மட்டக்களப்பு மாநகரசபையினால் குப்பை கொட்டப்படும் நாவற்குடா குப்பை மேட்டிற்கு தீ மூட்டிய சில விசமிகள்

மட்டக்களப்பு மாநகரசபையினால் குப்பை கொட்டப்படும் நாவற்குடா குப்பை மேட்டிற்கு சில விசமிகள் தீ வைத்துள்ள நிலையில், குப்பைமேடு பற்றி எரிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை இருள்சூழ்ந்த பின்னர், சில விசமிகள் இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர்.

தீயை அணைக்க மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும், இன்று (வியாழக்கிழமை) காலையே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால், மக்கள் சுவாசிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

நாவற்குடா பிரதேசத்திலுள்ள குறித்த தனியார் காணியில் காணிச் சொந்தக்காரரின் அனுமதியுடன் மட்டக்களப்பு மாநகரசபை கடந்த ஆறு மாதங்களாக குப்பைகளைக் கொட்டி வருகின்றது. தினமும் ஆறு தொன் குப்பைகள் இவ்வாறு கொட்டப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், குறித்த காணியின் முன்கதவை உடைத்த விசமிகள் தீவைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காணியின் உரிமையாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.