நவீனம் காணும் இன்றைய உலகில் 'நகையணிந்த நங்கையர் நள்ளிரவில் நடுத்தெருவில் தனியே நடமாடக்கூடிய சூழலொன்றை உருவாக்குவது எனது எதிர்பார்ப்பு 'என்று இலங்கையின் ஜனாதிபதிகளுள் ஒருவர் குறிப்பிட்டார். அத்துடன் 'விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப்பெண்கள் விரைவில் ஒளிப்பர்' என்று பாரதி எதிர்பார்க்கும் புதுமைப் பெண் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்பு இவ்வாறான சூழல் உலகிலிருந்தது. எனினும் அட்டூழியங்கள் நிறைந்து விட்ட இந்த நிலையில் அவ்வாறானதொரு சூழலையல்ல உயிரையும், உடமைகளையுமாவது பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுமாயின் அதுவே போதுமென்ற மனநிலைக்கு இன்றைய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு இன்றைய காலகட்டத்தில் நமது சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளாக பின்வருவனவற்றை இனம்காணக்கூடியவாறு உள்ளது .
அனைவருக்கும் அழகானதும் நிம்மதியானதுமான வசிப்பிடம் தமது வீடாகும். வீட்டில் அமைதி நிலவும் போதே குடும்பத்தில் அமைதி நிலவும். கல்வி, பொருளாதாரம், நலவியல் என்பவற்றிற்குகந்த அடிப்படைச்சூழல் உருவாகும் எனினும் அந்த நிம்மதியான வாழ்கையை கெடுக்க பல்லாயிரம் மிலேச்சத்தனமும் மிருகத்தனமும் நிறைந்த கள்வர்களும், கயவர்களும் வேவுபார்த்தவண்ணமுள்ளனர். வீட்டின் நிலைமையை அறிந்து கொள்ள வியாபாரியாக, அலங்கரித்த ஆடவராக ஏன் ஒரு பிச்சைக்காரியாக கூட வந்து போகலாம். அத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டும் உளவு பார்த்து விட்டு திருட்டை மேற்கொள்கின்றதை நமது நாட்டில் அதிகளவில் காணக்கூடியவாறு உள்ளது. அத்துடன் தங்கச்சங்கிலிகளை அறுத்துவிட்டு துஷ்பிரயோகப்படுத்தி கொலைசெய்கின்ற நிலையையும் அண்மைக்காலங்களில் அதிகளவில் அவதானிக்கமுடிகின்றது. இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 2016 ம் ஆண்டு குற்றத்தரவின்படி 36767 குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 3455 திருட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த ஆண்டுவரையான குற்றச்செயல் மற்றும் பாதுகாப்பு அறிக்கையில் வீட்டில், சுற்றுலா, விளையாட்டு, வெளிநாட்டவர்களிடத்து அதிகளவில் திருட்டு இடம் பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.Corruption Perception Index 17(CPI)2016 168 நாட்டில் 83 வது இடத்திலும் மாவட்டங்களில் 95 /176 ல் 36வது இடத்திலும் உள்ளது. இவற்றைக் குறைத்துக்கொள்ள முதலில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தனிமையில் செல்வதை கூடியளவு குறைத்துக்கொள்ள வேண்டும் அத்துடன் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தக்க உபகரணங்கள்(pin), சிறு கருவிகள்; மற்றும் ஸ்பிரேக்கள் (paper spray) போன்றவற்றை ஆயத்தமாக கொண்டு செல்லல் வேண்டும். பாதுகாப்பானவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருத்தல் மற்றும் இவை சார்ந்த விழிப்புணர்வினை பாடசாலைகளிலும், பொலிஸ் நிலையங்களும் கருத்தில் கொண்டு கருத்தரங்குகளை வழங்குதல் , குற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கையில் ஏற்ற பொறுப்பதிகாரிகள் முழு மனதுடன் செயற்படல் போன்றன பயனளிக்கும்.
உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் முக்கிய பிரச்சினையாக பட்டி தொட்டி எங்கும் பேசப்படும் காரிருள் போன்ற விடயமாக சிறுவர் துஷ்பிரயோகம் காணப்படுகிறது. இது பல்வேறுபட்ட வடிவங்களில் பயணிக்கிறது சிறுவர்களை அடிமைப்படுத்தல், வேலைக்கு அமர்த்துதல் , தண்டனை வழங்குதல், பாலியல் துஷ்பிரயோகம் போன்றனவாக அமைகின்றது. ஆனால் அண்மைக்காலமாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகமும், பாடசாலைகளில் மாணவர்கள் தண்டனைகளும் பரவலாக சமூகத்தை சேதம் பண்ணிக்கொண்டு வருகிறது. பாலியல் ரீதியான துஷ்பிரயோகமானது நோய்களை விட உயிர்களை காவுகொள்கின்ற சமூகத்தை ஆட்டிப்படைக்கும் வைரஸாக அடையாளப்படுத்தினால் அது மிகையாகாது. Sri Lanka Nation Child Protection Authority Island (NCPA) தரவின்படி 2015 வரையான காலப்பகுதிகளிற்குள் 10732 துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக கூறுப்படுகின்றது.
இதற்குள் பாலியல் துஷ்பிரயோகம் 433 அமையப்பெற்றுள்ளதாக நடேசா பாலேந்திரா கூறியுள்ளார். பிறந்த குழந்தையைக்கூட துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது. வீட்டில் சிறுவர்;களை சொந்த பெற்றோர்களிடமே பாதுகாப்பாக விட்டுச்செல்வதற்கான ஜயப்பாடு ஏற்பட்டுள்ளது. 'வேலியே பயிரை மேய்ந்தது' போன்ற நிலையாக காமுகர்கள் செயற்பாடு கொடுமையாக உள்ளது. தகப்பன், மாமா, மாமி, சித்தி, சித்தப்பா, பாட்டன், நண்பன், நண்பி, அயலவன், ஆசிரியர் என்று உறவினர்களை அழைக்கும் நிலை மாறி சிலர் அழிக்கும் உறவினர்களாக சமூகத்தில் இனம் காணப்பட்டுவருகின்றனர். இதனால் பாலியல் வல்லுறவுகள், உயிர் இழப்புக்கள், ஒழுக்க சீர் கேடுகள் ,உள ரீதியாக பாதிக்கப்படல், எதிர்கால வாழ்கை கேள்விக்குறியாக்கப்படல் ,கருக்கலைப்பு போன்ற கேடுகளை ஏற்படுத்தி நிற்கின்றது. இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு முதலில் குடும்பமே பொறுப்புடன் செயற்பட வேண்டும். நம்பிக்கையற்றவர்;களிடம் பிள்ளைகளை விடுவதை தவிர்த்தல், பிள்ளைகளுடன் அனுதினமும் தொடர்பை ஏற்படுத்துதல், பிள்ளைகளை தனிமையில் விடுவதை தவிர்த்தல், பிள்ளைகளிற்கு நல்ல தொடுதல், தீயதொடுதலை சுட்டிக்காட்டுதல் போன்றன பிரச்சினை குறைப்பதாக அமையும்.
'சமூகத்தின் முக்கிய நிறுவனமாக திகழுவது பாடசாலையாகும்' இது ஒட்டோவாவின் கருத்து இத்தகைய பாடசாலைகளிலும் கூட ஆசிரியர்கள் , பாடசாலை சார்ந்தவர்களால் பாலியல் குறித்த பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது.
இதற்கு மாணவர்களிடம் பாலியல் ரீதியான விழிப்பின்மையும் காரணமாகும். இதனை தவிர்ப்பதற்கு பாலியல் ரீதியாக சூழலில் ஏற்படும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கற்பித்தல், வழிகாட்டல் பிரிவை பாடசாலைகளில் முறையாக அமைத்தல், வழிகாட்டல் ஆலோசனைக்காக தகுதி வாய்ந்த ஆளனியினரை பாடசாலையில் நியமித்தல், பாலியல் கல்விக்கென்று தனியான ஆலோசகரை நிர்ணயித்தல், ஒரேபாலான ஆசிரியர்களை வழிகாட்டுவதற்கு நியமித்தல், கலவன் பாடசாலைகளில் பாலியல் ரீதியாக கற்றலை மாணவ, ஆசிரியர் பிரிப்பை ஏற்படுத்தி வழங்கள், பாடசாலை, வெளிச்சூழல் போன்றவற்றில் பாலியல் அறிவை ஏற்படுத்த கருத்தரங்கு , விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேலும் அரசாங்கம் ஏற்படுத்தல், முழுமையான பாடத்திட்டத்தை வடிவமைத்தல் போன்றவற்றையும் காவற்துறையினரும் இறுக்கமான சட்டத்தை ஏற்படுத்துவதும், சட்டத்தில் உள்ளவற்றை ஒழுங்கானமுறையில் நடைமுறைப்படுத்தலும் ...காமுகனின் கண்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிகளாக அமையும்.
அதுமட்டும் அல்ல பாடசாலைகளில் ஒரு கிழமைக்கு 3 மாணவர்கள் ஆசிரியர்களால் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றது.
இவை உடல் மற்றும் உளவியல் ரீதியாக மாணவர்களை காயப்படுத்துகின்றது. உதாரணமாக பிரம்பால் அடித்தல், வகுப்பில் இருந்து வெளியேற்றுதல், கெட்ட வார்தைகளைப்பயன்படுத்தல், ஏனைய மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துதல், அந்தஸ்து நிலைகளை சுட்டிக்காட்டி கற்றல் - கற்பித்தலை கையாளுதல் போன்றன பலவற்றைக்கூறலாம். அத்துடன் இரவு நேரக்களியாட்டம் என்றவாறாக மாலை நேர ,காலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் அமைகிறது. வகுப்பினுள் கல்வியும் வெளியிலே மாணவர்களிற்கு பாதுகாப்பற்ற நிலையும் உருவாகி வருகின்றது. வகுப்புகளின் வெளியில் களியாட்டத்தை பார்க்க வந்தவர்கள் போன்ற கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பாலியல் துஷ்பிரயோகம், களவு, சேட்டைகள் என்று பல பிரச்சினைகள் நீண்டு செல்கின்றது.
அத்துடன் போயா விடுமுறை கூட மாணவர்களிற்கு விடுமுறையற்றதாக உள்ளது இதனை தடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டாலும் முற்றுமாக மாலை நேர வகுப்புக்கள் நிறுத்தப்படவில்லை. மாணவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் வகுப்புக்களை நடாத்துவோர் செயற்பட்டாலும் மாணவர்களின் பாதுகாப்பை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். 'சுவரின்றி சித்திரம் வரைய முடியாது' அதுபோல மாணவர்களின் பாதுகாப்பற்ற கற்றல் பயன் தராது. இதற்கு பெற்றோர்,அரசாங்கம் கடின நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவீன தொடர்பாடல் சாதனங்களின் வருகை தற்போது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைகின்றது. தொடர்பாடல் சாதனங்கள் ஊடகமாக பயன்பட்டு வந்த காலத்தை தாண்டி உறவுப்பாலங்களை முறிக்கின்ற, தற்கொலைக்கு தூண்டுகின்ற ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முக்கியமாக தொலைபேசியானது தொல்லை பேசியாக மாறி வருகின்றது. Face book> Internet >e-mail> whatsapp> viber .. என்று தொடர்பாடலை மக்களிடையே ஏற்படுத்தினாலும் தற்காலத்தில் அவற்றின் பாவனையை தவிர்த்தாலே பாதிப்பிரச்சினை சரியாகிவிடும் என்ற நிலை உருவாகி உள்ளது. உதாரணமாக Face book> whatsapp இவற்றை சரியாக பயன்படுத்துவோரை விட தவறாக பயன்படுத்துவோர் வீதம் அதிகரித்து வருகின்றது. தவறான நண்பர் வட்டாரத்தை தெரிவு செய்வதும், புகைப்படங்களை பரிமாறிக்கொள்ளலும் அதன் வாயிலாக பல்வேறு தொழில்நுட்ப உத்திகள் மூலமாக ஆபாச வீடியோக்களை உருவாக்குதலும் , அனுப்புதலும் என்று உருவாகி வருகின்றது. இதனால் அதிகளவில் தற்கொலை பதிவாகி வருவதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. தொலைபேசியானது எமது தொடர்பாடல் ஊடகமே தவிற அது தற்கொலை அங்கியல்ல என்பதை புரிந்து கொள்வதுடன் எமது உறவானது மற்றவர்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர எம்நிமித்தம் யாரும் தலை குனியக்கூடிய நிலையை ஏற்படுத்தக்கூடாது இதனை கருத்திற்கொண்டு செயற்படுவது பிரச்சினையை தவிர்க்ககூடியதாக இருக்கும்.
போதைப்பொருளை விட 3 மடங்கு போதையை தற்போது Selfie Style ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் அமரசேகரம் குறிப்பிடுகின்றார். சுயமாக புகைப்படம் எடுப்பதற்கு பயன்பட்ட முறைமை தற்போது மரணத்தை காட்டும் பாதையாக மாறி வந்துள்ளது. மலை உச்சி , கடல், புகையிரதம், பஸ் food board ,பாதைவிழிம்புகள் ,கட்டிட உச்சி என்று Selfies எடுக்கும் போது அவை படங்களை நாம் பார்ப்பதற்கு தருகின்றதை விட நம்மை இரங்கல் செய்தியாக அனைவரும் பார்க்க செய்கிறது. உலகில் இந்த வருடப்பகுதியில் Selfies எடுக்கும் போது உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை 30% ஆக அதிகரித்துவருவதாக அறிக்கைகள் வெளியிடுகின்றது. அத்துடன் தவறான புகைப்படம் எடுத்தல், அதை நம்பிக்கை அடிப்படையில் ஒருவரிற்கு பகிர்தல், அதனை பயன்படுத்தி தமது தேவையை நிறைவேற்றல், தவறாக பலர் நோக்க செய்தல் , திருமணத்தின் பின் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்கு வழி செய்தல் என்று பல பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது . Selfie Style சந்தோசத்தை அதிகளவில் தருவதை விட சோகத்தை தருகின்றது என்றால் பொய்யில்லை.
ஆகவே உயிர்களை காவு கொள்வதும் மானபங்கப்படுத்தி; எம்மை அழித்துக்கொள்வதும் எமது பரம்பரையை கூட இழிவு படுத்தும் இத்தகைய Selfies களை நல்ல முறையில் குறிப்பிட்ட தேவைக்கு பயன்படுத்துவதும் , முக அழகிற்க்கும் Likes அளவிற்கும் என்ற நிலையை தவிர்த்து உயிரின் மதிப்பிற்கு முக்கியம் கொடுத்தலும் , எமது கலாச்சாரத்தை நினைவு படுத்திக் கொள்ளலும் இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபடச்செய்யும்.
புகை பிடிப்பது மற்றும் மது பாவனங்களின் பாவனைத்தன்மையானது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமாக காணப்படுகின்றது. இலங்கையில் 1.7% சிறுவர்கள் அடிமையாக உள்ளதாக இலங்கை புகைத்தல் தரவுகள் குறிப்பிடுகின்றது. இவற்றின் பாவனையால் அதிகரித்த புற்று நோய்கள் ,தோல் நோய்கள், குடும்ப பிளவு, துஷ்பிரயோகங்கள், பிறழ்வான நடத்தைகள் போன்றன ஏற்பட்டு விபச்சாரம், களவு, கொலை வரை செல்கின்றது. பாடசாலை அண்மித்த பகுதிகளில் கடைகளில் புகைத்தலிற்காக பொருட்கள் விற்பதை தடை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தினாலும் அவை நடைமுறையில் உள்ளதா? என்பது கேள்விக்குரியான விடயமாக உள்ளது. 'சிறுவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள்' ஆனால் உலகில் 11% சிறுவர்கள் புகைத்தலிற்கு அடிமையாக உள்ளதாக 'உலக சுகாதார அமைப்பின் இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு' கூறுகின்றது. அத்துடன் புகைப்பவரை விட அவர் அருகில் இருப்பவர் 75% பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகிறது. 'நாம் புகைத்தல் எமது சுய விருப்பம்' என்று கூறினாலும் அதனால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த சமூகமேயாகும். ஆகவே இந்தப்பிரச்சினையை குறைப்பதற்கு முதலில் வீட்டுச்சூழலும் அதன் பின் நாட்டுச்சூழலும் இறுக்கமானதாக அமைய வேண்டும். 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை அழிக்க முடியாது என்ற பாடல் வரி போல' புகை பிடிப்பவர் மற்றும் மது பாவிப்பவர்கள் தாம் தமது செயல்களின் தாக்கத்தை உணர வேண்டும் இதன் மூலமே அதிகளவில் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ளலாம்.
ஆகவே தற்போது இயற்கையின் சீற்றத்தினால் மக்கள் மரணிப்பதை விட சமூக சீர்கேடுகள் மூலமாக மரணிப்பது அதிகமாகிவிட்டது. மேற்கூறப்பட்ட களவு, பாலியல் துஷ்பிரயோகம், Selfie Style ,நவீன தொடர்பாடல் சாதனங்களின் பாதிப்புக்கள் ,மாலை நேர வகுப்பின் தாக்கம் , விபச்சாரம் , போதைப்பொருள் பாவனை, வெளிநாட்டு மோகத்தினால் குடும்ப பிளவு ஏற்பட்டு பிள்ளைகள் வேலைக்கும், வளர்பதற்கும் அனுப்பப்படல் இதனால் கொலை , துஷ்பிரயோகத்திற்கு உள்ளாதல். போன்ற பலவற்றை உதாரணமாக கூறலாம். ஆகவே நாம் உலகில் வாழும் வாழ்கையானது ஒரு முறைதான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் குடும்பமும் பிரச்சினைகளைகளையும் வகையில் செயற்பட வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் பிரச்சினை குடும்பத்திலேயே வித்திடப்படுகிறது அது பரிணமிக்கும் கோணங்களே சமூகத்தில் பல பிரச்சினையாக அமைகிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து பாடசாலை மிகப்பெரிய இடத்தை வகிக்கிறது அதிபரும் ,ஆசிரியரும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.அதற்கு ஏற்றது போல கற்றல் - கற்பித்தல் அமைய வேண்டும். 'பாடசாலையானது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி' ஆகவே மாணவர்களை கற்றலிற்கு மட்டும் ஆயத்தம் செய்வதுடன் நின்றுவிடாது ஒழுக்கத்தின்பால் வழிநடத்தும் வேளை சூழல் பிரச்சினைகள் பாதிகுறைவடையும். நமது சூழலில் தண்டணைகள் வழங்கப்படாவிடில் குற்றங்கள் அதிகரிக்கும் நிலமையே காணப்படுகிறது. ஆகவே சட்டங்கள் மேலும் இறுக்கமானதாக மாற்றப்படுவதும் , தனியார் நிறுவனங்கள் சமூகத்தில் அக்கறை கொண்டு செயற்படுவதும் தற்காலத்தில் எழுச்சி காணும் பிரச்சினைகளை குறைப்பதாக அமையும்.
யேசுஜயா டிலானி (உதவி விரிவுரையாளர்)
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்













