விசேட கட்டுரை -– பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சப்ததள இராஜ கோபுர கும்பாபிஷேகம்



(ரவிப்ரியா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொன்று தொட்டு கல்விக்கான பெரும் தளமாக பெயர்பெற்றதுதான் பெரியகல்லாறு என்னும் கிராமம். அரசியலிலும் ஒன்றல்ல இரண்டு பாராளமன்ற உறுப்பினர்களை உருவாக்கி தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்த்த கிராமம்.
 இந்து கிறிஸ்தவ தலங்கள் நிறைந்து காணப்படும் புண்ணிய பூமி. வடக்கு எல்லையை காட்டி நிற்கின்றது, புத்தம் புதிய பாலம். அந்த பாலத்திலிருந்து அதிகாலையில் சூரியன் உதிக்கும் காட்சியையும், அந்தி மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்; காட்சியையும் பார்வையிடும் ஒருவன் இதுவல்லோ கைலாயக் காட்சி என்று பரவசப் படவே செய்வான்.

அதனால்தானோ என்னவோ பிள்ளையாரும் தனக்கு பிடித்த இடம் இதுதான் என்று தனக்கொரு இடத்தை அடையாளப்படுத்தி ஒதுக்கிக் கொண்டார். ஒதுக்கிய அந்த இடத்தில் அவர் அருளால் ஓர்  ஏழடுக்கு இராஜகோபுரத்தையும் எடுப்பாக எழுந்தருளச் செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.     
     
இயற்கை வனப்பால் இதயத்தைத் தொடும் கிராமமாம் பெரியகல்லாறு,  மட்டு மாவட்டத்தின் தென்பகுதி எல்லைக் கிராமமாகவும்  திகழ்கின்றது. அம்பாரை மாவட்டத்திலிருந்து பிரதான வீதியூடாக வருவோருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை அடையாளப்படுத்தும் முதலாவது சப்ததள இராஜகோபுரமாக தமிழ்நாடு சிற்ப கலாநிதி என்.இராஜபோல் ஸ்தபதியால் அமைக்கப்பட்டு கலை அழகுமிளிர வர்ணமயமாக வண்டி விநாயகர் நாலாபறமும் காட்சி தர நிமிர்ந்து நிற்கின்றது.

வளைந்து வரும் மட்டு வாவி ஆலயத்தின் மேற்குப்பக்கம் அரணாக அமைய தென்னம் தோப்பும் வில்வ மரமும் அதற்கு மெருகூட்ட, ஆலயத்தின் எதிர்பக்கம் அரச, ஆல மரங்கள் விருட்சங்களாக நின்று பசுமை பரப்ப, சுனாமி தாங்கும் குளிர் ஓடையைக் கடந்து சவுக்கு தோப்பு சுனாமி அரணுடன் கடல் அலைகள் மோதி இன்னிசை எழுப்ப  அண்ணாந்து பார்க்கின்ற இராஜகோபுர அமைவிடம் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகால் புடம்போட்ட தங்கமென பிரகாசமாக,  புனித பிரதேசமாக புலப்படுகின்றது..

கடற்கரை தீர்த்தோற்சவங்களுக்கு வாய்ப்பாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் உள்ள முக்கிய ஆலயங்களில் அனேகமானவை இத்தகைய இயற்கை செழிப்புள்ள இடங்களிலேயே அமையப்பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. அதிஸ்டவசமாக தமிழ்நாடு காரைக்குடி சிற்ப கலாநிதி என் இராஜகோபால் ஸ்தபதியாக இருந்து இராஜகோபுரத்தை அமைத்துள்ளமையானது அற்புதமாக இருக்கின்றது. இந்திய ஆலயங்களின் அழகை இங்கே கொண்டுவந்திருக்கின்றது.

ஏறத்தாள ஏழு வருட அவரின் கடின உழைப்பை காணிக்கையாக்கி உயிர் கொண்ட சிற்பங்களாக உருவமைத்து, அவரின் தனித்துவமான திறமையால் எம்மை தரிசிக்க வைத்திருக்கின்றார்.
ஆலய முகப்பில் அவர் அமைத்த இலங்கையில் முதலாவது சிற்பமாக அமையும் 10 கரங்கள் கொண்ட துவாரபாலகர் (சிற்பமொன்றின); முன் எமது கமரா அவரை சிறைப்படுத்திக் கொண்டது. (படம் இணைக்கப்படுகின்றது) இந்தப் பிள்ளையாரின் அருள்தான் என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றது என அடக்கமாக கூறினார். அவரின் எளிமையும், பொறுமையும், கர்வமில்லாத சுபாவமும் அவரை இராஜகோபரம் போல் அண்ணாந்து பார்க்க வைக்கின்றது. 

ஆலய விழாக்களுக்கு ஆனைமுகனைக் காண வாடகை யானைகளும் வருகை தருவதும் தொன்று தொட்டு இடம்பெறும் சிறப்பு அம்சமாகும். ஏறத்தாள 600 அண்டுகள் பழமை வாய்ந்ததும் மக்கள் இக் கிராமத்தில் குடியேறிய காலத்திலேயே அமையப் பெற்தும் கிராமத்தின் முதலாவது ஆலயம் என்பதும் வரலாற்றுப் பதிவாக இருக்கின்றது.

இது வரலாற்று ரீதியாக இங்கிருந்து அசையவே மாட்டேன் என பிள்ளையார் அடம் பிடித்து அமர்ந்து கொண்ட புண்ணிய பிரதேசமாக பூர்வீக குடி மக்ககளால் அடையானப்படுத்தப்பட்டு வருகின்றது. கர்ணபரம்பரைக் கதை ஒன்று அதற்குச் சான்று பகிர்கின்றது.

இந்தக் காலம் முதல், அருணகிரிநாதர் வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்து, பாதயாத்திரையாக கதிர்காம கந்தனை தரிசிக்கச் செல்லும், யாழ்ப்பாணம். திருகோணமலை. மட்டகளப்பு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இடைத்தங்கலாக இந்தக் கிராமத்தில் தங்கிச் செல்வது வழக்கம்.
நீர் வசதியும் அடர்ந்த காட்டின் நிழல் வசதியும், மத்தியில் சிறு வெளியும் கொண்ட  பழக்கப்பட்ட பிரதேசம் என்பதால், ஒருநாள் தங்கிச் செல்வது அவர்களுக்கு சௌகரியமாக இருந்து வந்தது..
அன்றும் அப்படித்தான் ஒரு பக்தர் கூட்டம் தங்கி ஓய்வெடுத்தது. வழக்கம்போல காவலுக்கு சிறிய கணபதி சிலையை ஒரு மரத்தின் கீழ் வைத்து வணங்கிவிட்டு கண்ணுறங்கினார்கள்.
காலையில் விழித்து பயணத்தை தொடர ஆயத்தமானார்கள். பிள்ளையாரை வணங்கிவிட்டு, அச் சிறிய சிலையை மீண்டும் தங்களோடு கொண்டு செல்ல எடுக்க முயன்ற போதுதான் அந்த அற்புதம் நடைபெற்றது.

சிறிய சிலைதான். ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அசைக்கவும் முடியவில்லை. இருந்த இடத்தில் இருந்து இம்மியளவும் அசையாமல் மனித பலத்திற்கு சவால் விடும் அற்புத சக்தி கொண்டதாக அந்த சிலை அப்படியே இருந்தது.
முயற்சியில் தோல்வி கண்ட அவர்கள் அதை ஒரு அற்புதச் செயலாகவே எண்ணி, மெய்சிலிர்க்க அரோகரா கோஷத்தை எழுப்பி பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
செல்லும் வழியில் எதிர்ப்பட்டவர்களிடம் இந்த அற்புதத்தை கூறிச் சென்றார்கள். இந்த விடயம் ஊர் முழுக்கப் பரவியது. அசையாதிருக்கம் ஆனை முகனைப்;பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். பிள்ளையார் கடாட்சம் ஊருக்கு கிடைத்துவிட்டதென பேரின்பம் கொண்டார்கள்.

அருகில் உள்ள காட்டு மரங்களை வெட்டிவந்து பந்தல் அமைத்து பிள்ளையார் என பெயரும் வைத்து அவரை வழிபட்டு பூஜித்து வந்தார்கள். அவரின் அருளினால் அக மகிழ்ந்தார்கள்.
பிள்ளையாரின் அருளினால், ஆலயம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்கள். பாரிய மர தூண்கள் கொண்ட கூரையுடன் கூடிய மடாலயத்தையே முதலில் அமைத்தார்கள். அதுவே கிராமத்தின் முதலாவது ஆலயமாகவும் அமைந்தது.
அவர் அருளினால் வயப்பட்ட பக்தர்கள் அவருக்கு 1960ல் மார்க்கண்டு வண்ணக்கர் காலத்தில்; அழகான, வசதியான திரிதள ஆலயத்தை அமைத்தார்கள். சர்வமும் அவருக்குள் அடக்கம். அவரே அனைத்திலும் சித்தி தருபவர் என்ற நம்பிக்கையோடு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்  என சிறப்பு பெயரிட்டு வணங்கி வந்தனர்.   
மிகவும் கோலாகலமாக மஹா கும்பாஷேகம் சுவாமி வஸ்வநாத குருக்களால் மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகளுடன். யானைகளும் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமான முறையில் விழா நடந்தேறியது.
1994ல் கொடி தம்பத்துடன் கூடிய ஆலயமாக பேராலயமாக வளர்ச்சி பெற்றது. கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

கிராமத்தை அண்டிய மக்களுக்கு அருள்பாலித்து சித்திகளைப் பெற்றுக் கொடுக்கும் விநாயகப் பெருமானை மேலும் பெருமைப்படுத்த மக்கள் நிதி வழங்க. சப்த கலச நூதன இராஜ கோபுரம் அமைக்க, 2011 நடுப்பகுதியில் கல் வைக்கப்பட்டது.
இராஜகோபுரம் அமைப்பு வேலைகளுக்காக பழைய ஆலயத்தின் முகப்பு பகுதி அகற்றும் போது ஆலயத்தின் விநாயகர் சிலை சுமார் 40 அடி உயரத்தில் இருந்து வீதியில் விழுந்தபோது அது சிதைவேதுமின்றி அப்படியே இருந்தது ஆச்சரியத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியது. அது விநாயகரின் அற்புதமாகமே இருந்தது.

எவ்வாறு சின்னஞ் சிறு சிலை அசையாது இருந்ததோ அதேபோல் அதைவிட பெரிய சிலையும் சிதையாது இருந்தது, இது அடிப்படையில் விநாயகரின் சக்தியை நிரூபித்து நிற்கின்றது.
விநாயகர் இந்த கிராமத்தை ஆட்கொண்டுவிட்டார் என்பதற்கு சான்றாக  சிதையாத சிலை மூலஸ்தானத்திற்கு பின் புற மதில் சுவரில்; விசேட பீடத்திலிருந்து முப் பொழுதும் நேரடி தரிசனத்துடன்; முழுமையாக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.       
கொஞ்சம், கொஞ்சமாக மக்கள் நிதி சொரிய கால அவகாசமெடுத்து இன்று இராஜகோபுரம் நேர்த்தியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டு நிமிர்ந்து நிற்கின்றது.

இதற்கான உத்தமயாக நவகுண்ட பகஷ அஸடபந்தன புனாராவர்த்தன சம்ததள இராகம்பீர அஷ;டோத்திர சமதான சப்த கலச நூதன இராஜகோபுர பெரும் சாந்தி வைபவ திருமுகம் இம்மாதம்  முதலாம் திகதி கர்மாரம்பத்துடன். 5, 6ந்திகதி பக்தர்களின் எண்ணெய்காப்புடன் எதிர்வரும் 7ந் திகதி புதன் கிழமை கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 30 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று, 08.03.2018 சங்காபிஷேகம் நடைபெறும்.

அத்துடன் இவ்வாலயத்திற்கு தேருக்கான பஞ்சமுக கணபதி ஒருவரும் புதிதாக எழுந்தருளியுள்ளது. அத்துடன் வருடாந்த பங்குனி திருவிழாவின் போது புத்தம் புதிய தேர் ஒன்றும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்து அம்சமும் பொருந்திய இந்த முழுமை பெற்ற ஆனைமுகன் ஆலயத்தின்; அருள் நம்பிவருவோருக்கு நன்மையே தருமென்பது உறுதி.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனி இரவு கலசங்கள், பஞ்சமுக பிள்ளையார், தெருபிள்ளையார் ஆகியவை ஊர்வலமாக எடுத்துவரப்படடன.