நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பல்வேறுபட்ட அலைகளை நாட்டில் ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கத்தை தேர்தல் முடிவுகள் குழப்பங்களுக்கு உள்ளாக்கியுள்ளமை அவரின் அறிக்கைகள் மூலமாக தெளிவாக விளங்குகின்றது.
அறிக்கை விடுவதிலும் கொள்கையடிப்படையிலும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி குழம்பிப் போய் இருப்பின் மக்கள் தெளிவான கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் பக்கம் மாறுவது யதார்தம் என்பதை சம்பந்தப்பட்டோர் அறிந்து தெளிவது நல்லது.
பல்வேறுபட்ட எச்சரிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டபோதும் அதனை செவிமடுக்காமல் விட்டதும் த.தே.கூட்டமைப்பிற்கு பாரிய பின்னடைவைத் தந்தமை அவதானிக்கப்படவேண்டிய விடயம்.
பொதுச் செயலாளரின் பல்வேறுபட்ட அறிக்கைகள் மக்களுக்கு ஆத்திரமூட்டுபவையாகவே அமைந்துள்ளன என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். மேற்கத்தேய அரசியல் நாகரீகத்தின்படி நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே குழப்பங்கள் தெளிவடையாவிட்டால் மக்களும் தெளிவுள்ளவர்களை தங்களின் பிரதிநிதிகளாக்க முயல்வார்கள். அறிந்துகொள்ளுங்கள் அரசியல்வாதிகளே! மக்களின் வாக்கினால்தான் உங்களுக்கு மாதாந்த சம்பளம் மற்றும் சலுகைகள். அதாவது மக்களின் தொண்டர்களே நீங்கள். மக்களின் கருத்துக்களைக் கேளுங்கள் மக்களுக்காக வேலை செய்யுங்கள். வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுங்கள்.
இல்லாவிடில் மாற்றத்தை மக்களே தீர்மானிப்பர். ஏனெனில் மக்கள் குழம்பவில்லை.
அகழங்கன்













