20வது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து ஒரு இறுதி முடிவு இதுவரை வெளியிடவில்லை-கி. துரைராசசிங்கம்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டாலும் அது 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக அவர்கள் அறிந்து வைத்திருக்கக் கூடிய சொந்தக் கருத்துக்களே அதனைக் கூறுவதற்கு அவர்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு இருப்பினும் அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து ஒரு இறுதி முடிவு இதுவரை வெளியிடவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டத்தில் தொடர்பாக நேற்று (06) புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடு தொடர்பாக தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம் அவர்களிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 20வது சட்டமூலம் தொடர்பில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக வழக்குகளும் பல தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன வழக்கின் தீர்ப்புகளும் வர இருக்கின்றன. இதற்கு இடையிலே அதிலே பல திருத்தங்கள் வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடாக இருக்கின்றது. இதில் அதிகாரங்களையெல்லாம் பாராளுமன்றத்திற்கு கையளிப்பதாகவும் ஒரு கருத்துரை நிலவிக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக நாங்கள் ஆழ்ந்து ஆராய வேண்டி இருக்கின்றது.

மாகாணசபையைக் கலைக்கின்ற அதிகாரம் என்பது முதலமைச்சரினுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் ஜனாதிபதியினால் செய்யப்படுகின்ற ஒரு விடயம். இந்த விடயம் இப்போது வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இருக்கின்ற ஏற்பாட்டை அது பாதிக்கும் என்பது தொடர்பாக இன்னும் ஆழமாக நாங்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்த அடிப்படையிலே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருடன் செய்து கொண்ட சில கலந்துரையாடல்களின் அடிப்படையிலே பிரதமர் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவார். அதில் அவர் இச்சட்டத்தில் ஏற்படுத்தக் கூடிய திருத்தங்கள் பற்றி சொல்லுவார் என்று நினைக்கின்றோம்.

இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்பாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டாவது வாசிப்பின் போது இதற்கான திருத்தங்களை முன்மொழியக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதற்கேற்ற வகையிலே திருத்தங்கள் முன்மொழியப்பட வேண்டும்.

இதில் இரண்டு முக்கிய விடயங்கள் இருக்கின்றது. தற்போது காலம் முடிவடையப் போகின்ற சபைகளுடைய காலத்தை நீட்டுவது, அதே நேரத்தில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடாத்துவது என இரண்டு விடயங்கள் இருக்கின்றன. இதில் ஒரே நேரத்திலே தேர்தல்களை நடாத்தவது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் எல்லாத் தேர்தல்களும் ஒரே சீர்த்தண்மை உள்ளதாக இருக்க வேண்டும் என்கின்ற விடயம் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இதற்கேற்ற வகையிலான திருத்தம் வேண்டும் என்பது எல்லோரும் உணர வேண்டிய விடயம்.

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடாத்துவதற்காகத் தான் இதனுடைய காலத்தை நீட்டுவதாக அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். இது ஜனநாயகப் பார்வையிலே பார்க்கும் போது மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு மேலதிகமாக ஒரு சபையினால் செயற்பட முடியுமா என்கின்ற ஒரு நியாயமான கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது.

எந்தவொரு விடயத்தையும் அறுத்தகல் போன்று மாத்திரம் பார்க்கக் கூடாது. சில சில விடயங்களில் சில விதிவிலக்குகள் கையாளப்பட வேண்டி இருக்கும் என்றால் அது நியாயப்படுத்தப்பட்டு கையாளப்பட வேண்டும். அவ்வாறு பார்க்கின்ற போது இந்த கால நீடிப்புத் தேவை என்ற விடயம் தொடர்பாக நியாயப்படுத்தல்கள் முன்வைக்கப்படுமாயின் அது தொடர்பாக நாங்கள் சிந்திக்க முடியும் என்றார்