நாட்டின் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சுற்றுலாத்துறை: ஓர் சமூகவியல் பார்வை



அறிமுகம். 
உலகளவில் நிலைபேண் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் ஓர் துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கியமான அங்கமாக விளங்குகின்றது. இன்று சுற்றுலாத்துறை பல வேலைவாய்ப்புக்களையும், பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான வருவாயையும் நாடுகளுக்குப் பெற்றுக் கொடுக்கின்றது. அதுமட்டுமன்றி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பிரதானமான அபிவிருத்தி அங்கமாகவும் சுற்றுலாத்துறை அமைகின்றது. நாட்டின் தரைத்தோற்றம், இயற்கை அமைவிடம், பௌதீக, உயிரியல், சூழலியல் விடயங்கள், காலநிலை, தனித்துவம் மிக்க இயற்கை அம்சங்கள், கலாசார மையங்கள் மற்றும் விசேடமான நிகழ்வுகள், விளையாட்டுகள் போன்றன சுற்றுலாப் பயணிகளை கவரும் விடயங்களாகக் காணப்படுகின்றன. 

சுற்றுலாத்துறை பொருளாதாரம், புவியியல், சூழலியல் போன்ற துறைகளோடு தொடர்பினைக் கொண்டிருப்பதைப் போன்று சமூகவியலுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. இத்தகைய தொடர்பே ஜேர்மனியில் 'சுற்றுலாத்துறை சமூகவியல்' (Sociology of Tourism) தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. புலம்பெயர்வு, சுற்றுலாத்துறை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்கள், சூழற் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை வகைகள், சுற்றுலாத்துறை முறைமை போன்ற விடயங்களைப் பற்றி சுற்றுலாத்துறை சமூகவியல் பருநிலையான பார்வையைச் செலுத்துகின்றது.  

இவ்வகையில் சமூகவியல் ரீதியாக சுற்றுலாத்துறை 2 வகையாக நோக்கப்படுகின்றது.

1. சுற்றுலாத்துறை பற்றிய சமூகத் தோற்றப்பாடு
2. சமூகப் பொருளாதார அடிப்படையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி


1. சுற்றுலாத்துறை பற்றிய சமூகத் தோற்றப்பாடு.
நவீன உலகின் பல்வேறு காரணிகள் சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதற்குரிய சமூகத் தோற்றப்பாடாகக் காணப்படுகின்றன. அவை,
1. சனத்தொகை அதிகரிப்பு.
2. தீவிர வேகத்தில் அதிகரித்துவரும் நகரமயமாக்கமும், நகரமயமாக்க சூழலால் ஏற்படும் அழுத்தங்களிலிருந்து விடுபட எண்ணும் ஆசைகளும்.
3. வளர்ச்சியடைந்து வரும் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினூடாக உருவாக்கப்படும் விழிப்புணர்வும், தூண்டுதல் உணர்வுகளும்.
4. சமூக அசைவியங்களில் காணப்படும் மாற்றமும், போக்குவரத்து வசதிகளின் அதிகரிப்பும்.
5. ஓய்வு நேரம் மற்றும் நீண்ட கால விடுமுறையின் அதிகரிப்பு.
6. வணிக சுற்றுலாத்துறைக்கு உலக சந்தைகளில் ஏற்பட்ட கேள்வி அதிகரிப்பு.


இவற்றோடு இழுவிசை மற்றும் தள்ளு விசை காரணிகளும் உள்ளடங்குகின்றன.
தள்ளுவிசைக் காரணிகள்.
நகரமயமாக்கம், சனத்தொகை அதிகரிப்பு, மாசடைதல் போன்ற காரணிகள் மக்களை நாடுகளிலிருந்து வெளியேறிச் செல்வதற்கான தூண்டுதல்களாக அமைகின்றன. 
இழுவிசைக் காரணிகள்.
இயற்கை நில அமைவுகள், காலநிலை அல்லது சில நாடுகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகள் பெருந்தொகையான மக்களை தம்பால் ஈர்க்கும் காணிகளாக அமைகின்றன. 

2. சமூகப் பொருளாதார அடிப்படையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி.
கைத்தொழில்மயமாக்கம், கல்வி, உயர் தொழில்நுட்பம், தொழில்சார் நிபுணர்களின் அதிகரிப்பு, வெளிநாட்டுச் சந்தைப்படுத்துதலின் அதிகரிப்பு, தாராண்மை வாத வணிகக் கொள்கைகள் போன்ற உத்திகளின் மூலமாக சமூகப் பொருளாதார அடிப்படையில் சுற்றுலாத்துறையின் வளர்;ச்சிப் போக்கின் செல்வாக்கு அதிகரிக்கின்றது. 

சுற்றுலாத்துறையின் வகைகளும், அவற்றுள் உள்ளடங்கும் கிராமிய மற்றும் சூழலியல் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவமும்.
மகிழ்ச்சிகர சுற்றுலா – மக்களின் பௌதீக மற்றும் உள ரீதியான விருத்திக்காக    மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும்.

வாணிப சுற்றுலா – மாநாடுகள், கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும்.
இயற்கை சுற்றுலா - இயற்கை நிலத்தோற்றங்களையும், வன விலங்குகளையும் பார்வையிடுவதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும். 

கலாசார சுற்றுலா – வரலாறு, வழக்கடிபாடுகள், சமயம், பண்பாடு போன்றவற்றை பார்வையிடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்றது.
சமூக சுற்றுலா – குடும்ப அங்கத்தவர்களோடும் மற்றும் நண்பர்களோடும் கூட்டுறவைப் பேணுவதற்காக இவ்வகையான சுற்றுலா மேற்கொள்ளப்படுகின்றது.

மீளுருவாக்க சுற்றுலா – நாளாந்த வாழ்க்கை முறைகளிலிருந்து விடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும்.

உற்சாக சுற்றுலா – புதிய மொழிகளைக் கற்றல், மலையேறுதல் போன்ற நோக்கங்களுக்காக இவ்வகையான சுற்றுலா மேற்கொள்ளப்படுகின்றது.
விளையாட்டு சுற்றுலா – விளையாட்டில் பங்குகொள்ளவும், அவற்றைப் பார்த்து இரசிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும்.

சமய சுற்றுலா – சமய முக்கியஸ்தலங்கள் உள்ள இடங்களை பார்வையிட மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும்.

மருத்துவ சுற்றுலா – உடல்நலன்களைப் பேணவும், சிகிச்சைகளுக்காகவும் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும்.

வீரதீர சுற்றுலா – வீரச் செயல்களை நிறைவேற்றும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் சுற்றுலாவாகும்.

கிராமிய சுற்றுலாத்துறை.
கடந்த தசாப்தத்திலிருந்து அபிவிருத்தியின் மிக முக்கிய அங்கமாக கிராமிய சுற்றுலாத்துறை விளங்குகின்றது. ஐ.நாடுகளின் உலக சுற்றுலா ஸ்தாபனத்தின்படி கிராமிய சுற்றுலாத்துறை என்பது 'நாட்டுப்புற, பௌதீக மற்றும் மனித சூழலை இரசிப்பதும் மற்றும் உள்ளுர் மக்களின் பாரம்பரிய செயன்முறை மற்றும் வாழ்க்கை முறைகளில் பங்கெடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய சுற்றுலாவாகும்'. விவசாய சுற்றுலாத்துறை, பண்ணை சுற்றுலாத்துறை, கலைகள், கிராமிய வாழ்க்கை போன்ற விடயங்கள் கிராமிய சுற்றுலாத்துறையுடன் இணைந்தவையாகக் காணப்படுகின்றன. 
உலகளாவிய ரீதியாக கனடா (ஒன்டாறியோ), நியூஸிலாந்து (டுனேடின்), அவுஸ்ரேலியா (குயின்ஸ்லாந்து), தென் ஆபிரிக்கா, றோமானியா, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி போன்ற இடங்கள் கிராமிய சுற்றுலாத்துறைக்குரிய பிரசித்தி பெற்ற இடங்களாக விளங்குகின்றன. கிராமிய மக்களின் தொழில்வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம், கிராமிய கைவினைத்திறன் உற்பத்திகளின் கேள்விகளை அதிகரித்தல் மூலமாக கிராமப் புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதலை மையமாகக் கொண்டதாக இச்சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. இலங்கையில் கிராமிய சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி என்பது இன்றைய நிலையில் குறைவானதாகவே காணப்படுகின்றது. ஏனைய சுற்றுலாத்துறை வகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிராமிய சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு காட்டப்படுவதில்லை. இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்களாக விளங்கும் இடங்கள் பெரும்பாலும் கிராமங்களை அண்டிய பிரதேசங்களாகவே காணப்படுகின்றன. எனவே இலங்கை அரசாங்கம் இனிவரும் காலங்களில் கிராமிய சுற்றுலாத்துறை அபிவிருத்தியை நோக்கமாமாக் கொண்ட வகையில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். 

சூழல் சுற்றுலாத்துறை.

தற்காலத்தில் சூழல் சுற்றுலா மிக முக்கியமான எண்ணக்கருவாகக் காணப்படுகின்றது. சுற்றுலாத்துறை ஏற்படுத்திய பாதகங்களைக் குறைப்பதன் பொருட்டாகவே சூழல் சுற்றுலாத்துறையின் செயற்பாடுகள் அமைகின்றன. இது நிலைத்திருக்கும் சூழல் அபிவிருத்தியை மையமாகக் கொண்டதாகும். அதாவது சூழல் சுற்றுலாத்துறை என்பது 'இயற்கை வனப்புள்ள பிரதேசங்களுக்கு பிரயாணங்களை மேற்கொண்டு பொறுப்புள்ளவர்களாக நடப்பதையும், சூழலைப் பாதுகாப்பதையும், மற்றும் உள்ளுர் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதையும் மையமாகக் கொண்டதாகும்'(சர்வதேச சூழல் சுற்றுலா சமூகம்). சூழல் 

சுற்றுலா சில பண்புகளைக் கொண்டதாகும்.
1. இயற்கை சார்ந்தது.
2. சூழலின் நிலைத்திருப்பிற்கு உதவுகின்றது.
3. உள்ளுர் மக்களுக்கு நன்மையானதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சூழல் சுற்றுலா மிகவும் பிரபல்யமானதாகும். பெரும்பாலான வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இயற்கை சார்ந்த சூழலை இரசிப்பதற்கே விரும்புகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் வில்பத்து சரணாலயம், யால, குமண, புத்தள, கல்ஓயா தேசிய பூங்கா, கல்பிட்டிய, கித்துகல, மன்னார், மீமுரே, மிரிஸ்ஸ, பின்னவல, சிவனொளிபாத மலை, சிங்கராஜ வனம், ஹபரண, சிகிரியா, நீர்வீழ்;ச்சிகள் போன்ற இடங்கள் சூழல் சுற்றுலாக்குரிய பிரதான மையங்களாக விளங்குகின்றன. 

சுற்றுலாத்துறை ஏற்படுத்தும் சமூக-கலாசார தாக்கங்கள்.
சுற்றுலாத்துறை பல்வேறு வழிகளில் உள்நாட்டு பண்பாடுகளின் மீது தாக்கங்களைச் செலுத்துகின்றன. சுற்றுலாத்துறையுடனும், சுற்றுலாப் பிரயாணிகளோடும் மக்கள் கொண்டுள்ள உறவே நேரடியானதும், மறைமுகமானதுமான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. இத்தகைய தாக்கங்கள் சமுதாய மாற்றம், தனிநபர் நடத்தை மாற்றம், வாழ்க்கை நடைமுறை மாற்றம் போன்றவற்றுக்கு வழிவகுக்கின்றன. 
சாதகங்கள். 
பெருந்தொகையானளவு சுற்றுலாத்துறைக்காக செலவு செய்யப்படும் முதலீடு உள்ளுர் பாரம்பரியங்களை விருத்தி செய்வதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உதவுகின்றது.
உள்ளுர் மக்களால் சுற்றுலாப் பயணிகளுக்காக வழங்கப்படும் சேவைகள் உள்ளூர்  மக்களின் தொழில்வாய்ப்பு, ஜீவனோபாயம், கல்வி போன்றவற்றுக்கு வழிவகுக்கின்றன.
பாதகங்கள்
நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கின்றன.
நோய்கள் பரவுதல்.
உள்நாட்டுப் பொருட்களின் விற்பனை அதிகரிப்பு.
பண்பாட்டின தனித்துவம் இழக்கப்படுதல்.
சூழல் மாசடைதல் பிரச்சினைகள் அதிகரித்தல்.
சுற்றுலாத்துறை நாட்டின் அபிவிருத்திக்கான மூலாதாரமாக விளங்கினாலும் சூழல், சமூக மற்றும் கலாசார ரீதியாக சாதக மற்றும் பாதக நிலைமைகளை ஏற்படுத்துகின்றது. 

இலங்கையும், சுற்றுலாத்துறையும்.
இயற்கை எழில் மிக்க நாடாகவும், இயற்கையான தரைத்தோற்றப் பின்னணியையும், சௌகரியமான காலநிலையையும் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதால் சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. யுத்தகாலப் பகுதியினுள் சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படினும் அதன் பின்னர் ஏற்பட்ட இலங்கை மீதான சர்வதேச பார்வைகள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்யவும் காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பிரயாணிகள் அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா கண்டங்களிலிருந்து வருகை தருகின்றனர். 

இலங்கை சுற்றுலாத்துறை மூலம் பாரியளவான தேசிய வருமானத்தை பெற்றுக் கொள்கின்றது. முந்தைய அரசாங்கத்தின் 'ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுதல்' கொள்ளையின் தொடர்ச்சியாக புதிய அரசாங்கத்தினாலும் பல்வேறு வகையான செயற்கையான நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதும் குறிப்படத்தக்கதாகும். இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறைக்கு 5.1% பங்கினை மொத்த தேசிய வருமானத்திலிருந்து 2016இல் முதலீடு செய்தது. எனினும் 2017 – 2027 வரையான காலப்பகுதியினுள் 6.6% ஆக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2016இல் 2 மில்லியன் உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதனால் நேரடியானதும், மறைமுகானதுமான தொழில்வாய்ப்புக்கள் 5.1 %ஆக அதிகரித்துள்ளது. 2016இல் 8.4% ஆன சுற்றுலாப் பிரயாணிகள் உல்லாச நோக்கமாகவும், 11.5 %ஆனவர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்திப்பதற்காகவும், 1.8%ஆன பிரயாணிகள் வாணிப நோக்கமாகவும், 0.8% ஆனோர் மாநாடுகள், கூட்டங்கள் போன்றவற்றுக்காகவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளில் 54.7%ஆனோர் பெண்களாகவும், 45.3%ஆனோர் ஆண்களாகவும் உள்ளனர்(இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை). இவ்வாறு இலங்கையின் அபிவிருத்தியில் சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்புகளை வழங்குகின்றது. 

முடிவுரை.
70ஆவது ஐ.நாவின் கூட்டத்தொடரில் 2030இற்குள் நிலைபேண் அபிவிருத்தியை அடைவதற்கான இலக்குகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இத்தகைய இலக்குகளை அடைவதில் ஐ.நாவின் உலக சுற்றுலாத்துறை ஸ்தாபனத்திற்குப் பெரும் பங்குள்ளது. ஏனெனில் இந்த ஸ்தாபனம் அரசாங்கம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதோடு, நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தியை சுற்றுலாத்துறை அடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகவுள்ளது. அத்தோடு உலகளவில் எதிர்காலத்தில் 8.9%ஆக வேலை வாய்ப்புக்களையும், உள்ளுர் உற்பத்திகளையும் 2030இற்குள் அதிகரிப்பதற்கு இந்த ஸ்தாபனம் எதிர்பார்த்துள்ளது. 

இவ்வாறு சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்பினை வகிக்கின்றது. எனவே சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்த வகையில் நிலைபேண் சுற்றுலாத்துறையின் அவசியத்தை உணர்ந்து செயற்படுமிடத்தே சுற்றுலாத்துறையின் மூலம் ஏற்படும் எதிர்நிலையான தாக்கங்களை விலக்கி நாட்டின் நிலைபேண் அபிவிருத்திக்கான சாதக நிலைமைகளையும், சமூக கலாசார ரீதியான மேம்பாடுகளையும் அடையமுடியும். இதனால்தான் சுற்றுலாத்துறையின் மகத்துவம் உணர்ந்த வகையில் செப்ரெம்பர் 27ஆம் திகதி உலக சுற்றுலாத்துறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


செல்வி.பு.டயசியா
சமூகவியல் மற்றும் மானிடவியல்,
சமூக விஞ்ஞானங்கள் துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை



உசாத்துணை நூல்கள்.

1.      Annual Statistical Report 2016, Sri Lanka Tourism Development Authority: Research & International Relations Division
2.      Beirman,D. ( 1997), “Restoring Tourism Destination Crises. CABI Publishing
3.      Bramwell,P.M  & Lane, B. (Eds) .(1993), “Rural Tourism and Sustainable Rural Development .Clevedon: Channel view Publications
4.      Luiz, A. (2003), “Sustainable tourism development: a critique”, Journal of Sustainable Tourism – II
5.      Travel & Tourism Economic Impact 2017 Sri Lanka, World Travel & Tourism Council. EVELYNE PREIERMUTH: Policy & Research Manager