(ரவிப்ரியா)குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் சனியன்று (03) கலைவாணி மகா வித்தியாலயத்தில் கே.ஞானரெத்தினம் தலைமையில் விருதளிப்பு விழாவொன்றை பிரமாண்டமான முறையில் சிறந்த ஒழுங்கமைப்புடன் நடாத்தியது.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் இத்தகைய பாராட்டு விழாவை நடாத்தியவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே என்பதை தனது உரையில் பல தடவை அழுத்திக் குறிப்பிட்டதுடன் மையத்தின் தலைவருக்கு. பலத்த கரகோசத்தின் மத்தியில் தானக முன்வந்து முன் அனுமதி பெற்று பொன்னாடை போர்த்தியது விழாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது.
ஒரு நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு தலைமைத்துவத்தின் ஆற்றல் அர்ப்பணிப்பு தியாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திகழ்கின்றார் ஞானரெத்தினம் என்பதை ஏனைய அதிதிகளும் தங்கள் உரைகளில் அடையாளப்படுத்தத் தவறவில்லை.
எனவே எங்கே தலைமைத்துவம் சிறப்பாக இருக்கின்றதோ அங்கே நல்லதுதான் நடக்கவே செய்யும். அதற்கு இந்த சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமையும் அங்கத்தவாகளும்; சான்று பகிர்கின்றார்கள்.
அத்துடன் சரித்திரப் பிரசித்திபெற்ற கிராமமான குருக்கள்மடம், கல்விமான்கள், கலைஞர்கள், நிறைந்த நிறைவான கிராமமாகும். கலைகலாசார விழுமியங்களையும் இன மொழிப் பற்றையும் பன்னெடுங்காலமாக பற்றிக் கொண்டிருக்கும் பண்பான மக்களைக் கொண்ட கிராமமாகும். சமூகப் பணிக்கும் முக்கியத்துவம் அளிக்கின்ற ஆலயங்கள் அமையப் பெற்ற கிராமுமாகும்.
எனவே அந்தக் கிராமத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் பெருவிழாவாக விருதளிப்பு நிகழ்வு இடம் பெற்றது. தமிழ் மக்களின் கல்வி நிலை பின்னோக்கிய நிலையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் அதை முன்நோக்கி நகர்த்தும் முக்கிய பணிகளில் ஒன்றாக இவ்விழா இடம் பெற்றுள்ளது.
பொருத்தமான வரவேற்பு நடனங்கள் கலை விருந்தாக அமைந்தன. அளவான அறிவிப்பு நிகழ்வுகளை நேர்த்தியாக வழி நடாத்திச் சென்றது. பரிசளிப்புகளும் தாமதமின்றி சிறந்த தயார்படுத்தல் மூலம் செவ்வனே நடைபெற்றது.
இந் நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், சாதாரணதர பரீட்சையில் 9ஏ பெற்ற மாணவர்கள் , பல்கலைக்கழக பிரவேசம் கிடைத்த மாணவர்கள்,மற்றும் இணைப்பாட விதானங்களில் தேசிய ரீதியில் சாதனை படைத்தவாகள் என 90க்கு மேற்பட்ட மாணவர்கள் கௌரவம் பெற்றனர்.
இவர்களுக்கான நினைவுச் சின்னங்களை, பிரதம அதிதியும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான எம்.கே.பேரின்பராஜா, பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், திறைசேரி மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் ஆகியோர் வழங்கி வைத்தனர். அதிதிகளின் கரங்களால் மட்டும்; நினைவுப் பரிசகள் வழங்கிவைத்தமை சிறந்த திட்டமிடலாகவும் மாணவர்களுக்கு மன நிறைவையும் அளித்ததாகவும் அமைந்தது.
இந் நிகழ்வின் உச்சமாக விசேடமாக சமூக மட்டத்தில் உயர்நிலை வகிக்கும் மூவர் விசேடமாக பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கிரீடம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதி குறிப்பிட்டதுபோல் நம்மிடம் வாழும்போதே பாராட்டுகின்ற அல்லது வாழ்த்துகின்ற மனநிலை அருகி வருவது குறித்தான ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் ஆதங்கத்திற்கு ஆவன செய்வதுபோல் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
அந்த வரிசையில் புகழ்பெற்ற விசேட வைத்திய நிபுணரும். மட்டக்களப்பு நகரில மட்டுமல்ல கிழக்கில் முதற்தர தனியார் வைத்திய சாலையை (ஜிவி வைத்தியசாலை என்ற பெயரில்) நடாத்திவருபவருமான டாக்டர் விவேகானந்தராஜா முதலாவது கௌரவத்தை பிரதம அதிதி வழங்கி வைத்தார்.
கணிதத்துறையில் கிழக்கின் கலங்கரைவிளக்காக கிழக்கு பல்கலைக் கழகத்தின் முதலாவது துறைசார் பேராசிரியராக பெரும் பணியாற்றுகின்ற பேறு பெற்ற எஸ்.திருக்கணேஸ் இரண்டாவதாக கௌரவம் பெற்றார்.
மூன்றாவதாக தேசகீர்த்திகலாபூசணம். குருக்கள் மடத்தின் வரலாற்றை நூலுருவில் வடித்து அவருக்கென்று ஒரு வரலாற்றைப் பதிவு செய்து கொண்ட நூலாசிரியரும், மொழி ஆற்றலும்சிறந்த பேச்சாளரும், சமூக சேவையாளரும் தமிழ் தேசியத்தின் தீவிர பற்றாளருமான மா. திருநாவுக்கரசு கௌரவம் பெற்றார்.
மூத்த இரு முக்கிய பிரஜைகளுடன், கல்விப் புலத்தில் கணிதப் பேராசிரியராக உயர்நிலை பெற்ற இளைஞர் ஒருவரையும் இணைத்துக் கொண்டமை தெரிவுக்கான சிறந்த தெளிவாக அமைந்திருக்கின்றது.
அத்துடன் ஆத்மீகத் துறையில் கெ.வடிவேல், ஊடகத்துறையில் பி.லோசிதரன், இளம் விஞ்ஞானியாக பல கண்டு பிடிப்புக்கள் முலம் இலங்கையில் மட்டமல்ல உலக அரங்கிலும் அங்கீகாரம் பெற்றுள்ள எஸ்.வினோஜ்குமாரை மாவட்டம் கடந்து இனம் கண்டு இந்த மையம் கண்டுபிடித்து தங்கள் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தது நிகழ்வின் தரத்திற்கு மெலும் வலுவூட்டுவதாக அமைந்தது.
மேற்குறித்த கௌரவங்கள் குறித்தும் பிரதம அதிதி தனதுரையில் கோடிட்டுக் காட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்விற்கான அனைத்து மாலைகளையும் அன்பளிப்பாக வழங்கிய வடிவேலை ஆத்மீக அதியாக அடையாளப்படுத்தி மேடையேற்றி பொன்னாடை போர்த்தி விருதும் வழங்கி கௌரவித்தமையானது ஒரு முன்மாதிரியான நன்றி செலுத்தம் நிகழ்வென பாராட்டினார்.
அடுத்து இளம் விஞ்ஞானியான திருக்கணேஸ் பற்றி குறிப்பிடுகையில் நாம் அவரை இனி அமெரிக்காவிலோ, சோவியத் றஸ்சியாவிலோதான் காணமுடியும் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அத்தகைய திறமை அவரிடம் நிறைந்திருக்கின்றது என பெருமையுடன் உறுதிப்படுத்தினார்..
அத்தகைய ஒரு இளம் திறமைசாலியை திறமைமிக்க மாணவர்கள் பெருமளவில் கூடியிருந்த மண்டபத்தில் அறிமுகப்படுத்தி பாராட்டியமையானது அமைப்புக்குழுவின் செயற்பாடு உண்மையில் பெறுமதிமிக்கது. அவர்களின் சிந்தனை விரிவாக்கத்திற்கு நிச்சயம் வித்திட்டுள்ளது என்றால் மிகையாகாது.
மொத்தத்தில் நிறைவான நன்கு திட்டமிட்ட நிகழ்வு இது. மாணவர்களை கௌரவிப்பதென்பது இன்று பரவலாக நடைபெறவே செய்கின்றது. ஒரே சாதனைக்காக மாணவர்கள் பல்வேறு இடங்களில் கௌரவிப்பது எந்தளவில் தாக்கத்தைச் செலுத்தும் என்பது வினாவிற்குரியது. ஏல்லா அமைப்புக்களும் ஆள்மாறி ஆள் இதையே செய்கின்றன. ஒருவருக்கு ஒரே சாதனைக்காக வழங்கும் விருதுகள் அவருக்கான எண்ணிக்கையைக் கூட்டுமே தவிர விளைவுகளை மேம்படுத்துமா என்பதும் சந்தேகத்திற்கரியதாகவே இருக்கின்றது.
ஒரு நிகழ்வ முதற் தடவையாக நடக்கும் போது ஏற்படும் தாக்கம் அடுத்தடுத்து அதே நிகழ்வுகள் நடைபெறம்பொது எதிர்பார்க்கும் தூண்டுதல்களை ஏற்படுத்துமா? என்பதும் சிந்தனைக்குரியது.
அத்துடன் இதற்காக மாணவர்கள் மட்டுமல்ல அமைப்புக் குழுக்களும் அர்ப்பணிக்கும் நேரம், நிதி என்பனவற்றை இதைவிட பயனுள்ள வகையில் எவ்வாறு பணன்படுத்தலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டிய காலம் இது.
எமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கல்வித்தேவைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. பரீட்சையில் தவறும் மாணவர்கள் பக்கமும் பார்வையைச் செலத்த வேண்டிய அவசியமும் தவிர்க்க முயாதது. அவர்களையும் கரைசேர்க்க வேண்டிய கடப்பாடும கட்டாயமும்; எமக்கு இருக்கின்றது.. எனவே சமூக அமைப்புக்கள் விருதளிப்போடு மட்டும் பெருமை கொள்ளாது மேற்குறித்த அடிப்படை விடயங்கள் பற்றியும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதே இன்றைய கல்விப் புலத்தில் இன்றியமையாததாக இருக்கின்றது.
அத்துடன் ஒரு மாணவன் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் அவனால் ஆசிரியர்களின் வழிகாட்டல் இன்றி இலக்கை சுயமாக அடைந்துவிட முடியாது. எனவே ஆசிரியர்களின் பணி பாராட்டப்பட வேண்டியது. எனவே சாதனைக்கு பின்னால் இருந்து அர்ப்பணிப்படன் கடமை உணர்ந்து செயற்பட்ட அசிரியர்களையும் மாணவர்களோடு சேர்த்து கௌரவிப்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
இன்று ஒழுக்க நெறிகள் சீரழிந்து வருகின்றன இதைச் சீராக்க அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு அவசியமாகின்றது. ஆனால் அத்தகைய பாடசாலையில் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்துடனோ அல்லது ஊதிபமேதுமின்றியோ சேவை நோக்கோடு செயற்படுகின்றார்கள். எனவே கலை கலாசார மத விழுமியங்களை கட்டிக்காக்கும் அடித்தளத்தை இடும் இவர்களை பொது அமைப்புக்கள் மறந்துவிடலாகாது.
சுமூக மேம்பாட்டு மையங்கள் வழக்கமான திட்டமிடலின் மூலம் செயற்பாடுகளை தொடர்ந்து செய்யாமல் காலத்தின் கல்வி தேவை உணர்ந்து வித்தியாசமான உச்ச பயன்தர கூடிய திட்டங்களை உருவாக்கி, தங்களுக்குள் வெவ்வேறு பொதுவான திட்டங்களை பகிர்ந்து கொண்டு செயற்படுத்த வேண்டுமென்பதே இன்றைய சமூகத்தின் தேவையும் எதிர்பார்ப்புமாகும்.





























