பூதாகரமாகியுள்ள இரண்டுகோடி விவகாரம்: மட்டுநகர் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சவாலானதா? சந்தர்ப்பமானதா?

தற்போதய அரசியல் செய்திகளில் பேசுபொருளாக வடிவம் எடுத்துள்ள விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டுகோடி விவகாரம். காரண காரியங்களை உரிய முறையில் தொடர்புபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு த.தே.கூ  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சவால் நிறைந்ததொன்றாகவே பார்கப்படுகிறது. ஆனாலும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள் மற்றும் கணக்கறிக்கைகளை பொதுவெளி அரங்கில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் வாயிலாக சிவசக்தி ஆனந்தனின் குற்றச் சாட்டிற்கு சாட்டையடிகொடுத்து அதை த.தே.கூட்டமைப்பிற்கு சாதகமாக மாற்றுவதற்கான சந்தர்ப்பமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.
த.தே.கூ  பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் ஒன்றிணைந்து ஒரே மேடையில் இதனை தெளிவுபடுத்தி பூதாகரமாகியுள்ள விடயத்தை பொசுங்கிப் போகச் செய்யலாம்.

குறிப்பாக பின்வரும் சந்தேகங்களும் ஐயப்பாடுகளும் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்படவேண்டியனவாய் உள்ளன.
  • அபிவிருத்திக்காக த.தே.கூ மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வரவு செலவுத் திட்டம் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு? கடந்த வருடம் மற்றும் நடப்பாண்டு.
  • மாவட்ட செயலகத்தின் நிதிக் கையாள்கை முறையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான ஒதுக்கீடுகளில் தற்போதய நிலை, முன்னேற்றம் மற்றும் செய்யப்படவேண்டியவைகள் பற்றிய ஆதார அறிக்கை? 
  • இரண்டுகோடி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவர்?
  • கிடைத்திருந்தால் அது வரவு செலவுத் திட்டத்துடன் உள்ளடக்கப்பட்டனவா அல்லது விசேட அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கானதா? அதன் உண்மைத் தன்மை? அதனூடாக செய்யப்பட்ட திட்டங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் கணக்காய்வாளர் அறிக்கை.
  • யாராவது பா.உறுப்பினர்களுக்கு கிடைக்கவில்லையென்றால் கிடைக்காமைக்கான காரணங்கள் என்ன?
  • இவை தவிர மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் அபிவிருத்தி மற்றும் மாவட்ட அபிவிருத்தி என்பவற்றிற்காக கிடைத்த பணமூலங்கள் மற்றும் தொகை அதற்கான செயற்றிட்டங்கள்.
  • மேலம் பா.உறுப்பினர்களின் சொந்த ஊதியத்திலிருந்தான உதவிகள் ..........
மேற்படி உள்ள அனைத்து விடயங்கள் மற்றும் இவற்றிற்கு அப்பாலும் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தும் முகமாக திறந்த கலந்துரையாடல் களத்தினை ஒழுங்கு செய்வது த.தே.கூ மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலுச்சேர்ப்பதோடு  த.தே.கூட்டமைப்பின் மீது மக்களின் அதீத நம்பிக்கை நிலையானதாக உறுதிப்படுத்தப்படுவதற்கும் வழிகோலும். 

மாறாக இதனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் விடுவதும் வாய்க்கு வந்தமாதிரி செய்தோம், பாடுபட்டோம், போராடினோம், உரிமையை விட்டுக் கொடோம் என்றெழும் மார்பு தட்டும் அறிக்கைகள் பேச்சுக்கள் மற்றும் செய்திகள் த.தே.கூட்டமைப்பிற்கு ஆரோக்கியமற்ற நிலையை உண்டாக்குவதோடு வாக்கு வங்கியின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமையும்.

ஜெயந்திரா