(V.R.Moorthy)
க.பரராஜசிங்கம் அவர்களின் 'சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்' நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலையரங்கில் 31.01.2018 அன்று நடைபெற்றது.
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்தியக்கலாநிதி வே.விவேகானந்தராசா, பேராசியர் மா.செல்வராசா, பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ், பேராசிரியர் செ.யோகராசா, பேராசிரியர் வே.குணரெத்தினம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், கலாநிதி க.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் முதல் பிரதியை தேசபந்து மு.செல்வராஜா, தேசகீர்த்தி வி.றஞ்சிதமூர்த்தி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கி.சிவகணேசனும், வெளியீட்டுரையினை கவிக்கோ வெல்லவூர்க் கோபாலும் நிகழ்த்தியிருந்தனர். வெல்லவூர் கோபால் தனது வெளியீட்டுரையில்
அகரமே ஆசான், வாழ்வில் யாரும் தொடமுடியாத சிகரமே ஆசான் என்பதற்கொப்ப வாகரை தொடக்கம் திருக்கோவில்வரை பலருக்கு கல்விதந்த ஆசான் என்பது பரராசசிங்கம் அவர்களின் ஒருபக்கப் பதிவு. மறுபக்கம் பார்த்தால் அவர் ஒரு மரபுக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பேராற்றல்மிக்க கூத்துக் கலைஞர். நாடக ஆசிரியர், நல்லதொரு சொற்பொழிவாளர் அத்தனைக்கும் மேலாக சமமான பார்வையும் சமாந்தர நோக்கும்மிக்க தலைசிறந்த ஆய்வாளர். அவையனைத்தையும் இனி சான்றுபடுத்தி உங்கள்முன் சொல்லப் போகின்றது இன்று எனது கையிலிருக்கும் 'சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்'. எனும் இந்நூல்.
மட்டக்களப்புத் தமிழச்சங்கத்தின் வெளியீடாக முத்திரை பதிக்கும் இந்நூல் நமது மண்ணில் கனதியான அழகிய அட்டையுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளமையை இதனைக் கையிலெடுக்கும் அனைவரும் நிச்சயம் வியந்து பாராட்டவே செய்வர். இதன்கண் நமது வணசிங்கா அச்சகத்தினரின் பணி போற்றுதலுக்குரிதாகிவிடுகின்றது.
ஒரு நீண்டகால முயற்சியில் சுமார் 400 பக்கங்களைக் கொண்ட - சிந்தனைச் செறிவுமிக்க ஆய்வுநூலொன்றினை ஐயா அவர்கள் இன்று நம்முன் வைத்துள்ளார். அந்த வகையில் இந்த நூலானது முதன்முதலில் அவரது சிந்தனைப் பள்ளிக்குள் நம்மை உள்ளீர்ப்பதன்மூலம் அவரது இப் புதிய பாரிய முயற்சியில் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் வாசகர்கள் எவ்வாறு ஆர்வம்கொள்ளப்போகின்றார்கள் என்பதைக் கண்டறிவது இனி அவசியமாகிவிடுகின்றது.
இந்ந}லின் வெளிப்படுத்துகைகளாக அமைகின்ற சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகளும் நாகரிகக் கண்டுபிடிப்புகளும், சிந்துவெளியின் தொல்குடி மக்கள், அம் மக்களின் வாழ்வியலும் தொழில்களும், சிந்துவெளிப் பிரதேசத்தின் சமயமும் கடவுள் வணக்கமும், அங்குற்ற தவவாழ்வும் அதில் முனிவர் பரம்பரையும், மற்றும் ஆரியர் வருகை, அங்கு நிகழ்ந்த படுகொலைகள், அதில் பெரிய படுகொலை நிகழ்ச்சியும் அதனால் தொல்குடிமக்கள் புலம்பெயர்தலும், அதன்பின்னரான தமிழர்தம் தோற்றமும் பரம்பலும் என ஒன்பது அத்தியாயங்கள் ஊடாக ஆய்வாளர் பரராசசிங்கம் ஐயா அவர்கள் நம்முடன் பேசுகின்ற தன்மையில் 'சிந்துவெளி நாகரிகமும்' தமிழரும் என்னும் இந்நூல் இன்றைய காலகட்டத்தே மிகுந்த முக்கியத்துவம் பெறுவதை நம்மால் உணரமுடிகின்றது.
இந்நூலுக்கான அணிந்துரையினை கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கலைப் பிடாதிபதியும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருமான பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் எழுத அறிமுகவுரையினை தமிழறிஞர் பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் எழுதியுள்ளார். கூடவே வணசிங்கா அச்சக உரிமையார் திரு நிரஞ்சன் வணசிங்கா அவர்கள் தனது வாழ்த்துரையினையும் பதிவுசெய்துள்ளார்.
சிந்துவெளி பற்றிய ஆய்வுகள் ஒரு நீண்டகாலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் - இதுவரை நம்பப்பட்ட பலரது ஆய்வின் வெளிப்படுத்துகைகளை முழுமையாக ஏற்க மறுக்கும் நமது ஆய்வாளர்; இது தொடர்பான தனது ஆய்வின் வெளிப்பாடுகளையும் ஏற்கத்தக்க முடிவுகளையும் முன்வைக்க வேண்டிய கடப்பாட்டில் போதிய சான்றுகளையும் கால நிகழ்வுகளையும் நம்பகத் தன்மை மிக்கதான தேடல்களூடாக நிலைநிறுத்த முற்பட்டுள்ளமை இந்நூலிலின் முக்கிய சாதனையாக நிச்சயம் அமையும் என்பதில் யாருக்குமே ஐயப்பாடு எழ வாய்ப்பிருக்காது என்பது எனது தாழ்மையான அபிப்பிரயமாகும்.
சிந்துவெளியின் தொல்குடிகளான மக்கள் குறித்து கால்டுவெல் பாதிரியார் போன்றவர்களும் பின்வந்தவர்களும் தமிழர் என்பதற்கு மாற்றாக முன்வைத்த 'திராவிடர்' என்ற பதத்தினை ஏற்கமறுக்கும் ஆசிரியர் அவ்வாறு கையாளுதலை பல்வேறு ஆய்வுத் தேடல்களூடாக மறுத்துரைப்பதோடு அவர்களை தமிழர்களாக முன்னிறுத்துவதற்கு எடுத்துள்ள முயற்சியும் பலராலும் நல்லவனாக அறியப்பட்ட இந்திரனை – அவனது குணஇயல்புகளையும் தந்திரோபாயங்களையும் இனம்காணும் தன்மையும் அகத்திய முனிவர் தொடர்பில் முன்வைக்கும் பொருத்தமான கருத்துகளும் இந்நூலைப் படிக்கப்போகும் உங்களுக்கு பெருவிருந்தாக அமையும் எனத் திடாக நம்பலாம்.
சிந்துவெளி மற்றும் மொசப்பொத்தேமிய நாகரிகங்களின் மூலகர்த்தாக்களான தொல் தமிழ்க் குடிகளும் சுமேரியரும் ஒருவரிலொருவர் பிணைப்புக்கொண்டவர்கள் என்பதோடு இவ்விரு நிலப்பரப்புகளும் நெருங்கிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்ததாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடும் நிலையில் அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் தன்மையில் இந்நூல் பலவிடயங்களை தொட்டுநிற்பது மிகுந்த கவனத்தை ஈர்ப்பதாகவே அமையும். சகல வளங்களும் கொண்டமைந்த சிந்துவெளிப்பிரதேசம் திட்டமிடப்பட்ட சதிகார ஆரியத்தின் கோரப்பிடியில் சிக்கி கி.மு 1600 வாக்கில் அழிவுநிலைக்கு தள்ளப்பட்டமை பொதுவான காலக்கணிப்பாக அமையும் தன்மையில் ஆசிரியர் இருக்கு வேதத்தின் கோட்பாடுகளை இங்கு முன்னிறுத்தும் போக்கில் அதற்கும் ஒரு காலக்கணிப்பினை வரையறை செய்வதை கூடவே நம்மால் காணமுடிகின்றது.
இந்நூலானது அணிந்துரையினையும் உள்ளடக்கி 406 பக்கங்களில் ஒருபரந்த நிலப்பரப்பைக்கொண்ட சிந்துவெளித் தொல்குடியினரான தமிழரது வளர்ச்சியுற்ற நாகரிகத்தையும் அதனுடனான வாழ்வியலையும் வெளிப்படுத்தும் தன்மையில் இதன் வியாபகம் மிகப் பரந்ததொன்றாகவே கொள்ளப்படும். பரராசசிங்கம் ஐயா அவர்கள் பல தலைசிறந்த அறிஞர்களது நூல்களில் கண்டறிந்தவற்றையும் மகாபாரதத்தில் சொல்லப்படும் வரலாற்று உண்மைகளையும் மிகமுக்கியமாக இருக்கு வேதத்தில் அவரது ஆழமான தேடல்களின் பிரதிபலிப்புகளையும் ஒருங்கிணைத்து இந்நூலினை வெளிக்கொணர்வது ஒரு போற்றுதலுக்குரிய பெருமுயற்சி என்பதோடு இந்நூலினை நாம் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டுமென்பதை நல்லறிஞர்கள் நிறைந்துள்ள இச்சபைமுன் வலியுறுத்துவது எனது கடமையாக அமைகின்றது. எனது மதிப்புக்குரிய தம்பி – கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் சிவகணேசன் அவர்கள் இந்நூலினை விரிவாக உங்கள்முன் பதிவுசெய்ய இருப்பதால் அதில் குறுக்கீடு செய்யாமல் - ஐயா அவர்கள் நோய்நொடியின்றி நூறாண்டுவாழ்ந்து தனது எழுத்துப்பணியை இன்னும்தொடரப் பிரார்த்திக்கின்றேன். என தனது வெளியீட்டுரையினை நிகழ்த்தியிருந்தார்.












