கல்வியின் ஊடாக மனிதவளத்தினதும் நாட்டினதும் அபிவிருத்தி

இன்றைய நவீன காலத்திற்கேற்ற வகையில் மாறுகின்ற உலகில் மனித வளத்தினுடைய அபிவிருத்தி வேண்டப்படுவதாகவே உள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனையும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் விருத்தியடைய செய்தலையும், மாறுகின்ற உலக மாற்றங்களுக்குமேற்ப தன்னைத்தானே ஒழுங்குபடுத்த செய்யப்படும் விருத்தியையும்  மனித வள அபிவிருத்தி எனலாம்.  இவ்வாறு முன்னேற்ற கரமான மாறுதல்கள் மனித வளத்திலே ஏற்பட்டு விருத்தி நிலையை அடைவதற்கு கல்வி பெரும் பங்காற்றுகிறது. கல்வி மூலம் மனிதன் முன்னேற்றம் அடையும் போது, அது நாட்டை அபிவிருத்தி பாதையில் நடக்கச் செய்ய வழிவகுப்பதாய் அமையும். கல்வியானது மனிதவள அபிவிருத்தியை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஓர் ஊடகமாகவும், நிறுவனமாகவும் தொழிற்படுகிறது எனவும் கூறலாம்.

கல்வி சார் அறிவு ஒருவருக்கு வளர்க்கப்படும் போது அவர் பூரண அறிவை நோக்கி விருத்தியடையும் ஒரு மனிதவளமாகவே காணப்படுவார். மனிதவள அபிவிருத்திக்கு கல்விச் செயற்பாடுகள் அடிப்படையாகவே உள்ளது. ஒரு மனிதன் தான் இறக்கும் காலம் வரை தன் கல்வியினை தொடர முடியும். சான்றாக வாழ்நாள் நீடித்த கல்வியை குறிப்பிடலாம். இதன் மூலம் இறுதி வரை மனிதவளம் அபிவிருத்தி அடைந்து கொண்டே செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் போது அறிவு, திறன் மனப்பாங்கு ரீதியாக விருத்தி ஏற்படக்கூடும்.

அதை அடிப்படையாக கொண்டு பல புதிய திட்டங்கள் வகுக்கவும் கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவும் இன்றைய நவீனமயமான சூழல் துணைபுரிகிறது. மனிதனானவன் இன்று நவீன முறைகளையும், தொழிநுட்பத்தையும் கையாள்வதற்கான அடித்தளத்தை கல்விச் செயன்முறைகளிலில் இருந்தே பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கல்வியூடாக மனித வளத்தின் அபிவிருத்தியையே காட்டுகிறது.
கல்வி ஆராய்ச்சி ரீதியாக அமைந்து மனித விருத்திக்கு வழிவகுப்பதாக  உள்ளது. இக் கல்வி முறைகள் ஆராய்ச்சி ரீதியானதாக வளர்ச்சியடைந்து மனித வளத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு கட்டாயக்கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி, விழுமியக்கல்வி, பிரச்சனையை தீர்பதற்கான கல்வி, விஞ்ஞான தொழிநுட்ப ரீதியான கல்வி, இன ஒருமைப்பாட்டிற்கான கல்வி, புதிய கண்டுபிடிப்புக்களை தூண்டுவற்காக கல்வி போன்றன சிறந்த எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றன.

மனிதவள அபிவிருத்தியானது கல்வி நடவடிக்கைகளால் மென்மேலும் விருத்தியடைந்து கொண்டு செல்வதாகவே உள்ளது. எனவே இக் கல்வி நடவடிக்கைகளை நுணுகி ஆராய்வது சிறந்தது. பாடசாலை மாணவர்களுக்கு பொதுமையாக்கப்பட்டதான விருத்தியடைந்த முறையிலான கல்வி வழங்கப்படுகிறது, சமத்துவம் பேணப்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் மனிதவளத்தை வளர்த்தெடுப்பவர்களாகவும் செயற்படும் தன்மையை கொண்டுள்ளனர்.


இதன் போது கற்பித்தல் விடயங்கள் அறிவும், தேர்ச்சியும் உடையதாக இருந்தால் மனிதவளம் விருத்தி செய்யப்படும். அத்தோடு பாடசாலைகளில் இன்று மாணவர்கள் அடைய வேண்டிய 7வகையான தேர்ச்சிகள் குறித்தும் கவனமெடுக்கப்படுகிறது. இதுவும் மனித வளத்தை விருத்தி செய்யும் தன்மையைக் கொண்டு ஆளுமை, தலைமைத்துவத்தை வளர்த்து முன்னேற்றுகிறது.

மனிதவள அபிவிருத்தி என்பது பாடசாலை கற்பித்தல் முறைகளிலும் தங்கியுள்ளது. எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஆரம்ப பாடசாலைகளின் கற்பித்தல் முறைகள் இங்கு முக்கியமானவை. கவனம், பராமரிப்பு, உற்சாகம், அறிவு, அகவூக்கம், நகைச்சுவை, ஆர்வம், விடயத்தெளிவு, திட்டமிடலும், ஒழுங்கமைத்தலும், நட்புடமை போன்ற அம்சங்கள் கற்பித்தலில் இடம்பெறல் வேண்டும். மாணவர் மையக்கல்வி முறையானது அறிவாற்றலை வளர்த்து மனித வள அபிவிருத்தியில்  பங்கு கொள்கிறது. பாடசாலையினுடைய பௌதீக சூழல், ஆசிரியர் மாணவர் தொடர்பு, நவீன கற்பித்தல், விஞ்ஞான செயன் முறைகள், பரிசோதனைகள், கலந்துரையாடல்கள் போன்றனவும் கல்விச் செயன்முறையினூடாக மனித வளத்தை விருத்தி செய்வதாய் அமைந்துள்ளன.

ஒரு நாட்டில் கல்வி கற்றோரின் வீதம் அதிகரிக்கும் போது தான் அந் நாட்டில் ஆய்வுகளும் தேடல்களும் வலுப்பெறும், புதிய கண்டுபிடிப்புகள் நிகழ சந்தர்பம் கிடைக்கும். அத்தோடு இயற்கை, செயற்கை வளங்களை எவ்வாறு கையாளலாம், பயனுடையதாக்கலாம் எனும் விடயங்களில் அறிவு விருத்தியும் ஏற்பட்டு நாடும் வளம் பெறும். இல்லையெனில் அந் நாட்டினுடைய வளங்கள் மறைவளங்கள் எனும் நிலையை பெற்றுவிடும். உதாரணமாக பெற்றோலியம் பற்றிய குறிப்புக்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே இருந்தன. இருப்பினும் கல்வி மூலமாக அறிவு, தொழிநுட்பத்தில் முன்னேற்றம் கண்டதால் பெற்றோலிய வடிகட்டும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு எரிபொருளாக பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும்  மனித வளம் விருத்தியடைந்து நாட்டின் விருத்திக்காக பிரயோகிப்;பதற்கும் கல்வி அவசியமாகின்றது.

நவீனமயமான இன்றைய சூழலில் மாற்றங்களும் புதுமைகளும் கல்வியின் பயனால் கிடைத்தவையாகும். புதிய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றகரமான வாழ்வையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்ததில்  கல்வியின் மூலம் மனிதவள விருத்தி ஏற்பட்டிருக்;காவிடின் இவ்வாறான கண்டுபிடிப்புகள் சாத்தியமற்றதே. உதாரணமாக கல்வி ரீதியான அறிவு விருத்தியால் மனிதன் முன்னேற்றமடைந்து கணனி தொழிநுட்பம் ஆரம்பத்திலிருந்ததை விட தற்போது வளர்ச்சி பெற்றதாக மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கூறலாம்.

இலங்கையில் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் செயற்பாடுகள் நவீன மயப்படுத்தப்பட்டு முன்னேற்றகரமானதாக கொண்டு செல்லப்படுவதால் மனித வளம் மென்மேலும் பயனடைகிறது, மனிதவள விரயத்தை குறைத்து அபிவிருத்தியை அடைவதற்கான வழிமுறைகள் அரசினால் முன்னெடுக்கப்படுகின்றன. சான்றாக பட்டதாரகளின் தொழில் வாய்ப்புக்களை முன்னேற்றுவதற்காக, தனியார் துறையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு 'தருண அருண' நிகழ்ச்சித்திட்;டம் அறிமுகப்படுத்தப்பட்டதை கூறலாம். இவ்வாறு கலைத்திட்டங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்படுவதனால் மனித வள அபிவிருத்தி மட்டுமின்றி நாட்டின் செயற்பாடுகளும் முன்னேற்றகரமானாதாக அமையும்.
இன்றைய நாகரீக வளர்ச்சியில் மனித உடல் உழைப்பு குறைக்கப்பட்டு உள உழைப்பு அதிகரித்துள்ளது. உள நலத்திற்கு முறையான கல்வியும் அவசியமாகின்றது. அதாவது தெளிவாக கற்பதனூடாவே சிறந்த களக்கமற்ற உளத்துடன் பணி புரியமுடியும். பொதுவாக உலக நாடுகள் முன்னேற்றப் பாதையில் செல்லக் காரணம் காலத்தின் தேவைக்கேற்ற அவர்களது கல்விமுறைகளாகவே உள்ளன.   உதாரணமாக ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளில் தொழிநுட்பத்துடன் இணைந்த தொழில்சார் கல்விக்கே முதன்மையளிக்கப்படுவதை கூறலாம். இதுபோன்று காலத்தின் தேவைக்கேற்ற வகையில் கல்வி முறைகள் மாற்றியமைக்கப்படுவதால் மனிதவள விருத்தியை ஏற்படுத்தி எமது நாட்டையும் அபிவிருத்தி செய்யலாம்.

இலங்கை தற்போது கல்வி மூலம் மனிதவள அபிவிருத்தியில் முன்னேறுகின்றது என்றே கூறவேண்டும். ஏனெனில் கடந்த 2014ஆம் ஆண்டின் கல்வித்தரம், வருமானம் போன்றவற்றின் அடிப்படையிலான கணக்கெடுப்பின்படி ஐக்கிய நாடுகளின் திட்டத்தில் நடுத்தர அபிவிருத்தி நாடுகளின் பட்டியலில் 73ஆவது இடத்தை மனிதவள அபிவிருத்திச் சுட்டென் வரிசையில் இலங்கை பெற்றது. அதேபோன்று 2015ஆம் ஆண்டு உலக பொருளாதார மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி உலக நாடுகளின் மனிதவள அபிவிருத்தியில் 50ஆவது இடத்தை பெற்றிருந்தது. இத் தரவுகளின்படி கல்வியானது மனிதள வளத்தை மேம்படுத்தி பொருளதார விருத்தியிலும் பங்கு கொள்கிறது எனலாம்.

மனிதனானவன் அறிவு, திறன், மனப்பாங்கு ரீதியாக விருத்தியடைவது அவசியமாகின்றது. ஒவ்வொரு தனிமனிதனும் தனிப்பட்ட முறையில் தன்னுள் காணப்படும் திறன்களை விருத்தி செய்யும் போதுதான் மனிதவள விருத்தி ஏற்பட்டு நாடும் முன்னேற்றமடையும். இதன்படி ஒவ்வெர்ரு தனிமனிதனும் தனிப்பட்ட முறையில் அறிவு, திறன், மனப்பாங்கை கொண்டுள்ளான் எனவும் அவற்றை விருத்தி செய்வது அவசியமானது என்றும் கூறலாம். இவ்வாறான அறிவு, திறன், மனப்பாங்கை விருத்தி செய்ய கல்விமுறைகள், பயிற்சிகள் சிறந்த வழிகாட்டியாக இருந்து மனிதவள விருத்தியில் பங்குகொள்கின்றன.
சுகாதாரம், சிறந்த மருத்துவ ரீதியான மாறுதல்களுக்கு கல்வியின் ஊடான மனிதவள விருத்தி வேண்டப்படுவதாகும். புற்று நோய், எயிட்ஸ் போன்ற நோய்களை தீர்க்க மருந்துவகைகள் கண்டறியும் முயற்சிகள் வலுப்பெற்றுவருகின்றன. இவை கற்றலினாலேயே ஏற்படுகின்றன. சுற்றுலாத் துறையிலும் மனிதவள விருத்தியானது இவ்வாறான நன்மையையே கல்வி மூலம் பெறுகிறது. இது நாட்டை வளப்படுத்துவதாகவும் அமைகிறது.

ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் மனிதவள அபிவிருத்தியுடன் செயற்பட கல்வி அறிவு முக்கியத்துவமுடையதாகவே உள்ளது. ஏனெனில் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கவும், உலக மாற்றத்திற்கு தன்னை இயைவு படுத்திக்கொள்ளவும், தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தயார்படுத்தவும், குறுகிய காலத்தில் உச்ச பயன் பெறவும், குறைந்த வளத்தைக்கொண்டு அதிக பயன் பெறவும் மனிதனுக்கு கல்வி உறுதுணையாக இருந்து வழிப்படுத்துவதாக உள்ளது. உதாரணமாக இணையத்துடனான கற்றல்கள், கற்றலுக்குரிய தேடல்கள் மனிதவள விருத்திக்கு உச்ச பயனையளிக்கிறது.

பாடசாலைகளில் இன்று மாணவர் மையக்கல்வி முறை பின்பற்றப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு தேடிக்கற்றல் என்பது கட்டாயமான ஒன்றாக அமைவதால் அவர்களின் தேடிக் கற்கும் திறன் அதிகரிப்பதோடு இனணயத்தை பயன்படுத்தி கற்கவும் சந்தர்பம் கிடைப்பதனூடாக மனிதவள மேம்பாட்டை பேணக்கூடியதாக உள்ளது. உலகமயமாதலிலும் கல்வியின் பயனால் மனிதவளம் விருத்தியை பெற்றுள்ளது. இதற்கு பொருளாதார ஒண்றிணைப்பு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலக மக்களுடன் பணப்பரிமாற்றங்களுடன் தொடர்புற, வர்த்தகம் மேற்கொள்ளவும் கணனி, இணையம் சார் கற்றல் அறிவு உதவிபுரிந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.

கல்வியானது மனிதவளத்தை விருத்திபெறச் செய்ய தனிமனித தேவையை அறிதல், அறிவு, திறன், மனப்பாங்கை விருத்தி செய்தல், ஊக்கமளித்தல், வேலைத்தள சூழலை ஏற்று நடத்தல், நிகழ்ச்சி திட்டம் வரைதல், திட்டத்தை அமுல் படுத்தல், மதிப்பிடல் போன்ற சில உத்திகளையும் கைக்கொள்ளுகின்றது. 

'அடிப்படை தேவைகள் நிறைவுற்றதும் மனித மனம் மேலதிக தேவைகளை உருவாக்கிக்கொள்ளும்.' அதனால் மனிதன் தனது அறிவை மேலும் விருத்தி செய்து வள உற்பத்தியாளனாக மாறுவதற்கு கல்வி உறுதுணையாக அமைகிறது. 'கல்வி அபிவிருத்தியின் ஊடான அபிவிருத்தி அம்சங்களில் ஒரு நாடோ பிரதேசமோ கவனம் செலுத்தும் போதே மனிதவள அபிவிருத்தி ஏற்படுகிறது' என எச்.ஹோம்ஸ் குறிப்பிடுகிறார். இவ்வாறான ஒரு கல்வி அபிவிருத்தியின் மூலம் மனிதவள அபிவிருத்தியை பெறுவதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உர்பனா சாம்பெய்ன்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஒரு கல்வி நிலையத்தை மனிதவள அபிவிருத்திக்காக அர்பணித்துள்ளது. இது போன்ற செயற்பாடுகளில் எமது நாடும் அக்கறை கொள்ளுமாயின் கல்வி மூலம் நாட்டில் மேலதிகமாக முன்னேற்றத்தையும், மனிதவள விருத்தியையும் ஏற்படுத்தலாம்.

பொதுவாக முன்னேற்றம் என்பது மனித முயற்சியின் விளைவேயாகும். மனிதன் தன் அபிவிருத்திக்கு உலக வளங்களை பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை வில்லியம் ஜேம்ஸின் 'மனிதன் உலகில் உள்ள வளங்களை தன் வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டான், புதிய பொருட்களை உற்பத்தி செய்தான்' எனும் கூற்று புலப்படுத்துகிறது. அந்த வகையில் வளங்களை வசதிக்கேற்ப மாற்றியமைப்பதற்கான அறிவை கல்வி வழங்கி வருகின்றது. இயற்கை வளத்தை பயன்படுத்துவதில் மனிதன் எத்தகு ஆற்றலும், வளர்ச்சியும், வேகமும் கொண்டுள்ளான் என்பதை பொறுத்தே ஒரு நாட்டின் பொருhதார வளர்ச்சியமையும். இவ்வாறு பொருளாதாரத்தை வளப்படுத்துவதிலும் கல்வி முன்னிலை வகிக்கிறது. ஆதலால் வளங்களைக் கைக்கொண்டு, பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றுவதற்கான, மனிதவள அபிவிருத்தி செயற்பாடுகளில் கல்வியின் வகிபங்கு ஓர் முடிவிலியெனலாம்.

பு.மதுமிதா
2ம் வருடம் (சிறப்புக்கற்கை)
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.