தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் ஆனால் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் திட்டத்துடன் தென்னிலங்கையினால் பலர் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு சின்னஊறணி நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி சத்தியசீலனின் தேர்தல் செயற்பாடுகளுக்காக நேற்று (சனிக்கிழமை) மாலை தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சிமன்ற தேர்தல் அந்தந்த வட்டாரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கின்றது. வட்டார முறையும் விகிதாசார முறையும் கலந்த கலப்பு முறைத் தேர்தலாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாநகரசபையை பொறுத்தவரை 20 பேர் வட்டார முறையிலும் 11பேர் பட்டியல் முறையிலும் தெரிவு செய்யப்பட்டு 33 பேரைக்கொண்ட ஒரு மாநகரசபையாக இயங்க இருக்கின்றது. ஒரு வட்டாரத்திலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.
கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களினால் தமிழ் மக்களான எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேண்டுமானால் சுதந்திரமான சுயாட்சியுடனான ஒரு தீர்வு கிடைக்கவேண்டுமானால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிற்க வேண்டிய தேர்தலாக இது அமைய வேண்டும்.
கடந்த காலங்களில் பலம் பொருந்திய ஒரு இனமாக நாங்கள் இந்த நாட்டில் இருந்தோம். அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் பலம் மிக்க ஒரு அமைப்பாக இருந்தோம். எமது இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக ஒரு நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் இன்று இருக்கின்றோம். நாடாளுமன்றமானது எமக்கு தீர்வினை கொண்டுவரக்கூடிய அரசியல் சாசன சபையாக இன்று மாறியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த இருவர் அந்தக் குழுவில் இருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை பிரிப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்காக பெரும்பான்மை கட்சிகளின் உதவியுடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான நிலையிலிருந்தது. இன்று சில சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைவடையச் செய்யக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது” என கூறினார்.













.jpg)