புலமைப்பரிசில் பரீட்சை; விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள், நேற்று(31) ஆரம்பமாகின. அந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படும் என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று நடைபெற்ற இந்தப் பரீட்சையில், 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பரீட்சார்த்திகள் தோற்றினர்.  

அதனடிப்படையில், விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள், 384 மதிப்பீட்டு சபைகளின் ஊடாக,40 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

மதிப்பீட்டு பணிகளுக்கென 6,965 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கல்விப்பொது தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகளில் முதலாவது கட்டம், செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

இதன் இரண்டாவது கட்டம், செப்டெம்பர் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலும் மூன்றாவது கட்டம் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரையிலும் இடம்பெறும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.  

முதலாவது கட்ட நடவடிக்கைகளுக்காக, ஐந்து பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளன. அதற்கென, 31 மத்திய நிலையங்களில் 446 மதிப்பீட்டு சபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கென 9,245 ஆசிரியகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.