திருக்கோயில் பிரதேச செயலகம் சமுர்த்தி பயனாளிகளால்,முற்றுகை



(துறையூர் தாஸன்)

திருக்கோயில் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலக செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையிலும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட இணைத் தலைவருமான கவீந்திரன் கோடீஸ்வரன்,மாகாண சபை உறுப்பினர் எம் ராஜேஸ்வரன்ஆகியோரின் மேற்பார்வையில்,பிரதேச செயலக கோட்போர் கூடத்தில் இன்று(14) இடம்பெற்றது.

அவ்வேளையில்,திருக்கோயில் பிரதேச செயலகத்துக்குக்கு முன்னால்  நின்று பெரும் கோசங்களை எழுப்பியவாறு பிரதேசத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகளின் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு,பிரதேச செயலாளரின் இருப்பிடம் நோக்கி நகர்ந்து வந்தனர்.

பொதுமக்களின் பெரும் கோசங்களை கேட்ட பிரதேச செயலாளர்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்  கேட்போர்கூடத்தில் இருந்து இறங்கி வந்து,சமுர்த்தி பயனாளிகளின் உண்மைப் பிரச்சினைகளை இதன்போது கேட்டறிந்தனர்.


வறுமையில் வாழும் எங்களுக்கு சமுர்த்தி முத்திரை வெட்டப்பட்டுள்ளதென்றும் எனது பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதுடன் ஒரு பிள்ளை இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுத இருக்கிறாள்.இவ்வேளையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், எங்களுக்கு தரப்பட்ட முத்திரையினை வெட்டியுள்ளனர்.எங்களது வீடுகளுக்கு வந்து பாருங்கள்,நாங்கள் எவ்வாறான சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம் என சமுர்த்திப் பயனாளி ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமுர்த்தி பயனாளிகளின்  பிரச்சினைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர்,அலுவலர்கள் ஆகியோர்,இன்னும் சில நாட்களில் மக்களின் வீடுகளுக்கு வர முடிவெடுத்துள்ளோம் எனவும் உங்களின் பிரச்சினைகள் வெகு விரைவில் தீர்க்கப்படும் என்று வாக்குறுதியளித்தனர்.

இதன்பின்னர் மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.