வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா


(ஜெ.ஜெய்ஷிகன்)

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழர்களின் பாரிம்பரிய கலாசார நிகழ்வான பொங்கல் விழா செயலகத்தின் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நருபா பிருந்தன்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.நேரசாஜா, கணக்காளர் திருமதி.ரேவதன் டிலானி, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து நெல் மாட்டுவண்டியில் பாரம்பரிய முறைப்படி  கொண்டுவரப்பட்டு செயலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் சகிதம் வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக செயலக வளாகத்திற்கு நடை பவனியாக கொண்டு வரப்பட்டது.

பின்னர் பொங்கலுக்காக நெல் குற்றப்பட்டதுடன், இங்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்னிரண்டு கிராம சேகவர் பிரிவுகள், செயலக நலன்புரிச் சங்கம், செயலக ஸ்ரீஆதிவலம்புரி விநாயகர் ஆலய நிருவாகத்தினர் உட்பட பதின்னான்கு பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் செய்யப்பட்டது.

மேலும் செயலக உத்தியோகத்தர்களுக்குகிடையில் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் கும்புறுமூலை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

விவசாயிகள் மற்றும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும், தமிழர்களின் கலை கலாசாரத்தினை வளர்க்கும் முகமாகவும் வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் இன, மத வேறுபாடுகளின்றி பொங்கல் கொண்டாப்பட்டதாக பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்

தெரிவித்தார்.