தமிழர்களின் தன்மானம் காக்கும் பிரதிநிதிகளை தேர்தல் காலங்களில் பார்க்கும் அவலநிலை: யாரோ யார் இவரோ.


பசுத்தோல் போர்த்திய நரிகளின் களமாகவே கிழக்குப் பிராந்திய தமிழர் அரசியல் களம் கண்டுகொண்டிருக்கின்றது. பொய் சொல்லி, புறம் சொல்லும் நாவிளந்த கயவர்களின் வீராவேசத்திற்கான யுத்த களத்தைத்தான் நாம் இன்று கண்டு கொண்டிருக்கின்றோம்.

ஆகா! வந்திட்டாங்கய்யா வந்திட்டாங்க.



வடிவேல் பாணியில் நம் தலைவர்களை, நம் ஏக பிரதிநிதிகளை பார்க்கவேண்டிய, அவர்களின் வார்த்தைகளை கேட்கவேண்டிய துர்பாக்கிய நிலைதான் தமிழினத்தின் தலைவிதி. 

ஆக, சுயநலனை தன்நலனை தன் குடும்ப நலனை பிரதானப்படுத்தியே அநேகமான அரசியல் தலைமைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இங்கு நான் கூறுவது கட்சிபேதமற்ற கருத்து. 

அபிவிருத்தி அரசியல் எனும் கருப்பொருளில் ஒரு சாரார், உரிமை நிலை அரசியலில் இன்னுமொரு சாரார், பிரதேசவாத கருத்தியலில் மற்றுமொரு சாரார், கலப்பு முறை கருத்துகளோடு இன்னோரன்னர். ஆக, உண்மையில் சந்தர்ப்பவாத குள்ளநரி அரசியலில்தான் எம்மவர் அரசியல். என் செய்வேன் பராபரமே! 

மடையன் மடையனைப் பார்த்து மடையன் என்கிறான். கள்ளன் கள்ளனைப் பார்த்து கள்ளன் என்கிறான்.
முடவன் முடவனைப் பார்த்து முடவன் என்கிறான்.

ஆக, கள்ளனே அனைத்துமாய் ஆகிறான்.

இதுதான் எம்மவர் சீத்துவமோ என் செய்வேன்,

சென்ற வருடம்தான் சிங்கக்கொடியுடன் நிற்கின்றான்- அது தேர்தல் காலமில்லை,

இந்த வருடம்தான் கொடிபிடிக்க முடியாதென்கின்றான் இது தேர்தல்காலம்.

அபிவிருத்திக்கல்ல உரிமைக்கே முன்னுரிமை என்கிறான். 
அது ஒதுக்கப்பட்டதும் உரிமையுடன் சேர்ந்த அபிவிருத்தி என வியாக்கியானம் வேற கொடுக்கின்றான்.

நம்மவர் எல்லாம் அப்படியோ! அப்படியேதான் என்செய்வது!!!!.

ஒதுக்கப்பட்டதில் றோட்டுப்போட்டதாக பத்திரிகைச் செய்தி வேற கொடுக்கிறான். றோட்டில் சில கல்கொட்டி மண்தூவப்பட்டுள்ளது. அதுதான் அவனுக்கு றோட்டோ! என்செய்வேன் என்செய்வேன்.

நமக்கு யாரும் துணையில்லை. அவனவன் சுயநலனும் தன்னலனுமே அரசியலின் அர்த்தம்.

இதையும் பார்ப்பான் படிப்பான். மனச்சாட்சி உறுத்துவதை அறிவான். ஆனாலும் மீண்டும் முருங்கை மரம் ஏறுவான் வேதாளமாய். ஓகோ!

அறிவாய்! தெளிவாய்! 

ஞானதேசிகன்