தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்துவத்தை இழக்காமல் தீர்வுக்கான வியூகங்களை அமைத்துச் சரியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. த.தே.கூ. வேட்பாளர் கலாபூசணம் மா.திருநாவுக்கரசு.

( ரவிப்ரியா )
இந்த தேர்தலில் பல்வேறு கருத்துக்கள் எமது பிரதேசங்களில் அலைமோதுகின்றன. இத் தேர்தல் கொழும்பு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் எண்ணங்கள் எப்படி
இருக்கின்றன என்பதை பரீட்சித்துப் பார்க்கக் கூடியதாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது போலிகளால் வீசப்படும் சேற்றை அவர்கள் இந்த தேர்தல் மூலம் முழுமையாக கழுவி சுத்திபடுத்திவிடுவார்கள் என்பதே உண்மையாகும்.

மேற்கண்டவாறு செட்டிபாளையத்தில் ஓய்வுநிலை உதவி கல்வி பணிப்பாளர் ந.புவனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வேட்பாளர் மா.திருநாவக்கரசு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

இயற்கை எழில் கொஞ்சும். இன்சுவை ததும்பும் பல வளங்களைக் கொண்ட, புகழ் பூத்த அறிஞர்களையும், கலைஞர்களையும் கொண்ட பண்பாட்டு மையமாகத் திகழ்கின்ற மண்முனை தென் எருவில் பிரதேசபையின் வாக்காளர்கள் மண்மீது பிடிப்பும் தமிழ் மீது தணியாத தாகமும் கொண்டவர்கள்.

எனவே அவர்களின் தேர்தல் நிலைப்பாடு என்னவென்று அவர்களின் முகங்களில் வெளிப்படும்  மகிழ்ச்சிப் பிரபாகத்தில் இருந்தே நாம் அடையாளம் காணக் கூடியதாக இருக்கின்றது. அவர்கள் எமக்கான வெற்றியைத் தீhமானித்தவர்களாக காணப்படுகின்றார்கள்.

அடிமைத் தனத்தை அடியோடு வெறுக்கும் எமது மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி அவர்கள் மூலமே தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் தனித்துவத்தை இழக்கவில்லை. இழக்கவும் மாட்டாது. சமயோசிதமான அறிவு சார்ந்த சிந்தனை மூலம், தமிழ் மக்களுக்கு தீர்வை ஏற்படுத்தி கொடுக்க, சூழலுக்குப் பொருத்தமான  வியூகங்களை ஏற்படுத்தி உன்னதமாச் செயற்பட்டு வருகின்றது.

இதில் வெற்றி காண்பதற்குச் சர்வதேச சமூகத்தையும் நாடி நிற்கின்றது. தீர்வை நோக்கிய பயணம் நிதானமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தீர்வை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை முன்பைவிட எமது தலைவர்களுக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

சர்வதேசத்தையும் நாடி நிற்கும் நாம் அவர்களிடமும் இலங்கை அரசிடமும் எமது பலத்தைக் காட்டுவதற்கும் எமது தமிழ் மக்கள் எமது பக்கமே நிற்கின்றார்கள்.

அணிதிரண்டிருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவும் இத் தேர்தலையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் எமக்குள்ளது. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை வீட்டுக்கு வாக்களித்து தமிழனை விமோசனம் பெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.