கூட்டமைப்பை உடைப்பதற்கு மஹிந்த எடுத்த முயற்சிகள் தோல்வி: சிறிநேசன்

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு பலமுயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும் அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
கல்முனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அரிசி ஆலைக் கட்டடத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ பணத்தினைக் கொடுத்தும் பதவியைக் கொடுத்தும் கட்சிகளைப் பிரித்து பலமிழக்கச் செய்திருந்தார். இந்த நிலையில்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பினையும் பிளவுபடுத்தும் செயல்களைச் செய்தபோதும் எம்மவர்கள் இடம்வைக்கவில்லை.
ஆனால் பியசேன அவர்கள் பணத்திற்காக தமிழ்மக்களை அடகுவைத்துவிட்டு சென்றிருந்தார். எனினும் பல பயமுறுத்தல்கள் இருந்தபோதும் அதற்கு எதிராக குரல்கொடுத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ் போன்றோர்கள் படுகொலை செய்யப்பட்டனரே தவிர தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை யாராலும் உடைத்துச் சின்னாபின்னமாக்க முடியாமல் போனது.
அத்துடன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான பல சதிவேலைகள் நடத்தியும் அந்த சதிவலையில் நாம் சிக்கவில்லை. தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் பணத்திற்கோ சலுகைக்கோ சோரம்போகாமல் உரிமைக்காக போராடிக்கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருப்பதுடன், தமிழர்களுக்கான நிலையான ஒரு அரசியல் தீர்வை எதிர்பார்த்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பயணம் சென்றுகொண்டு இருக்கின்றதே தவிர பணத்திற்கோ பதவிக்கோ அடிபணியாதவர்களாகவே இருந்துகொண்டு இருக்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்