
கிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு ஒளி கொடுத்த சேவகனும்;, தமிழர்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்து, சமூக நலனுக்காக பாடுபட்ட அமரர் திரு. வி. நல்லையாவின் ஞாபகர்த்த நினைவுப் பேருரையானது, அவரால் ஸ்தாபிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவருடைய பெயர் சூட்டப்பட்ட நல்லையா நினைவு மண்டபத்தில் அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கிழக்குப்பல்கலைக்கழக வளாகத்தினுள் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் பண்பாட்டுப் பவனியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்குப்; பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் கலந்து சிறப்பித்தார். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி.வே.விவேகானந்தராஜா மற்றும் பிரதி உபவேந்தர்.க.கருணாகரன் அவர்களுடன் அனைத்துப் பீடங்களின் பீடாதிபதிகளும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளின் வரிசையில் தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் என்பற்றை கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் நிகழ்த்தியிருந்தனர். வரவேற்புரையினை கிழக்குப்பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறையினைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.க.சத்தியசேகர் அவர்கள் நிகழ்த்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையானது கிழக்குப்பல்கலைக்கழக கலைகலாசார பீட பீடாதிபதி மு.ரவி அவர்களால் நிகழ்த்தப் பட்டிருந்தது.
இந்நிகழ்வின் கதாநாயகனாக விளங்கிய நல்லையா பற்றிய நினைவுப் பேருரையை நிகழ்;த்தியிருந்த ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களைப் பற்றிய அறிமுகத்தினை, 2017ம் ஆண்டுக்குரிய நல்லையா ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், இந்து நாகரிகத்துறையின் தலைவருமான கலாநிதி.(திருமதி).சாந்தி கேசவன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து 'நல்லையாவும் இன்றைய கல்வி நிலையும்' எனும் தலைப்பில் நினைவுப் பேருரையை ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் நிகழ்;த்தியிருந்தார்.
இறுதியாக கிழக்குப்பல்கலைக்கழக கல்வி,பிள்ளை நலத்துறையினைச் சேர்ந்த விரிவுரையாளர் திரு.ம.சந்துரு அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.
தகவல்
கீ.பால்ராஜ்
தற்காலிக உதவி விரிவுரையாளர்
இந்து நாகரிகத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்





















