிள்ளை பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னரும் உடல், உள ரீதியாக பாதிப்படைகிறது. பரீட்சையில் சித்தி பெறுவதற்காக பாடப் புத்தகங்களையே அதிகம் படிப்பதால் பிள்ளைக்கு தலைவலி, வலிப்பு, பார்வை மங்குதல், மூச்சுத்தினறல், உளத்தாக்கம் போன்றவை ஏற்படலாம். இதனால் தேசிய கல்வி குறிக்கோள்கள் முழுவதும் அடையப்பெறுவதில்லை. புலமை பரிசில் பரீட்சையின் பின் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பத்திரிகை விளம்பரம், கட் அவுட் காட்சிப்படுத்தல்கள், வீடுகளில் ஆனந்த களிப்பு என்பன மகிழ்வை தந்தாலும் சித்தி பெறாத மாணவர்களுக்கு மென்மேலும் மன உளைச்சலையும், விரக்தியையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்களிடமே அடிக்கடி பிள்ளையை அழைத்து செல்லும் நிலையை இப் புலமை பரிசில் பரீட்சை ஏற்படுத்தினால் எதிர்கால புத்தி ஜீவிகளை எங்கே தேடுவது? பொதுத் தேர்ச்சிகளை எப்போது தடையின்றி அடைவது.

மாணவர்களது  உள ரீதியான பாதிப்பின்  எதிர்கால விளைவு குறித்து கல்விச் சமுதாயம் சிந்தித்து செயற்பட வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையின் ஆரம்பம் உயர் வகுப்பில் சித்தியடைவதற்கு எவ்வித தடையாகவும்  இருத்தல்  கூடாது. ஏனெனில் இப் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைவோரின் உயர்தர பெறுபேறுகள் பெரும்பாலும் மந்த நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனப் பாடம் செய்வதை விடுத்துவிட்டு உரிய பருவத்தில் உரிய தேர்ச்சிகளை அடையக் கூடியதாக மாணவர் மையக் கல்;வி முறைக்கமைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம் பெறுமானால் இப் பாதிப்புக்களை தடுத்துக் கொள்ள முடியும். பிள்ளை விரும்பி கற்கும் வகையில் பாடசாலையும் கற்றலும் அமைந்திடவும் வேண்டும்.

எனவே தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை அவர்களின் வழியிலேயே உணர்ந்து கற்கவும் அதை பிரயோகிக்கவும் அனுமதியுங்கள். மன அழுத்தங்களை ஏற்படுத்தா வண்ணம் கற்று தேசிய கல்விக் குறிக்கோள்களை  இயற்கையாகவே அடைய சந்தர்பத்தை ஏற்படுத்துங்கள். எனது பிள்ளை அல்லது எனது மாணவன் சித்தியடைந்து விட்டான் என தற் பெருமை சூட்டிக்கொள்ளவோ கௌரவத்திற்காகவோ உங்கள் பிள்ளையின் எதிர் காலத்தை நீங்களே பணயம் வைத்துவிடாதீர்கள்.

எமது பிள்ளைகள் ஈடு இணையில்லா சொத்து என்பதை உணர்ந்து அவர்களின் எதிர்காலத்தில் அக்கறை உடையவர்களாக செயற்படுங்கள். தன்னால் இயன்ற அளவிற்கு தான் பிள்ளைகளால் கற்றுக் கொள்ள முடியும். 'திணிக்கப்படுகின்ற எந்தவொரு கல்வியும் சீரணமாகாது'. ஆகையால் திணிக்கப்படுகின்ற கல்வி பயனற்றதே. விளையாட்டையும் புதுமையையும் விரும்பும் இப் பிள்ளை பருவத்திலே கல்வியை மேலும் திணிக்கும் போது பிள்ளைக்கு ஏற்படும் மன உளைச்சல் எதிர்கால கல்விக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்து விடலாம். பிள்ளை இயற்கைச் சூழலின் வழியே விரும்பி கற்கும் போது தான் படிப்படியாக கல்விக் குறிக்கோள்களை அடைந்து ஆக்கத் திறனுள்ள, ஆளுமை மிக்க, சிறந்த தொடர்பாடல் திறனுள்ள, விழுமியம் மிக்க, தலைமைத்துவப் பண்புடைய மாணவராக சமுதாயத்தில் திகழ முடியும்.

கற்றல் தேர்ச்சிகளை எய்து பரீட்சையை எதிர்கொள்ளும் போதே வாழ்கைக்கான உண்மையான வெற்றி கிடைக்கும் என்பதை இன்றைய சமுதாயம் உணர்தல் வேண்டும். கல்வி சார்பாக அடைய வேண்டிய தேர்ச்சிகளை இம் மாணவர்கள் எய்யும் போது  பெறுமதியான ஓர் மாணவ சமூகம் உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மதுமிதா புவனேந்திரன்
2ம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்.