நான் தமிழ் தேசியத்திற்கு எதிரானவன் அல்ல. அதற்காக நான் நீண்டகாலம் உழைத்திருக்கின்றேன். எனக்கு பேரினவாத கட்சிகள் மூலம் வாய்ப்புக்கள் கிடைத்தபோதும், தமிழ் தேசியத்தை உணர்வு பூர்வமாகப் பின்பற்றும்
தமிழர் விடுதலைக் கூட்டணி மூலம் இந்த கிராமத்திற்கு நன்கு பழக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தில் உங்கள் முன் நிற்கின்றேன்.
மேற்கண்டவாறு மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் பெரியகல்லாறு வட்டார வேட்பாளராக களமிறங்கியுள்ள சண்முகநாதன் கணேசநாதன் தனது தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார் அவர் தொடர்ந்து பேசுகையில்,
கல்லாற்று வரலாற்றை எடுத்துக் கொண்டால் இங்கிருந்து தெரிவான இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டே வெற்றி பெற்றவர்கள். நானும் அதே சின்னத்தில்தான் நிற்கின்றேன். எனவெ எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கின்றது.
நான் வெற்றி பெற்றால் இக் கிராமத்திற்கான அபிவிருத்தி சம்பந்தமாக பல திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக தயாரித்து வைத்துள்ளேன். எமது கிராமத்தின் கல்வி கலை கலாசாரம் பண்பாடு எல்லாமே சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது.
அவற்றை கட்டியெழுப்புவதற்கே நான் முழுக் கவனம் எடுப்பேன். எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் நான்கு வருடங்களில் கல்லாற்றை மாற்றிக் காட்டுவேன்.
எனது தொலைபேசி இலக்கத்தை நீங்கள் அழுத்தினால் எந்த நேரமானாலும் சரி நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வந்து நிற்பேன். நீங்கள் என்னைத் தேடிவரும் நிலை உங்களுக்கிருக்காது. எனெனில் நானே உங்களைத் தேடிவரும் சேவகனாகவே இருப்பேன்.
நான் இந்த தேர்தலுக்காக பொதுச் சேவை செய்பவன் அல்ல. பொதுச்சேவை என்பது என்னோடு பிறந்தது. நான் நீண்டகாலமாக பொதுசேவைகள் செய்து வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதுபற்றி நான் விபரிக்க வேண்டியதில்லை.
இத் தேர்தல் முழுக்க முழுக்க கிராம அபிவிருத்தியோடு மட்டும் சம்பந்தப்பட்டது. இங்கு தமிழ் தேசியம் பற்றி பிரஸ்தாபித்து, மக்களைத் திசை திருப்புவது பிரதேச சபை பற்றி முழுமையாக தெரியாதவர்களின் கபட நாடகமாகும்.
எனவே இத்தகைய அடிப்படையற்ற விடயங்கள் பற்றி எமது மக்கள் குளப்பமடையத் தேவையில்லை. அத்துடன் நாங்கள் தமிழ்தேசியத்தை விட்டு விலகி நிற்கவும் இல்லை. நிற்கப் போவதுமில்லை.
எனவே இந்த கிராமத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வேன் என்ற முழு நம்பிக்கையோடு, என்னை பிரதேச சபைக்கு அனுப்பிவைப்பதற்காக உதயசூரியனுக்கு வாக்களித்து அதன் பலாபலனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்.












