கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆற்றுகை செய்யப்பட்ட காவுகொள்ளி நாடகம்


'இன்றைய வெற்றி நாளைய சரித்திரம்.' என்பது போல் 'இன்றைய சிறுவர்கள் நாளைய எதிர்காலம்' எனலாம். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. சிறார்களின் ஆளுமைகள் திறனுடையதாக செயற்திறன்மிக்கதாக மாற்ற வேண்டியது நம் ஒவ்வொருத்தரினதும் கடமையாகும். நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் ஏகாதிபத்திய சர்வேதச நாடுகளின் நவகாலனித்துவ அதிகார சிந்தனைக்கு சுயசார்புகளையும் சுயாதீனத்தையும் இழந்து கொண்டு செல்லும் மரபார்ந்த பண்பாட்டம்சங்களில் சிறுவர்களின் பாதிப்புக்களும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.

நவீன கல்வி மற்றும் வளர்ந்து வரும் நவீன தொழிநுட்பங்களின் வளர்ச்சி இச் சிறுவர்களையும் ஆட்கொள்ளுவதில் விட்டுவிடவில்லை. நவகாலனித்துவ சூழல் நாகரீகக் கோட்பாட்டுரீதியாக அடிமையானவர்களாக மாற்றிவிட்டது. சிறுவர்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றுவதற்கான சூழல் மறுக்கப்பட்டதாக அமைந்துள்ளது. பெற்றோர்களது தன்மானத்திற்கும் கௌரவத்திற்கும் சன்மானம் வழங்கும் கல்வியாகவே சிறார்களின் கல்வி போதிக்கப்படுகின்றது. எனவே சிறுவர்களை அறிவூட்டி மகிழ்வூட்டி அவர்களை செயற்திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கு இச் சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் பெரும் பங்களிப்பினை வழங்குகின்றன. அவர்களை பூரணத்துவமிக்க சிறுவர்களாக மாற்றி இன்றைய ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான உள ஆற்றுப்படுத்தலை வழங்குகின்றது.

இச் செயற்பாடு மட்டக்களப்பு கல்லடி வேலூர் சிறுவர்களுடன் ஆய்வாளரான த.நவராணி அவர்களால் 02.08.2017 தொடங்கப்பட்டு தொடர்ச் செயற்பாடுகள் நான்கு மாதங்களுக்கு அதிகமாக நடைபெற்றன. அக் காலகட்டப்பகுதியில்; தாக்கத்தினை ஏற்படுத்திய டெங்கு நோய் பற்றி கலந்துரையாடப்பட்டது. அது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறுவர்களது முழுத்திறமையுடன் காவுகொள்ளி எனும் தலைப்பில் நாடகத்திற்கான எழுத்துரு எழுதப்பட்டது. அதன்பிற்பாடு இவ் நாடகத்திற்கான ஆற்றுகை வடிமைப்பு மேற்க்கொள்ளப்பட்டு ஆற்றுகை வடிவமைக்கப்பட்டது. சிறுவர் நாடகத்திற்குரிய அனைத்து அம்சங்களையும உட்கொண்டதாகக் உருவாக்கப்பட்டது. பாரம்பரியமான கூத்துக்களில் உள்ள மெட்டிற்கமைவாக பாடல், ஆடல் வடிவமைக்கப்பட்டது.

விளையாட்டுப்பாங்கான கதைத்தன்மையுடன்; நாடகத்தினை நடிக்கின்றோம் என்ற உணர்வுடன் சிறுவர்கள்  ஆற்றுகை செய்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 18.01.2018 அன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் செனட் கட்டிடத்தொகுதிக்குப் பின்னால் உள்ள முன்றலில் ஆய்வாளரினால் தயாரிக்கப்பட்ட காவுகொள்ளி நாடகம் நிகழ்த்தப்பட்டது. நுண்கலைத்துறைத் தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது. பிரதமஅதிதியாக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலைகலாசார பீடாதிபதி கலாநிதி மு.ரவி அவர்களும் சுவாமி அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் காலநிதி வ.இன்பமோகன், கலாநிதி கிருஸ்ணவேணி இலக்கிய ஆய்வாளர் கௌரிபாலன் அவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஊளியர்கள் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள்; போன்றோரும் இவ் காவுகொள்ளி நாடக ஆற்றுகையினை பார்வையிட்டனர்;. இதுவரை காலமும் உருவாக்கப்பட்ட நாடகம் பார்வையாளர் கண்முன் தோன்றும் போது அது இன்னொரு ஆற்றுகை இன்பத்தை தந்தது.

இவ் ஆற்றுகையானது திறந்த வெளியில் நிகழ்த்தப்பட்டது. நாடகங்கள் அடைக்கப்பட்ட அரங்கினுள் நிகழ்த்தப்பட இச்செயற்பாடு புதுவித அனுபவத்தை வழங்கியது. பார்வையாளர்களும் எவ்வித கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாக நாடகத்தினைப் பார்த்தனர். ஆடல் பாடலுடன் சிறுவர்கள் அவ்வெளியல் நிகழ்த்தும் போது அதை பார்ப்பவர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வேடஉடை ஒப்பனையுடன் ஆற்றுகையை நிகழ்த்தும் போது நடிப்பு என்பது இயல்பாகத் தோன்றியது. இவ் நிகழ்த்துகை முழுமைபெறுவதற்கு பார்வையாளர்கள் மிக முக்கியம் அவர்களது கைதட்டலும் ஆரவாரமும் இன்னும் சிறுவர்களை நடிப்பதற்கு துணையாகமைந்தன. சிறுவர்கள் சற்றும் பயமில்லாமல் நாடகத்தினைச் செய்தனா.; அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகளவான பயிற்சியும் இதற்கான கரணமாகும். அத்துடன் சிறுவர்கள் மிக உற்சாகமாக சந்தோசத்துடன் ஆற்றுகையில் முழு ஈடுபாட்டுடன் செய்தனர்.

இங்கு வருகை தந்தவர்களில் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டன. நுண்கலைத்துறைத் தலைவர் சு.சந்திரகுமார் அவர்கள் குறிப்படும் போது 'சிறுவர்கள் விரும்பி கட்டுப்பாடின்றி செய்வதற்கான அரங்கு திறந்தவெளியரங்கு. இவ் நாடகம் திறந்தவெளியில் செய்தபோது அதற்கான முழுப் பெறுமதியைப் பெற்றது. நாடகத்தினை கல்வியாக கற்பதைவிட அதை செய்வது என்பது இன்னொரு தளத்திற்குச் செல்வதற்கான உத்தியாகமையும்.'என்றும்

கலை கலாசார பீடாதிபதி மு.ரவி அவர்கள் கூறும்போது 'சமூகத்தில் உள்ள சிறுவர்களுடன் இணைந்து பெற்றோர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து நாடகங்களை நிகழ்த்துவது  சந்தோசமான விடயம். இவ்வாறு சிறுவர்களும் சமூகங்களும் பல்கலைக்கழகத்துடன் தொடர்பினை வைத்திருப்பது சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்.' சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுவக பணிப்பாளர் சி.ஜெயசங்கர் அவர்கள் கூறும்போது 'இச் சிறுவர்கள் மிக ஆரோக்கியமானவர்கள் அவர்களுக்கு தொடர்ச் செயற்பாடாக செய்யும் போது அவர்களின் திறமைகள் இன்னும் வெளிப்படும். இவ் நாடகச் செயற்பாட்டுடன் தொடர்ந்து கல்வியையும் கற்க வேண்டும்.'என்றும்

பேராசரியர் எ.என். கிருஸ்ணவேணி அவர்கள் கூறும்போது 'ஆய்வாளரால் செய்யப்பட்ட செயற்பாடுகள்; இவ்வாற்றுகை மூலம் பிள்ளைகளிடம் இருந்து வெளிவந்தது. எவ்வாறானச் செயற்பாடுகள் சிறுவர்களுக்கு நடைபெற்றுள்ளது என்பது தெளிவாக வெளிப்படுத்தினர். அரங்கிற்கு வெளியில் நாடகங்கள் நிகழ்த்துகின்ற போது அது எங்களுடன் பேசுவதாகவுள்ளது. இவ் நாடகத்தில் நல்லப் பாட்டுக்கள் உண்டு. எல்லாப் பிள்ளைகளும் நன்றாகச் செய்தார்கள்.' என்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்