மண்டூர் 39 அ.த.க பாடசாலை சமையல் அறை காட்டு யானையால் துவசம்

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக் கோட்டத்திலுள்ள மட்/  பட்/ மண்டூர் 39 அ.த.க பாடசாலையின் சமையல் அறை 04.02.2018 ஆம் திகதி இரவு காட்டு யானையால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. இது பற்றி அப் பாடசாலையின் அதிபர் திரு.ரி.திருவருட்செல்வன் தெரிவிக்கையில் சமையல் அறைக்குள் மாணவர்களுக்கு காலையுணவிற்கு சமைப்பதற்காக அரிசி, உப்பு என்பன வைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை 04.02.2018 இரவு காட்டு யானை தாக்கி சேதமாக்கப்பட்டிருப்பதை அடுத்த நாள் பாடசாலைக்குச் சென்றபோது சமையல் அறை உடைக்கப்பட்டு அரிசி, உப்பு போன்ற பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் பின்பக்கச் சுவர் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ் விடயம் சம்பந்தமாக போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர், போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், வெல்லாவெளி பொலிஸ் போன்றோருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் சுமார் 18 காட்டு யானைகள் அப்பகுதியில் நடமாடுவதாகவும்  இரவில் வீடுகளுக்குள் புகுந்து நெல், அரிசி போன்ற பொருட்களைச் சாப்பிடுவதாகவும் தெரிவித்ததுடன் தங்களுக்கும் யானையால் உயிர் ஆபத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.