ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சிக்கு இடையில் வலுப்பெறும் முரண்பாடுகள்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் வலுவடைய ஆரம்பித்துள்ளன.

இருதரப்பினரும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தாலும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெரும்பாலான மன்றங்களை கைப்பற்றும் நோக்கில், குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பின்தள்ளும் நோக்கிலேயே ஐக்கிய தேசியக் கட்சி வியூகம் அமைத்து பிரசாரம் செய்து வருகின்றது.

அதேபோன்றே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதிக ஆசனங்களை பெறவேண்டும் என்ற நோக்கில் பாரிய வியூகங்களை அமைத்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் மைத்திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வாறு நிகழவில்லை. எனினும் தேர்தலின் பின்னர் இரண்டு தரப்பும் இணைந்து ஆட்சியமைக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகின்றது.

இவ்வாறிருக்க மத்தியவங்கி பிணைமுறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரை சுதந்திரக் கட்சியினர் விமர்சிப்பதாக ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து வலுவடையும் நிலையிலேயே காணப்படுகின்றது.