
பட்டிப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு 'இயற்கை ஜீவனோபாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழா' எனும் தொனியில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் திரு சு.சந்திரகுமார் அவர்களின் தலைமையில், நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள், சிறப்புக்கற்கை மாணவர்கள், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் 17.01.2018 அன்று காலை 10.00 மணியளவில் நுண்கலைத்துறை முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட பீடாதிபதி திரு. மு.ரவி அவர்களும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக
யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியை ஏ.என். கிருஷ;ணவேணி அவர்களும் மொழித்துறை மற்றும் ஆங்கில கற்கைகள் பிரிவின் துறைத்தலைவர் கலாநிதி ஜே.கென்னடி அவர்களும் விவசாய பீட முதுநிலை விரிவுரையாளர் திரு. எஸ். ஸ்ரீகிருஷ;ணா அவர்களும் பட்டிக்காரராக அ.மகாலிங்கம் அவர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பட்டிக்காரர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் எனும் கருத்தாக்கத்தில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி;.ஜெயசங்கர் அவர்களின் இணைப்பாக்கத்தில் கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் இந்நிகழ்வு ஒழுங்கமைப்பாளரும் நுண்கலைத்துறையின் தலைவருமான திரு சு.சந்திரகுமார் அவர்களும் விவசாய பீட முதுநிலை விரிவுரையாளர் திரு. எஸ். ஸ்ரீகிருஷ;ணா அவர்களும் யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியை என். கிருஷ;ணவேணி அவர்களும் மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சந்திரசேகரம் அவர்களும் மொழித்துறை விரிவுரையாளர் திரு. கே.குகன் அவர்களும் பண்ணை முகாமையாளர் திரு. ரமேஸ் அவர்களும் பட்டிக்காரராக அ.மகாலிங்கம் அவர்களும் இ.குகன் அவர்களும் கலந்துகொண்டனர்.
நுகர்வுப் பண்பாட்டினுள் வாழும் நாம் தனியன்களாக்கப்பட்ட நிலையில் சுயசார்பு மனிதர்களாக வாழ்ந்துவரும் வேளை தமது பண்பாட்டு விழாக்களை நிகழ்த்துவதன் மூலமே ஒன்றிணைகின்றோம். இன்றைய சூழலில் மனிதர்கள் தமது பசுக்களில் கறந்தெடுக்கும் பாலினை கம்பனிகளுக்கு விற்று விட்டு கம்பனிகள் பொதிசெய்து விற்பனை செய்யும் பால்மா வகைகளையே அருந்திவருவதனைக் காணலாம். மேய்ச்சல் தரைகள் இன்று குறைவடைந்து கொண்டு வருகின்றது. இதற்கு காரணம் குடியேற்றங்களும் நில ஆக்கிரமிப்புக்களும் இடம்பெற்று வருகின்றமையே ஆகும். பல்தேசியக் கம்பனிகள் எமது சூழலிற்குப் பொருத்தமற்ற வெளிநாட்டு மாட்டினங்களை இறக்குமதி செய்து அதனை அடைக்கப்பட்ட இடத்தில் வளர்த்து செயற்கை உணவுகளை வழங்கி மேற்கொள்ளப்படும் பாலுட்பத்தியும் இதனால் கிடைக்கும் நன்மை தீமைகள் மற்றும்; உள்ளூர் மாட்டினங்கள் மூலம் பெறப்படும் பாலுட்பத்தியும் இதனால் கிடைக்கும் நன்மை தீமைகள் தொடர்பாகவும் உள்ளூர் மாட்டினங்களின் கோசலம், கோமயம் இயற்கைப் பயிர்ச்செய்கைக்கு உரமாகப் பயன்படுத்தும் முறை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இயற்கை விவசாயமும் உள்ளூர் மாட்டுவளர்ப்பை ஊக்குவிக்கும் எண்ணக்கரு வலுவாக்கம் மேலோங்கியது. நன்றி செலுத்தும் அறிதலை மனிதரிடம் வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
பட்டிக்காரர்கள் மாடுவளர்ப்பில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் அதற்கு அரசாங்கம் மற்றும் உயர் அதிகாரிகளால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.




















