அம்பாறையில் சுனாமி பதற்றம்; கரையோர மக்கள் இடம்பெயர்வு- சுனாமி ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லை

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் ஏற்பட்டுள்ள சுனாமி பதற்றம் காரணமாக, கரையோர மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடல் நீர் உள்வாங்கியமையாலும் கிணறுகளிலுள்ள நீர்மட்டம் திடீரெனக் குறைந்தமையாலும் இந்தப் பதற்ற நிலையேற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்புப் பகுதிகளில் காலை 10.30 மணியிலிருந்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கரையோரப் பாடசாலைகள் சில மூடப்பட்டதுடன், அலுவலகங்கள், நிறுவனங்கள் சிலவும் மூடப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், தொழில்நுட்ப ரீதியில் தாம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பிரகாரம், சுனாமி அபாயமே அல்லது வேறு அனர்த்தங்களோ அம்பாறையில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லையென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.