மலையக சமூகமும் ஆரம்பக் கல்வியின் நிலையும்.


நிமிடத்துக்கு நிமிடம் மாறிவரும் இவ் உலகில் மனிதனாக அவதரித்த ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையை நெறிப்படுத்தி நிலைப்படுத்திக் கொள்வதற்கு ஊன்றுகோலாக அமைவது கல்வியே.
வளர்ச்சி அடைந்துவரும் சமூகத்திலே கல்வியிலே முன்னேற்றம் அடைந்து வருகின்ற ஒன்றாக மலையக சமூகம் விளங்குகிறது. ஏறக்குறைய ஓரளவிற்கு மக்கள் இங்கு எழுத்தறிவு உடையவர்களாகவே உள்ளனர். இலங்கையிலும் எழுத்தறிவின்மையை முற்றாக இல்லாமல் செய்தல் வேண்டி யாவருக்கும் எல்லா மட்டங்களிலும் கல்வியை பெறுவதற்குறிய சமசந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகின்றது.

மலையக சமூகத்தை பொருத்தமட்டில் தற்கால சூழலில் இலங்கையின் கல்விக் கொள்கைகளுக்கு அமைய இரண்டாம் மூன்றாம் நிலைக்கல்வி அதாவது உயர்கல்வி போன்ற மட்டங்களில் மலையக மாணவர்கள் பல்வேறு தடைகளை தாண்டி சாதனைப்படைத்து வருகின்றனர். சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தையும் நிலைநாட்டிக் கொள்கின்றனர்.

இருப்பினும் ஆரம்ப நிலைக்கல்வியில் எந்தளவு மலையக மாணவர்கள் தமது அடைவுமட்டங்களை எட்டுகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆரம்பநிலைக்கல்வி என்பது 1998 இல் பிரதான நிலை (தரம் 1, 2) பிரதானநிலை- 2 ( தரம் 3, 4) பிரதான நிலை- 3(தரம் 5) என மூன்று பிரதான நிலைகளில் ஒழுங்கமைக்கப்படுகிறது. ஆரம்பநிலைக்கல்வி ஒரு பிள்ளையை மையமாக கொண்டதாகும். சுருக்கமாக கூறின் தரம் 1-5 வரையான நிலையாகும்.

தற்கால சூழ்நிலையில் மலையகத்தில் ஆரம்பக்கல்வியின் நிலைப்பாடு குறித்து நோக்குமிடத்து ஒரு மந்தமான நிலையை அவதானிக்க கூடியதாக உள்ளது. காரணம் தரம் 1-5 வரையான பிள்ளைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை கொண்டு நடத்துவதற்கான பௌதீக வளங்கள் இன்மை. உதாரணமாக கட்டிடம், தளபாடம், வகுப்பறை வசதி, அடிப்படை வசதி போன்றன மலையக மாணவர்களுக்கு அரிதாகவே உள்ளது. மலையக மாணவர்களின் ஆரம்பக்கல்வியின் பின்தங்கிய நிலைக்கு மனித வளங்களும் காரணமாகவே இருக்கின்றது. அதாவது ஆரம்பநிலை பாடசாலைகளை கொண்டு நடத்துவதற்கான ஆசிரியர் பற்றாக்குறை இன்றும் மலையக சமூகத்தில் காணப்படுகிறது.

பெரும்பாலும் மலையக மாணவர்களின் பெற்றோர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் வறுமை சூழ்நிலையில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் பிள்ளைகளின் ஆரம்ப கல்வி நிலையி;ல் பெற்றோர்களின் அடிமட்ட கல்வியறிவின்மை தாக்கம் செலுத்துகிறது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காதவர்களாகவும் சில பெற்றோர்கள் வளங்குகின்றனர்.ஒரு சில குடும்பங்களில் ஆரம்பக்கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான வீட்டுச் சூழ்நிலை இல்லை என்றே கூறலாம்.

ஏனைய பிள்ளைகளை விட மலையக மாணவர்கள் பெரும்பாலும் போஷாக்கின்மை குறைந்தவர்களாக உள்ளனர்.மேலும் பெரும்பாலான பெற்றோர்கள் முக்கியமாக தாய்மார்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதனால் அந்த வீட்டிலுள்ள பிள்ளைகளின் ஆரம்ப கல்வி குறித்து கவனம் செலுத்துவது ஏனைய உறவினர்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது. இவ்வாறான கவனிப்பாரற்ற நிலை மலையகப்பிள்ளைகளின் மனதளவில் தாக்கம் செலுத்தி சில பிள்ளைகள் ஆரம்ப நிலையிலேயே பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர்.
மேலும் மலையகத்தை பொருத்தவரையில் ஆரம்பநிலை பாடசாலைக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படாத ஆசிரியர்களாகவே உள்ளனர். மலையக சமூக ஆரம்ப நிலைக்கல்வியின் வீழ்ச்சிக்கும் மந்தமான நிலைக்கும் இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. காரணம் தற்காலத்தில் இலங்கையில் ஆரம்பக்கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் முறையான பட்டப்படிப்பை நிறைவு செய்யாதவர்களாகவே விளங்குகின்றனர்.

இவர்களை கொண்டு ஆரம்ப  நிலைப்பாடசாலைக்கு கற்பிக்க அனுமதிக்கும் போது எவ்வாறு ஆரம்பநிலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்வது என்று தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். இதனால் ஆரம்பநிலை மாணவர்களுக்கான முழுமையான கல்வி அறிவு கிடைக்காமலே போய்விடுகின்றனர். மாணவர்களின் கல்வி நிலையும் பாதிக்கப்படுகின்றது.

மேலும் உள்ளுர்மட்டத்தில் திறன்வாய்ந்த கண்கானிப்பும் மேற்பார்வையும் இல்லாதது மலையக சமூகத்தை பொருத்தமட்டில் பாரிய குறைபாடாகவே விளங்குகிறது. எனவே மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் மலையக சமூகம் ஆரம்ப கல்வி நிலையில் பின்தங்கிய நிலையில் செயற்பட அடிப்படைக் காரணங்களாக விளங்குகின்றன.

இத்தகைய காரணிகளே இன்றைய சூழலில் புலமைப்பரிசில் பரீட்சையில் போதியளவு மாணவர்கள் சித்தியடையாமல் விடுவதற்கு காரணங்களாக அமைகின்றன. இருப்பினும் பல்வேறு தடைகளையும் தாண்டி மலையக மாணவர்கள் சிலர் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைப்படைத்து வருகின்றனர்.

ஏனைய மாணவர்களைப் போன்று மலையக மாணவர்களும் ஆரம்ப கல்வியில் சிறந்த விளங்கி சாதனை படைக்க அவர்களுக்கான போதிய பௌதீக வளங்களான கட்டிடம் ,தளபாட வசதி,வகுப்பறை வசதி அகியவற்றை அரசாங்கம் அமைத்து கொடுக்க வேண்டும். ஒரு பிள்ளைக்கு ஆரம்ப கல்வியானது சரியாக வழங்க வேண்டும்.அந்த கல்வி தான் ஒவ்வொரு படிநிலைகளிலும் பிள்ளைகளை முன்னேற்றுவதற்காக ஒரு அடித்தளமாக விளங்கும். ஆரம்ப கல்வியை கற்ற ஒரு பிள்ளையிடம் முழுமையான அறிவு இல்லாவிடில் அந்த பிள்ளையின் வாழ்க்கையே கேள்வி குறியாக மாறி விடும்.ஆகவே ஆரம்ப நிலை பிள்ளைகளுக்கு கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் முழுமையான அறிவு நிரம்பியவர்களாக விளங்க வேண்டும். அதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்ப நிலை பாடசாலைகளுக்கு கற்ப்பிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும். எவ்வாறான வறுமை நிலை வீட்டுச் சூழலில் இடம்பெற்றாலும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்தும் போது ஆரம்ப நிலையிலேயே பிள்ளைகள் பாடசாலைகளிலிருந்து இடை விலகுவது ஓரளவு குறையும்.

கல்வி பயிலும் சிறார்களின் பெற்றோர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலைசெய்வது தடுக்கப்பட வேண்டும் .பிள்ளையின் வயதெல்லையை அறிந்து பெற்றோருக்கான வேலை வாய்ப்புகளை  அரசாங்கம் வழங்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பாக கவனம் செலுத்த எத்தனிப்பர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து மலையக மாணவர்களின் ஆரம்ப நிலைக்கல்வியை சரிசெய்ய வேண்டும். இதன் போது ஏனைய மாணவர்களைப் போல மலையக சிறார்களும் ஆரம்ப நிலைக் கல்வியில் சாதனைபடைத்து முன்னேறுவர் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

செ.ராம்பிரியா
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை
2ம் வருடம் - 1ம் அரையாண்டு
கிழக்கு பல்கலைக்கழகம் -  இலங்கை