கிரான் வாகனேரியில் மருத்துவ சுகாதார நிலைய அடிக்கல் நடல்

(ஜெ.ஜெய்ஷிகன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரதேசத்தில் மருத்துவ சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.



இலங்கை அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தலைவரும், இருதய சத்திரசிகிச்சை நிபுணருமான வைத்தியர் எஸ்.லிமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.



மேலும் அதிதிகளாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் எஸ்.வசந்தராஜா, அகிம்சா சமூக நிறுவனத்தின் உப தலைவர் எஸ்.ராஜமோகன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதி எஸ்.சோமசுந்தரம், கிரான் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.சின்னராசா, வாகனேரி கோகுலம் வித்தியாலய அதிபர் எஸ்.சுரேந்திரகுமார், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



இலங்கை அகிம்சா சமூக நிறுவனமும், தமிழ் நோர்வே வள ஒன்றியமும் இணைந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியில் 2380 சதுர அடியை கொண்ட இரண்டு மாடி கட்டடமாக மருத்துவ சுகாதார நிலையம் அமையப்பெறவுள்ளது.



வாகனேரி பிரதேசத்தில் இரண்டாயிரத்து மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சுகாதார தேவையானது அவசியமாக காணப்படுகின்றது. அந்த வகையில் மாதம் ஒரு முறை மாத்திரம் சுகாதார மருத்துவ சேவைகள் இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றது.



அத்தோடு இங்குள்ள மக்கள் திடீர் மருத்துவ வசதிகளை பெறுவதாயின் வாழைச்சேனை மற்றும் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்பட்டு வந்துள்ளமையால் இங்கு இலங்கை அகிம்சா சமூக நிறுவனம் மற்றும் தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் உதவியுடன் மருத்துவ சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் எஸ்.வசந்தராஜா தெரிவித்தார்.



அத்துடன் வாகனேரி பிரதேச மக்களின் நலனின் அக்கறை கொண்டு முதலுதவிப் பயிற்சி பெற்ற குழு ஒன்றை இங்கு நியமிக்கவுள்ளதுடன், வெகுவிரைவில் அம்புலன்ஸ் சேவையும் ஏற்படுத்தப்படும் எனவும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் மூலம் வைத்திய சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.