கிழக்கில் ஓன்றுபட மறுக்கும் தமிழ் தரப்புக்களை மக்கள் நிராகரிப்பார்கள், கிழக்கு தமிழர் ஒன்றியம்


பாமர மக்கள் தொடக்கம் புத்தியீவிகள் வரை கிழக்கில் அனைத்து தமிழ் அரசியல் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ள இக்காலகட்டத்தில் ஒன்றிணைய மறுக்கும் தமிழ் தரப்பினரை மக்கள் நிராகரிப்பார்கள், அதற்கான வேலைத் திட்டத்தினையே நாம் முன்னெடுத்து வருகின்றோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், எமது அரசியல் வரலாற்றிலே இவ்வாறாக தமிழ் தரப்புக்கள் ஒன்றுபடவேண்டியதன் அவசியம் 1976 மற்றும் 2001 ஆகிய காலப்பகுதிகளிலும் எமது முன்னைய தலைவர்களால் வலியுறுத்தப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு அவசியம் தற்போது 2018 இலும் அனைவராலும் உணரப்பட்டதன் நிமிர்த்தமே நாம் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். இதன்போது நாம் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையால்களை நடாத்தியும் உள்ளோம். முக்கிய தமிழ்தரப்பினர் இதற்கு இன்னமும் பதிலளிக்காதுள்ளமை கவலைக்குரியதாகும். இது தொடர்பாக சிலர் எம்மிடம் கேட்கும் கேள்வி கிழக்கில் அனைத்து தமிழ் தரப்பினரையும் உங்களால் ஒன்றிணைக்க முடியுமா என்பதாகும். நாம் தற்போது முன்னெடுத்துவருகின்ற வேலைத்திட்டமானது தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்தல் என்பதற்கு அப்பால் கிழக்கில் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பதாகும். தேர்தலின் போது ஓன்றிணைய மறுக்கும் தரப்பினரை மக்கள் நிராகரித்து, ஒன்றிணைந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள். இதற்காகவே நாம் மக்களை தயார்ப்படுத்திவருகின்றோம். இதற்காக கிராமம், பிரதேசம், மாவட்டம் என நிருவாக கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம். கிராம மட்டத்திலான வேலைத் திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன. மக்கள் ஒன்றுபடுகின்றபோது தலைவர்கள் தானாக ஒன்றுபடுவார்கள் என நாம் நம்புகின்றோம். எனவே அனைத்து தமிழ் தரப்புக்களும்; கட்சிபேதம் பாராது மக்களின் நலன்கருதி ஒன்றுபடவேண்டும். எனக் குறிப்பிட்டார்.

 இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்வேறு தரத்திலுமான ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தமை இந்த ஒன்றிணைவு என்பதன் அவசியம் அனைவராலும் தற்போது உணரப்பட்டிருப்பதையே வலியுறுத்துவதாக உள்ளது.