காரைதீவில் 11 ஆசனங்களுக்காக 112 வேட்பாளர்கள் களத்தில்! 13,000 வாக்குகளை இலக்குவைத்து 8 அணிகள் போட்டி!

(காரைதீவு நிருபர் சகா)

காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் 11 ஆசனங்களை இலக்குவைத்து 6கட்சிகள் 2சுயேச்சைகள் வாயிலாக 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.


17குறிச்சிகளை 7வட்டாரங்களாகக்கொண்ட காரைதீவில் மொத்தமாக 12972 வாக்குகள் உள்ளன.

இதில் 04 தமிழ் வட்டாரங்களில் 7944தமிழ் வாக்காளர்களும்(61வீதம்) 03 முஸ்லிம் வட்டாரங்களில் 5028 முஸ்லிம் வாக்காளர்களும்(39வீதம்) உள்ளனர்.

கலப்புமுறைத்தேர்தலில் வட்டாரமுறைத்தேர்தல் மூலம் நேரடியாக 7வட்டாரங்களுக்கும் 4தமிழர் 3முஸ்லிம்கள் உள்ளிட்ட 7பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

விகிதாசாரமுறை மூலமாக மீதி 4 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தமாக 11 பிரதிநிதிகள் காரைதீவுப்பிரதேச சபைக்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

வட்டாரப்பிரிப்பு!
மாளிகைக்காடு கிழக்கிலுள்ள 1338வாக்காளர்களைக்கொண்டு 1ஆம் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாளிகைக்காடு மத்தி மற்றும் மேற்கிலுள்ள 1670வாக்குகளைக்கொண்டு 2ஆம்வட்டாரம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு வடக்கு 1ஆம் 2ஆம் 5ஆம் குறிச்சிகளைக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட 3ஆம் வட்டாரத்தில் 1746வாக்காளர்கள் உள்ளனர். காரைதீவு மேற்கு 6ஆம் 7ஆம் 10ஆம் குறிச்சிகளைக்கொண்ட 4ஆம் வட்டாரத்தில் 1968 வாக்காளர்களுள்ளனர்.

5ஆம் வட்டாரம் மாவடிப்பள்ளியின் 2020 வாக்காளர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

காரைதீவு கிழக்கு 3ஆம் 4ஆம் 8ஆம் 9ஆம் குறிச்சிகளைக்கொண்ட 6ஆம் வட்டாரத்தில் 1804 வாக்காளர்களையும் காரைதீவு தெற்கு 11ஆம் 12ஆம் குறிச்சிகளைக்கொண்ட 7ஆம் வட்டாரத்தில் 2426வாக்காளர்களையும் கொண்டது.

காரைதீவிலுள்ள 7வட்டாரங்களும் தனி அங்கத்தவர் வட்டாரமா என்பது குறிப்பிடத்தக்கது.